பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சீனாவின் சட்டவிரோதமான நடவடிக்கைகள் அதிகரிப்பு… விபரம்:-

Read Time:6 Minute, 58 Second

இந்தியாவை எதிர்ப்பதற்கு சரியான கூட்டாளி சீனாவாகத்தான் இருக்கும் என அந்நாட்டின் பாதம் விழுந்து கிடக்கிறது பாகிஸ்தான்.

இந்தியாவிற்கு எதிரான நடவடிக்கை என்ற ஒற்றை செயலில் சீனாவின் வலைப்பின்னலுக்குள் வசமாக சிக்கியிருக்கிறது. விரைவில், அதனுடைய விளைவுகளையும் பாகிஸ்தான் சந்திக்கும் என்பதில் ஐயமில்லை. இது ஒருபுறம் இருக்க பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் சீனா தனது கால்களை அகலமாக பதிப்பதற்கு பாகிஸ்தான் வழிவகை செய்து வருகிறது.

இப்போது ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் அணைகளை கட்டும் பணிகளுக்கு சீனா பாகிஸ்தானுக்கு நிதியுதவி அளித்து கட்டமைக்கிறது.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் கில்கிட்-பாலுடிஸ்தான் பிராந்தியத்தில் உள்ள டயமர் பாஷா அணை (இப்போது அதிகாரப்பூர்வமாக லடாக் யூனியன் பிரதேசத்தின் ஒரு பகுதியாகும்) கட்டுவதற்கு இந்தியா ஆட்சேபனையை தெரிவித்து இருக்கிறது. பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் புதன்கிழமை இத்திட்டத்தை தொடங்கியிருக்கிறார். இந்த திட்டத்திற்கு சீனா நிதியுதவி அளிக்கிறது.

இந்த ஆண்டு மே மாதத்திலிருந்து பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அணைக்கட்ட சீனா நிதி வழங்கிய மூன்றாவது பெரிய அணை திட்டம் இதுவாகும். லடாக் எல்லையில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான ராணுவ மோதல்கள் தொடங்கிய சமயத்தில் இந்நகர்வு ஏற்பட்டு இருக்கிறது. மற்ற இரண்டு அணை திட்டங்கள் ஆசாத் பட்டன் மற்றும் கோஹலா திட்டம் ஆகும். இந்த அணைகள் ஜீலம் நதி படுகையில் மேற்கொள்ளப்படுகிறது. அங்கு ஒட்டுமொத்தமாக சீனா ஐந்து அணைகளை உருவாக்கி வருகிறது. ஜீலம் நதியில் மட்டும் 3 அணைகளை கட்டுகிறது.

இதில் டயமர் பாஷா அணையானது சிந்து நதியில் கட்டமைக்கப்படுகிறது. இந்த அணைகள் சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடம் (சிபிஇசி) திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படுகிறது. ஆக்கிரமிப்பு காஷ்மீரில் வழியாக முன்னெடுக்கப்படும் இத்திட்டத்திற்கு இந்தியா கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சீனாவின் அத்துமீறிய செயல்பாடு இந்தியாவின் இறையாண்மையை முற்றிலும் மீறுவதாகவும், ஜம்மு-காஷ்மீர் தொடர்பான ஐ.நா. தீர்மானங்களையும் மீறும் செயலாகிறது. ஐ.நா. தீர்மானங்கள் எதுவும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரானது பாகிஸ்தானை சேர்ந்தவை என்று கூறவில்லை.

ஆயினும்கூட, பாகிஸ்தானும் சீனாவும் இருதரப்பும் தங்களுக்கு சொந்தமில்லாத நிலத்தில் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு உள்ளன. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சீனாவின் தலையீட்டை மேலும் ஆழமாக ஈடுபடுத்துவதன் மூலம், இந்தியா அப்பகுதியை திரும்பப் பெறும் எந்தவொரு நடவடிக்கைக்கும் தடையை ஏற்படுத்தலாம் என பாகிஸ்தான் நினைக்கிறது. இந்தியாவை சமாளிக்க ஒரு சக்தியாக சீனா இருக்கும் என்பதை உறுதி செய்ய மட்டுமே பாகிஸ்தான் முயற்சிக்கிறது.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் சீனாவின் தலையீடு விஸ்தரிக்கப்படுவதை அப்பகுதி மக்கள் துளியும் விரும்பவில்லை. நீலம், ஜீலம் நதிகளில் கட்டப்படும் அணை திட்டங்கள் மற்றும் நீர் மின்நிலையை திட்டங்களையும் அப்பகுதி மக்கள் எதிர்த்து ஆறுகளை காப்பாற்ற வேண்டும் என்ற கோரிக்கையுடன் போராட்டங்களை நடத்தியிருக்கின்றன. ஜீலம் நதியின் நீரை திசை திருப்புவதற்காக நீலம்-ஜீலம் திட்டம் நீலம் நதியில் கட்டப்பட்டு வருகிறது.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அணை கட்டுவதற்கான பெரும்பாலான ஒப்பந்தங்களில் பாகிஸ்தான் அரசு, சீன அரசு மற்றும் ஒரு சீன நிறுவனம் என மூன்று தரப்புக்கள் உள்ளன. இதில் நீர் மின்நிலைய திட்டங்களும் அடங்கும். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சீனாவின் நடமாட்டம் அதிகரிப்பு புதியதல்ல. ஆனால், இந்தியா வலுவான எதிர்ப்புக்களையும் மீறி இது சமீபத்திய ஆண்டுகளில் மீண்டும் அதிகரித்து உள்ளது.

திபெத் விவகாரத்தில் தலையிடுவதாகக்கூறி 1962-ல் இந்தியாமீது போர் தொடுத்து, அக்சாய் சின் பகுதியை தனது முழுக்கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிட்டது. இந்திய சுதந்திரச் சட்டப்படி போரினால் பிடிக்கப்பட்ட சீனாவின் அக்சாய் சின் ஆக்கிரமிப்பு சட்டவிரோதமானது. 1962 போரை தொடர்ந்து, எல்லை தீர்வு என்ற பெயரில் ஷாக்ஸ்காம் பள்ளத்தாக்கை தன்னிடம் ஒப்படைக்குமாறு சீனா பாகிஸ்தானை கட்டாயப்படுத்தியது. அமைதியை ஏற்படுத்துவதாக கூறி பள்ளத்தாக்கை பாகிஸ்தான் ‘பரிசளித்தது’, இதன் மூலம் சீனா இப்பகுதியில் காலடி வைத்தது. இதனையடுத்தும் பாகிஸ்தானின் துரோகம் அரங்கேறிவருகிறது. சீனா, அந்நாட்டையே உளவு பார்க்கிறது என சமீபத்தில் தொடர்ச்சியாக செய்திகள் வெளியாகி வருகிறது.

லடாக்கில் இந்தியா – சீனா மோதலுக்கு மத்தியில் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சீன விமானப்படை விமானங்களும் பறந்து உள்ளன என்ற தகவலும் வெளியாகியிருக்கிறது. இந்தியாவின் ஒருபகுதியான ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீண்டும் திரும்ப பெற்றுவிடக்கூடாது என அப்பகுதியை இருநாடுகளும் சேர்ந்து துண்டாடி வருகின்றன என்பது மட்டுமே தெளிவாகுகிறது.