ரஷ்யா.. கொரோனா வைரஸ் தடுப்பூசி பார்முலாவை ஹேக் செய்து திருட முயற்சி செய்கிறது எனக் குற்றச்சாட்டு

Read Time:4 Minute, 52 Second

ரஷ்யா கொரோனா வைரஸ் தடுப்பூசி மருந்துக்கான பார்முலாவை ஹேக் செய்து திருடுவதற்கு முயற்சி செய்கிறது என்ற குற்றச்சாட்டை அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் கனடா முன்வைத்து இருக்கிறது.

உலக நாடுகள் அனைத்தும் கொரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. ஒவ்வொரு நாடுகளிலும் மருந்து கண்டுபிடிக்கும் விதிமுறையானது மாறுபடுகிறது. ரஷியாவிலும் கொரோனா வைரஸ் தடுப்பூசி மருந்துகள் தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கொரோனா வைரஸ் நோய்க்கு (கோவிட் -19) எதிரான உலகின் முதல் தடுப்பூசியின் மருத்துவ பரிசோதனைகள் வெற்றிகரமாக முடிந்ததாக Sechenov First Moscow State Medical University என்ற ரஷ்ய பல்கலைக்கழகம் கூறியிருக்கிறது. இந்நிலையில் ரஷ்யா கொரோனா வைரஸ் தடுப்பூசி மருந்துக்கான பார்முலாவை ஹேக் செய்து திருடுவதற்கு முயற்சி செய்கிறது என்ற குற்றச்சாட்டை அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் கனடா முன்வைத்து இருக்கிறது.

ஏபிடி 29 (APT29) ஹேக்கிங் குழு கல்வி மற்றும் மருந்து ஆராய்ச்சி நிறுவனங்களின் தகவல்களை திருட தாக்குதல் நடத்துகிறது. இந்த குழுவானது கோஸி பியர் என்றும் ரஷ்ய உளவுத்துறையின் ஒரு பகுதியென்றும் கூறப்படுகிறது. ரஷ்ய அரசின் ஆதரவுடன் ஹேக்கர்கள் உலகெங்கிலும் உள்ள கல்வி மற்றும் மருந்து நிறுவனங்களிடமிருந்து கோவிட் -19 தடுப்பூசி மற்றும் சிகிச்சை ஆராய்ச்சிகளை திருட முயற்சிக்கின்றனர் என்று இங்கிலாந்தின் தேசிய சைபர் பாதுகாப்பு மையம் (என்.சி.எஸ்.சி) வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

பிரிட்டன், அமெரிக்கா மற்றும் கனடாவிலிருந்து ஒரு ஒருங்கிணைந்த அறிக்கையானது APT29 குழுவிற்கு எதிராக வந்துள்ளது.

“கொரோனா வைரஸ் தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கு முக்கிய வேலை செய்பவர்களுக்கு எதிரான இந்த இழிவான தாக்குதல்களை நாங்கள் கண்டிக்கிறோம்” என்று பிரிட்டனின் என்.சி.எஸ்.சி செயல்பாட்டு இயக்குநர் பால் சிச்செஸ்டர் கூறியிருக்கிறார். இதேபோன்று ரஷியா தங்கள் நாட்டு அரசியலிலும் தலையீடுவதாக பிரிட்டன் குற்றம் சாட்டுகிறது. பிரிட்டன் அரசியலில் ரஷ்ய செல்வாக்கு குறித்த நீண்டகாலமாக தாமதமான அறிக்கையை பிரிட்டன் அடுத்த வாரம் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிரிட்டிஷ் வெளியுறவு மந்திரி டொமினிக் ராப், ரஷ்ய புலனாய்வு சேவைகள் தொற்றுநோய்க்கான பணிகளை இலக்காக கொள்வது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்று குறிப்பிட்டு இருக்கிறார். “APT29 குழுவானது கொரோனா வைரஸ் தடுப்பூசி மருந்து ஆராய்ச்சியில் நிறுவனங்களை தொடர்ந்து குறிவைக்க வாய்ப்புள்ளது. ஏனெனில், அவை தொற்றுநோய் தொடர்பான கூடுதல் தகவல்களை திருட முற்படுகின்றன” என்று என்.சி.எஸ்.சி. தெரிவித்துள்ளது.

கனடா அதிகாரிகளும் இதுபோன்ற குற்றச்சாட்டை முன்வைத்து உள்ளனர். அவர்கள், தகவல் திருட்டிலிருந்து தற்காத்துக்கொள்ள சுகாதார அமைப்புகளுக்கான இணைய அச்சுறுத்தல்களை சரிசெய்ய நடவடிக்கையைஎடுக்குமாறு அறிவுறுத்தி உள்ளனர்.

தொற்றுநோய்க்கு சிகிச்சை அளிக்கும் தேசிய மற்றும் சர்வதேச அமைப்புகளை ஹேக்கர்கள் நெட்வொர்க்குகள் குறிவைப்பதாக பிரிட்டனும், அமெரிக்காவும் மே மாதம் கூறியிருந்தது. ஆனால், இதுபோன்ற தாக்குதல்கள் முன்னர் ரஷ்ய அரசுக்கு தொடர்பு என வெளிப்படையாக தெரிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ரஷ்ய அரசாங்கத்துடன் இணைந்த குழுவான கோஸி பியர், 2016 யு.எஸ் தேர்தலுக்கு முன்னர் ஜனநாயக கட்சியை ஹேக் செய்ததாக பரவலாக சந்தேகிக்கப்படுகிறது.