திருக்குறள் “உயரிய சிந்தனைகள் கொண்ட பொக்கிஷம்” பிரதமர் மோடி புகழாரம்… இளைஞர்கள் படிக்க கோரிக்கை

Read Time:2 Minute, 39 Second

சுமார் 1330 குறள்களை தன்னகத்தே கொண்டுள்ள திருக்குறள் இதுவரை உலக மொழிகள் பலவற்றில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. பல நுாற்றாண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த கவிஞர், ஜாதி, மதம், நிறம், மொழி, இனம் முதலான குறுகிய எண்ணங்களுக்கு இடம் தராமல், எவ்வகை சார்பையும் கடந்து, எல்லோருக்கும் பொதுவான ஒரு நுாலை படைத்து தந்திருப்பது பெரிய வியப்பாக இருக்கிறது. இதனாலேயே திருக்குறள் ‘உலகப் பொதுமறை’ என சிறப்பிக்கப்படுகிறது.

மனித வாழ்க்கைக்கு தேவையான அனைத்து தத்துவத்தையும் காவியமாக கொண்ட பிரமிக்கச்செய்யும் நூலாகும். திருக்குறள் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டவராக பிரதமர் மோடி இருக்கிறார். முக்கிய நிகழ்ச்சிகளில் பேசும் போது அவர் திருக்குறளை மேற்கோள் காட்டுவது சமீபத்திய காலங்களில் அதிகரித்துக் காணப்படுகிறது. கடந்த 3-ம் தேதி லடாக் சென்ற அவர் அங்குள்ள லே பகுதியில் ராணுவ வீரர்கள் மத்தியில் உரையாற்றுகையில், ‘மறமானம்’ என்று தொடங்கும் குறளை மேற்கோள் காட்டி பேசினார்.

“மறமானம் மாண்ட வழிச்செலவு தேற்றம்
எனநான்கே ஏமம் படைக்கு”

என்ற குறளை மோடி குறிப்பிட்டார்.

அதாவது, வீரம், மானம், நல்ல வழியில் நடத்தல், அரசின் நம்பிக்கைக்கு உரியது ஆதல் எனும் நான்கும் படைக்கு காவல் அரண்களாகும் என்று மகான் திருவள்ளுவர் கூறியிருக்கிறார்.

இந்த நிலையில், திருக்குறளுக்கு புகழாரம் சூட்டும் வகையில், மோடி நேற்று டுவிட்டரில் ஆங்கிலத்திலும், தமிழிலும் பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

அதில், திருக்குறள் அதிஅற்புதமான ஊக்குவிப்பு நூலாகும். உயரிய சிந்தனைகள், உன்னத குறிக்கோள்கள், ஊக்கம் தரும் கருத்துகளை உள்ளடக்கிய பொக்கிஷம். தெய்வப்புலவர் திருவள்ளுவரின் எழுத்துக்கள், நம்பிக்கையும், ஒளியும் பரப்பிடும் வல்லமை வாய்ந்தவை. இந்தியா முழுவதிலும் உள்ள இளைஞர்கள் பலரும் திருக்குறளை படித்து பயனுறுவர் என நம்புகிறேன் எனக் குறிப்பிட்டு இருக்கிறார்.