“நமசிவாய” பாவம் போக்கும் சனிப்பிரதோஷம் இன்று…!

Read Time:3 Minute, 5 Second

சிவபெருமானுக்குரிய வழிபாடுகளில் பிரதோஷ கால வழிபாடு மிகவும் முக்கியமானது. பிரதோஷம் என்பது ஆன்மாக்களின் முற்பிறப்பு குற்றங்களை நீக்குவதாகும்.

சூரியனின் மறைதலோடு தொடங்கும் பிரதோஷ காலம் இறைவனின் திருவடிகளில் மனம் ஒடுங்கி சரணாகதி அடைய உகந்த காலமாகும். ஒவ்வொரு மாதம் வளர்பிறை தேய்பிறையில் திரயோதசி திதி அன்று மாலை 4.30 மணி முதல் இரவு 7 மணி வரை உள்ள காலமே ‘பிரதோஷ காலம்’ எனப்படும்.

புராணக்காலத்தில் தேவர்களும் – அசுரர்களும் அமுதம் வேண்டி பாற்கடலை கடைய முடிவு செய்தனர். அப்போது மேரு மலையை மத்தாகவும், வாசுகிப் பாம்பை கயிறாகவும் பயன்படுத்தப்பட்டது. கடலை கடைந்தபோது, வாசுகி பாம்பு வலி தாங்க முடியாமல் விஷத்தை கக்கியது. அந்த விஷம் உலக உயிர்களை அழிக்காமல் இருக்க, சிவபெருமான் அதையே உண்டாா்.

அம்பிகையால் சிவன் விழுங்கிய விஷமானது அவரது கழுத்திலேயே நின்றது. இதையடுத்து இந்த உலகம் உய்யவும், தேவர்கள் மகிழவும் சிவபெருமான் கையில் தமருகம் (உடுக்கை) ஏந்தி நந்தியின் இரு கொம்புகளுக்கு இடையில் திருநடனம் புரிந்தார். அவர் ஆடிய காலமே பிரதோஷ காலம் என வழிபாடு செய்யப்படுகிறது.

தேவர்களுக்கு திருநடன காட்சி தந்த நாள் ஒரு கார்த்திகை மாத சனிக்கிழமை ஆகும்.

ஆகவேதான் சனிப் பிரதோஷம் மிகவும் சிறப்பு பெறுகிறது. பிரதோஷ காலத்தில் ‘நமசிவாய’ எனும் ஐந்தெழுத்து மந்திரத்தை உள்ளம் உருகி பாராயணம் செய்ய வேண்டும். நந்தி தேவருக்கு அருகம்புல் மாலை அணிவித்தல், நெய்விளக்கு ஏற்றுதல், தானதருமம் செய்தல் போன்றவை புண்ணியம் தரும். அக்காலத்தில் இறைவனை நந்தி தேவரின் இரு கொம்புகளுக்கு நடுவில் தரிசனம் செய்து வணங்குதல் மிகவும் நன்று.

பிரதோஷ பூஜை வழிபாட்டால் கல்வி பெருகும். செல்வம் வளரும், நோய்கள் விலகும், கடன், மனக்கவலைகள் அகலும். பாவம் போக்கும். ஒரு பிரதோஷ பூஜை ஆயிரம் சிவபூஜை செய்தமைக்கு சமமாகும். ஆகவே பலன்களும் அதிகம். இந்த பிரதோஷ காலத்தில் சிவபெருமானின் ஆலயத்தை ஐந்து முறை வலம் வந்தால், அளவற்ற நன்மைகளை அடையலாம். பிரதோஷ நாளில் செய்யப்படும் எந்த தானமும் மும்மடங்கு பலன்களை வழங்கும் என்பது ஐதீகமாகும். பிறப்பே இல்லாத முக்தியை அளித்து அருள் செய்யும். இன்று (18ம் தேதி) சனிப் பிரதோஷம் ஆகும். மாலையில் சிவனாரை வீட்டிலேயே தொழுவோம். நமசிவாயம் சொல்லுவோம். நல்லனவற்றை அனைத்தையும் பெறுவோம்.