உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பினால் திணறி வருகிறது. வைரஸுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணி ஒருபுறம் தீவிரமாக நடைபெறுகிறது. மறுபுறம் வைரஸ் எப்படியெல்லாம் மனிதர்களுக்கு பரவுகிறது என்ற ஆய்வும் தொடர்கிறது.
கொரோனா வைரஸ் பெரும்பாலும் பாதிக்கப்பட்டவர்களின் உடலில் இருந்து வெளியாகும் நீர்த்துளிகள் வழியாகவே பிறருக்கு செல்கிறது. சீனாவில் எறும்புதின்னியின் வாயிலாகவே வைரஸ் பாதிப்பு நேரிட்டு உள்ளது எனக் கூறப்படுகிறது. இது உறுதியாக சொல்லப்படவில்லை. இதற்கிடையே இந்த வைரஸை சீனா தனது ஆய்வகத்தில் உருவாக்கியதாகவும், திட்டமிட்டு பிற நாடுகளுக்கு கட்டவிழ்த்து விட்டதாகவும் அமெரிக்கா தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது.
இந்நிலையில் உலகில் மிகவும் மோசமான நோய்கள் தொடர்ந்து கொசுக்கள் வாயிலாக பரப்பப்பட்டு வருகிறது. இதுபோன்று கொரோனா வைரசும் கொசுக்கள் வாயிலாக பரவுமா…? என்ற கேள்வி எழுந்து உள்ளது. இதுதொடர்பான ஆய்வும் மேற்கொள்ளப்பட்டு முடிவு வெளியிடப்பட்டு உள்ளது. இதுதொடர்பான புதிய ஆய்வில், ஆராய்ச்சியாளர்கள் கொசுக்களால் வைரஸ் மக்களுக்கு பரவ முடியாது என்பதை உறுதிப்படுத்தி உள்ளனர்.
சயின்டிஃபிக் ரிப்போர்ட்ஸ் (Scientific Reports) இதழில் வெளியிடப்பட்டுள்ள ஆய்வு முடிவில் கொசுக்களால் தொற்று பரவும் தன்மை பற்றிய சோதனை விளக்கத்தை விரிவாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அமெரிக்காவின் கன்சாஸ் மாநில பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இதுதொடர்பான ஆய்வை மேற்கொண்டுள்ளனர். ஆராய்ச்சியாளர் ஸ்டீபன் ஹிக்ஸ் இதுதொடர்பாக பேசுகையில், “உலக சுகாதார அமைப்பு (WHO) கொசுக்களால் வைரஸைப் பரப்ப முடியாது என்று உறுதியாகக் கூறியுள்ள நிலையில், இதனை ஆதரிக்கும் உறுதியான தரவுகளை வழங்குவதில் முதன்மையானதாக எங்கள் ஆய்வு இருக்கிறது.” எனக் குறிப்பிட்டு இருக்கிறார்.
மூன்று வகையான கொசுக்களான ஏடிஸ் ஈஜிப்டி, ஏடிஸ் அல்போபிக்டஸ் மற்றும் குலெக்ஸ் குயின்கெபாஸியாட்டஸ் ஆகியவற்றால் வைரசை பிரதிபலிக்க முடியாது. எனவே, மனிதர்களுக்கு அவைகள் மூலம் பரவ முடியாது என்று ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. “தீவிர நிலைமைகளின் கீழ்கூட, வைரஸ் இந்த கொசுக்களில் நகலாக இருக்க இயலாது என்பதை நாங்கள் நிரூபித்து உள்ளோம். எனவே, ஒரு கொசு கொரோனா நோயாளியிடம் இரத்தத்தை குடிக்கும் போது மற்றவர்களுக்கு பரவ செய்ய முடியாது,” என அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.