லடாக் பதற்றத்துக்கு மத்தியில் அந்தமானில் இந்திய கடற்படை போர் பயிற்சி

Read Time:3 Minute, 6 Second

லடாக் எல்லையில் சீன ராணுவம் ஊடுருவியதால் இரு நாட்டு வீரர்கள் மத்தியில் கடந்த மாதம் மோதல் சம்பவம் ஏற்பட்டது. இதில், இருதரப்பிலும் உயிரிழப்புகள் நிகழ்ந்ததால் 2 மாதத்துக்கும் மேலாக எல்லையில் பதற்றம் நீடித்தது. இருதரப்பும் படைகளை குவித்தன. பின்னர் இரு தரப்பும் மேற்கொண்ட அமைதி பேச்சுவார்த்தையின் பலனாக தற்போது படை விலக்கலும், அமைதி நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இருதரப்பும் படைகளை வெளியேற்றி வருவதால் அங்கு மெல்ல மெல்ல அமைதி திரும்பி வருகிறது.

எனினும் அடிக்கடி அத்துமீறும் சீனாவுக்கு எதிராக இந்தியாவும் தனது படைபலத்தை தொடர்ந்து தயார் நிலையிலேயே வைத்து இருக்கிறது.

லடாக் எல்லையில் இந்திய ராணுவம் மற்றும் விமானப்படை தயார் நிலையில் இருப்பதுடன், எத்தகைய அச்சுறுத்தலையும் சமாளிக்கும் வகையில் நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக தற்போது கடற்படையும் தனது தயார் நிலையை உறுதிப்படுத்தும் நடவடிக்கையில் இறங்கியிருக்கிறது.

அந்தவகையில் கிழக்கு பிராந்திய கடற்படை சார்பில் தீவிர பயிற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அந்தமான்-நிகோபார் கடற்பகுதியில் பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கிழக்கு பிராந்திய கடற்படையின் நாசகார கப்பல்கள் அடங்கிய மிகப்பெரிய கப்பல் அணிவகுப்பு இந்த போர் பயிற்சியில் ஈடுபட்டு உள்ளன.

மேலும், அந்தமான்-நிகோபார் கமாண்டை சேர்ந்த சில கப்பல்களும் இந்த பயிற்சியில் கிழக்கு பிராந்திய கப்பல்களுடன் இணைந்து உள்ளன. இந்த பயிற்சி குறித்து கிழக்கு பிராந்திய கடற்படையின் சார்பில் எந்தவிதமான விவரமும் வெளியிடப்படவில்லை. எனினும் லடாக் எல்லையில் பதற்றம் நீடித்து வரும் நிலையில், அந்தமான் கடற்பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பயிற்சி முக்கியத்துவம் வாய்ந்தது என பாதுகாப்பு வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக தென்சீனக்கடலில் சீனாவின் கொட்டத்தை அடக்குவதற்காக அமெரிக்க கடற்படை கப்பல்கள் அங்கு ஏற்கனவே விரைந்து இருக்கிறது. இந்நிலையில், இந்தியாவும் அந்தமான் கடற்பகுதியில் போர் பயிற்சியை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்க அம்சமாக பார்க்கப்படுகிறது. இந்த பயிற்சி, சீனாவுக்கு தடை போடுவதற்கான முக்கிய நடவடிக்கை என பார்க்கப்படுகிறது.