தடை உத்தரவுக்கு பணிய வேண்டும்… டிக் டாக் உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை

Read Time:2 Minute, 1 Second

இந்தியாவில் விதிக்கப்பட்டுள்ள தடை உத்தரவுக்கு பணிய வேண்டும் என டிக் டாக் உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கையை விடுத்து இருக்கிறது.

தேச பாதுகாப்பு மற்றும் இறையாண்மைக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக சீனாவை சேர்ந்த டிக் டாக் உள்ளிட்ட 59 செல்போன் செயலிகளுக்கு மத்திய அரசு அதிரடியாக தடை விதித்து இருக்கிறது.

அரசின் தடை உத்தரவுகளுக்கு கண்டிப்பாக இணங்குவதை உறுதி செய்யுமாறு நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், ஏதேனும் மீறல் ஏற்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று இந்திய தகவல் தொழில்நுட்பத்துறையானது எச்சரிக்கையை விடுத்து இருக்கிறது என தகவல் வெளியாகியிருக்கிறது.

அனைத்து நிறுவனங்களுக்கும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் எழுதியுள்ள கடிதத்தில், தடைசெய்யப்பட்ட செயலி பயன்பாடு தொடர்ச்சியாக கிடைப்பது மற்றும் செயல்படுவது நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ சட்டவிரோதமானது மட்டுமல்லாமல், தகவல் தொழில்நுட்ப சட்டம் மற்றும் பிற பொருந்தக்கூடிய சட்டங்களின் கீழ் குற்றமாகும் என்று எச்சரிக்கை விடுத்து உள்ளது என செய்திகள் வெளியாகியிருக்கிறது. தடைசெய்யப்பட்ட பட்டியலில் உள்ள எந்தவொரு செயலியின் பயன்பாடுகளும் இந்தியாவுக்குள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ எந்தவொரு வழியிலும் பயன்படுத்தப்படுவதை கண்டறிந்தால், அது அரசாங்க உத்தரவுகளை மீறுவதாக கருதப்படும் என்று அரசு வட்டாரத் தகவல்கள் தெரிவித்து உள்ளன.