சீனாவுடனான எல்லை மோதலுக்கு மத்தியில் மிக் -29K போர் விமானங்களை வடக்கு நோக்கி நகர்த்தியது இந்திய கடற்படை…

Read Time:4 Minute, 16 Second

லடாக் எல்லையில் சீன ராணுவம் ஊடுருவியதால் இரு நாட்டு வீரர்கள் மத்தியில் கடந்த மாதம் மோதல் சம்பவம் ஏற்பட்டது. இதில், இருதரப்பிலும் உயிரிழப்புகள் நிகழ்ந்ததால் 2 மாதத்துக்கும் மேலாக எல்லையில் பதற்றம் நீடித்தது. இருதரப்பும் படைகளை குவித்தன. பின்னர் இரு தரப்பும் மேற்கொண்ட அமைதி பேச்சுவார்த்தையின் பலனாக தற்போது படை விலக்கலும், அமைதி நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.

இருதரப்பும் படைகளை வெளியேற்றி வருவதால் அங்கு மெல்ல அமைதி திரும்பி வருகிறது. இருப்பினும் இந்தியப்படைகள் உஷார் நிலையில் நிலை நிறுத்தப்பட்டு உள்ளன. இந்திய விமானப்படையின் முழு கவனமும் சீன எல்லையை நோக்கியே இருக்கிறது.

இந்திய கடற்படையும் தீவிரமான கண்காணிப்பை மேற்கொண்டது. இந்நிலையில் இந்திய கடற்படையும் தன்னுடைய விமானங்களை வடக்கு நோக்கி நகர்த்தியிருக்கிறது என்ற தகவல் வெளியாகியிருக்கிறது. லடாக் பகுதியை மையமாக கொண்டு இந்திய கடற்படை தன்னுடைய விமானங்களை வடக்கு நோக்கி நகர்த்தியிருக்கிறது. கடற்படை போர் விமானங்கள் எந்த விதமான நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படும் என்பது தெரியவரவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

“கடற்படை விமானங்கள் மற்றும் வீரர்கள் இருக்கும் போது ஏன் பயன்படுத்தக்கூடாது” என்பதே இத்துறை சார்ந்த வல்லுநகர்களின் கருத்தாக இருக்கிறது.

லடாக் பகுதியில் மோதலை தொடர்ந்து எல்லைக் கண்காணிப்பில் இந்திய கடற்படையும் தீவிரமாக இருக்கிறது. மிக் -29K போர் விமானத்தில் இலகுரக ஏவுகணைகள், ராக்கெட்டுகள் மற்றும் கண்காணிப்பு ரேடார் கருவிகள் பொருத்தப்பட்டு உள்ளன. இவை பிரத்யேகமாக நீர்மூழ்கி கப்பல்களை துல்லியமாக தாக்கி அழிக்கும் வல்லமையை கொண்டதாகும். இதன்மூலம் ஒட்டுமொத்த இந்திய பெருங்கடல் பகுதியும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இந்த மிக் -29K போர் விமானங்கள் மூலமாகவே இந்திய கடல் பகுதியில் சீனாவின் அத்துமீறல் கடந்த இரு ஆண்டுகளாக தடுக்கப்பட்டு வருகிறது. அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பி-8 ஐ உளவு விமானங்கள் 2017-ம் ஆண்டில் சீனாவுடனான டோக்லாம் மோதலின் போதும் இதேபோன்ற கண்காணிப்பு பணிகளை மேகொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய கடற்படையில் 40-க்கும் மேற்பட்ட மிக் -29K போர் விமானங்கள் உள்ளன. அவைகளில் 18 விமானம் தாங்கி கப்பலான ஐ.என்.எஸ் விக்ரமாதித்யாவில் நிறுத்தப்பட்டு உள்ளன என்றும் மற்றவை கோவாவில் நிலை நிறுத்தப்பட்டு உள்ளன. பாதுகாப்பை கருத்தில் கொண்டு ரஷிய தயாரிப்பான சில ஜெட் விமானங்களை கோவாவிலிருந்து வடக்கில் உள்ள இந்திய விமானப்படை (ஐ.ஏ.எஃப்) தளங்களுக்கு நகர்த்தப்படுகிறது என இவ்விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தரப்பு தகவல்கள் தெரிவிப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கிறது.

எல்லையில் ராணுவ நிலைப்பாட்டை வலுப்படுத்தும் திட்டத்தின் ஒரு பகுதியாக வட இந்தியாவில் உள்ள விமானப்படை நிலையங்களில் இருந்து லடாக் பகுதிகளுக்கு பல போர் விமானங்களை இந்திய விமானப்படை நகர்த்தியிருக்கிறது எனவும் அதிகாரிகள் தரப்பு தகவல்கள் தெரிவித்து உள்ளன என இந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெளியிட்டு இருக்கிறது.