ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக கொரோனா தடுப்பூசி சோதனை வெற்றி… எவ்வாறு செயல்படுகிறது…?

Read Time:4 Minute, 6 Second

கொரோனாவுக்கு எதிராக இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் உருவாக்கிய தடுப்பூசியின் முதல்கட்ட சோதனை வெற்றி பெற்றுள்ளது.

அதாவது, மனிதர்களுக்கு வைரசை எதிர்த்து போராடும் வகையில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது கண்டறியப்பட்டு உள்ளது.

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் தடுப்பூசி முதற்கட்ட சோதனைக்காக கடந்த ஏப்ரல் மாதம் சுமார் 1000 பேருக்கு செலுத்தியிருக்கிறது. பொதுவாக இத்தகைய முதற்கட்ட சோதனையின் போது, செலுத்தப்படுவோரின் பாதுகாப்பு மட்டும் கருத்தில் கொள்ளப்படும். ஆனால் இந்த சோதனையில் அவர்களுக்கு எத்தகைய நோய் எதிர்ப்பு சக்தி உருவாகிறது? என்பதும் ஆராயப்பட்டுள்ளது.

சோதனையின் முடிவில் பரிசோதனையில் கலந்து கொண்ட 18 முதல் 55 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு இரட்டை பாதுகாப்பு உருவாகியிருப்பது கண்டறியப்பட்டது.

இதுதொடர்பாக ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் உள்ள ஜென்னர் நிறுவனத்தின் இயக்குனரான டாக்டர் அட்ரியன் ஹில் கூறுகையில், பரிசோதனையில் இடம்பெற்ற அனைவரிடமும் சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியை கண்டு இருக்கிறோம். குறிப்பாக நோய் எதிர்ப்பு சக்தி அமைப்பின் இரட்டை கரங்களையும் இந்த தடுப்பூசி உருவாக்கி உள்ளது தெரிய வந்துள்ளது.

அதாவது தொற்றுநோயை தடுக்கும் மூலக்கூறுகளான நடுநிலையான ஆன்டிபாடிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. அத்துடன் உடலின் டி-செல்களில் ஒரு எதிர்வினையையும் இந்த தடுப்பூசி ஏற்படுத்துகிறது என்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த செல்கள் கொரோனா வைரசை எதிர்த்து போராட பெரிதும் உதவுகிறது.

ஏனெனில் கொரோனாவை கட்டுப்படுத்துவதில் டி-செல்லின் எதிர்வினை மற்றும் ஆன்டிபாடிகள் இருப்பது மிகவும் முக்கியமானது. இந்த தடுப்பூசியின் 2-ம் கட்ட பரிசோதனையில் இந்த நோய் எதிர்ப்பு சக்தி மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. மருந்து தயாரிப்பு நிறுவனமான அஸ்த்ரா செனிகாவுடன் இணைந்து இந்த தடுப்பூசியை ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் உலக அளவில் தயாரிக்க திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே 200 கோடி டோஸ்களுக்கு ஆர்டர் கிடைத்து உள்ளது என தெரிவித்து உள்ளார்.

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக தடுப்பூசி பரிசோதனையின் தலைமை ஆய்வாளர் ஆண்ட்ரூ பொல்லார்டு கூறுகையில், இந்த தடுப்பூசி பரிசோதனையில் நம்பகமான முடிவுகள் கிடைத்திருக்கிறது. தடுப்பூசி பாதுகாப்பானது, நோய் எதிர்ப்பு சக்தி மிகுந்தது என்பதை அறிந்து கொண்டதாக குறிப்பிட்டுள்ளார். தடுப்பூசியின் 2 மற்றும் 3-ம் கட்ட பரிசோதனையும் ஏற்கனவே தொடங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது. கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியின் சோதனை வெற்றி என்ற செய்தி பலருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %