தாய் பால் கொடுக்க வைத்து பெண்ணை அறுவை சிகிச்சையில் இருந்து காப்பாற்றிய செவிலி… எப்படி…? விபரம்:-

Read Time:3 Minute, 16 Second

மராட்டிய மாநிலம் அவுரங்காபாத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கடந்த 17-ம் தேதி அறுவை சிகிச்சை மூலம் 22 வயது பெண்ணுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்தன.

இந்தநிலையில் பிரசவத்திற்கு பிறகு திடீரென தாய்க்கு அதிகமான ரத்த போக்கு ஏற்பட்டது.

இதையடுத்து அவருக்கு ரத்த போக்கை நிறுத்த மேலும் ஒரு அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகளை தயார் படுத்தினர், மருத்துவர். அப்போது அங்கிருந்த செவிலி தினேஷ்வரி ஒரு சிறப்பான யோசனையை கொடுத்து அந்த இளம் வயது தாயை அறுவை சிகிச்சையில் இருந்து காப்பாற்றி உள்ளார்.

மருத்துவத்தில் தாய் பால் கொடுத்தால், ரத்தத்தில் ஆக்சிடாசின் சுரந்து உடலில் ரத்தப்போக்கு நிற்கும் என்ற யோசனையை சரியான நேரத்தில் கூறியிருக்கிறார் தினேஷ்வரி.

தினேஷ்வரியின் யோசனையை ஏற்றுக்கொண்ட மருத்துவர்கள் அந்த யோசனையை முயற்சி செய்து பார்த்தனர். இளம்பெண் தனது குழந்தைகளுக்கு தாய் பால் கொடுத்த ஒரு மணி நேரத்தில் அவருக்கு ரத்த போக்கு நின்றுவிட்டது. துரித யோசனையால் இளம் தாயை அறுவை சிகிச்சையில் இருந்து காப்பாற்றிய செவிலி தினேஷ்வரியை மருத்துவர்கள் வெகுவாக பாராட்டி உள்ளனர்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் அறுவை சிகிச்சை செய்து இருந்தால் அந்த பெண்ணுக்கு கர்ப்பப்பை கூட அகற்றப்பட வேண்டிய நிலை ஏற்பட்டு இருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

மருத்துவமனையின் குழந்தைகள் நலப்பிரிவு தலைமை மருத்துவர் ஸ்ரீனிவாஸ் கடாப்பா பேசுகையில், “செவிலி தினேஷ்வரியின் துரிதமான யோசனையால் இளம் பெண்ணுக்கு மேலும் மேற்கொள்ளப்படவிருந்த ஒரு அறுவை சிகிச்சையானது தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. அவருடைய கர்ப்பப்பையும் பாதுகாக்கப்பட்டு உள்ளது. இரத்தப்போக்க நிறுத்த தாய்பால் கொடுப்பது தெரிந்த உண்மையாக இருப்பினும், நாங்கள் இதனை முயற்சித்தது கிடையாது. செவிலியின் சரியான யோசனை மிகவும் பயனுள்ளதாக இருந்தது,” எனக் கூறியிருக்கிறார்.

இதுகுறித்து 11 ஆண்டுகள் செவிலியராக பணியாற்றி வரும் தினேஷ்வரி கூறுகையில், ‘‘நர்சிங் படிக்கும் போது ஆக்சிடாசின் பற்றி சொல்லி கொடுத்து இருக்கிறார்கள். அதை சரியான நேரத்தில் ஞாபகப்படுத்தி இருக்கிறேன். இந்த முயற்சியால் பலன் கிடைத்து இருப்பது மிகவும் மகிழ்ச்சியை தருகிறது’’ என்று கூறியிருக்கிறார்.