இனிமேலாவது மதத் துவேசமும் கடவுள் நிந்தனையும் ஒழியட்டும்… #கந்தனுக்கு_அரோகரா – ரஜினிகாந்த்

Read Time:2 Minute, 40 Second

கருப்பர் கூட்டம் என்ற யூ-டியூப் சேனலில் கந்த சஷ்டி கவசம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் விமர்சனம் செய்யப்பட்டது. இந்துக்களின் உணர்வை மிகவும் காயப்படுத்தும் வகையில் வெளியிடப்பட்ட வீடியோ தொடர்பாக செந்தில்வாசன், சுரேந்திரன் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர்.

மேலும், சென்னையில் உள்ள கருப்பர் கூட்டம் அலுவலகத்திற்கு போலீசார் சீல் வைத்தனர்.

இதற்கிடையில் கருப்பர் கூட்டம் யூ-டியூப் பக்கத்தில் மத உணர்வை புண்படுத்தும் வகையில் பல வீடியோக்கள் இருப்பதால், அந்த சேனலை முடக்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இதனையடுத்து கருப்பர் கூட்டம் சேனலை முடக்க வலியுறுத்தி சென்னை சைபர் கிரைம் போலீசார், யூ-டியூப் நிறுவத்திற்கு கடிதம் அனுப்பினர். மேலும், அந்த சேனலில் இருந்து 500-க்கும் மேற்பட்ட வீடியோக்களை சைபர் கிரைம் போலீசார் அதிரடியாக நீக்கினர்.

இந்நிலையில் இவ்விவகாரம் தொடர்பாக ரஜினிகாந்த் இன்று (ஜூலை 22) தனது டுவிட்டர் பக்கத்தில், “கந்த சஷ்டி கவசத்தை மிகக் கேவலமாக அவதூறு செய்து, பல கோடி தமிழ் மக்களின் மனதைப் புண்படுத்தி கொந்தளிக்க செய்த, இந்த ஈனச் செயலை வாழ்க்கையில் மறக்க முடியாதபடி செய்தவர்கள் மீது துரிதமாக நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட வீடியோக்களை அரசு தலையிட்டு நீக்கியதற்காக, தமிழக அரசுக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுகள். இனிமேலாவது மதத் துவேசமும், கடவுள் நிந்தனையும் ஒழியட்டும்… ஒழியணும்.

எல்லா மதமும் சம்மதமே!!! கந்தனுக்கு அரோகரா!!!” எனப் பதிவிட்டு உள்ளார்.

கந்தனுக்கு அரோகரா என்ற ஹாஷ்டாக் மூலம் வெளியிடப்பட்ட இந்த செய்திக்கு பலரும் பாராட்டு தெரிவித்ததுடன் பகிர்ந்தும் வருகிறார்கள். மேலும், ரஜினிகாந்த கருத்தை ஆதரிக்கும் வகையில் பலரும் தங்களுடைய கருத்தை #கந்தனுக்குஅரோகரா என்ற ஹாஷ்டாக் மூலம் பதிவிட்டு வருகிறார்கள். இந்த ஹாஷ்டாக் இந்தியா மற்றும் உலகம் முழுவதும் டிரெண்டிங் ஆகி வருகிறது.