சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் அமெரிக்காவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த கொரோனா வைரசை சீனா தனது ஆய்வகத்தில் உருவாக்கியதாகவும், திட்டமிட்டே பிற நாடுகளுக்கு கட்டவிழ்த்து விட்டதாகவும் அமெரிக்கா தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. ஏற்கனவே வர்த்தக போர், தென்சீனக்கடல் பிரச்சனை போன்றவற்றால் அமெரிக்கா- சீனா இடையிலான உறவு மிகவும் மோசமாகியிருந்த சூழலில் தற்போது கொரோனா வைரஸ் விவகாரம் இரு நாடுகளுக்கு இடையே பகையை அதிகரித்து உள்ளது.
மேலும் கொரோனா வைரஸ் விவகாரத்தில் சீனா மீது அமெரிக்கா அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளையும் சுமத்தி வருகிறது.
இந்நிலையில் சீன அரசுக்காக வேலை பார்த்து வரும் ஹேக்கர்கள் 2 பேர் கொரோனா வைரசுக்கான தடுப்பூசிகளை உருவாக்கும் நிறுவனங்களை குறிவைத்து தாக்குதல் நடத்துகின்றனர். உலகெங்கிலும் உள்ள நிறுவனங்களிடமிருந்து நூற்றுக்கணக்கான மில்லியன் டாலர் மதிப்புள்ள அறிவுசார் சொத்துகள் மற்றும் வர்த்தக ரகசியங்களை திருடியுள்ளனர் என அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.
சீனாவை சேர்ந்த லி சியாயு (வயது 34), மற்றும் டோங் ஜியாஜி (33) ஆகிய 2 ஹேக்கர்களும் தனிப்பட்ட லாபத்திற்காக மட்டுமின்றி சீன அரசுக்காகவும் சைபர் குற்றங்களில் ஈடுபட்டு வருவதாக அமெரிக்க நீதித்துறை தெரிவித்து இருக்கிறது.
சீனா உளவுத்துறைக்கும் வேலை
இவர்கள் இருவரும் சீன அரசுக்காக பிற நாடுகளின் மதிப்புமிக்க ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப தகவல்களை திருடி வழங்கி வருவதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இவர்கள் சில சமயங்களில் சீன உளவுத்துறைக்காகவும் வேலை பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.
இவர்கள் இருவரும் உலகம் முழுவதும் தடுப்பூசிகள் மற்றும் சோதனைக் கருவிகளை உருவாக்கி வைரஸ் தடுப்பு மருந்துகளை ஆராய்ச்சி செய்து வரும் 10-க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த பயோடெக் நிறுவனங்களின் கம்ப்யூட்டர்களை ‘ஹேக்‘ செய்து அந்த நிறுவனங்களின் அறிவு சார் சொத்துகள் மற்றும் வர்த்தக ரகசியங்களை திருடி சீன அரசுக்கு வழங்கியதாக அமெரிக்க நீதித்துறை தெரிவித்து இருக்கிறது.
லி சியாயு, டோங் ஜியாஜி ஆகிய இருவரும் கடந்த 10 ஆண்டுகளாக சீன அரசுக்காக இதுபோன்ற வேலைகளில் ஈடுபட்டு வருவதாகவும், நிறுவனங்கள் மட்டுமின்றி சீன அரசு எதிர்ப்பாளர்கள், ஹாங்காங்கின் ஜனநாயக ஆர்வலர்கள், மதகுருமார்கள் போன்ற தனிநபர்களும் அவர்களின் இலக்காக இருந்ததாக அமெரிக்கா கூறியிருக்கிறது.
ஏற்கனவே, அமெரிக்கா, கனடா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகள் ரஷியாவைச் சேர்ந்த ஹேக்கர்கள் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து ஆராய்ச்சிகளை திருடுவதாக குற்றம் சாட்டியது குறிப்பிடத்தக்கது.