1,000 ரூபாய்க்கு கொரோனா தடுப்பூசி.. இந்திய மருந்து தயாரிப்பு நிறுவனத்தின் அறிவிப்பு என்ன…?

Read Time:5 Minute, 43 Second
Page Visited: 254
1,000 ரூபாய்க்கு கொரோனா தடுப்பூசி.. இந்திய மருந்து தயாரிப்பு நிறுவனத்தின் அறிவிப்பு என்ன…?

இன்றைக்கு மனிதகுலத்தின் பொது எதிரியாக கொரோனா வைரஸ் தொற்று இருக்கிறது. இந்நோயை தடுப்பதற்கு உலக அளவில் தடுப்பூசிகளை உருவாக்கும் முயற்சி முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அமெரிக்கா, ஜெர்மன், இங்கிலாந்து, ரஷியா, இந்தியா, சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் இந்த முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இதுபோக மருந்து தயாரிப்பு நிறுவனங்கள், பல்கலைக்கழங்களும் முயற்சியில் இறங்கியிருக்கின்றன.

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் முந்துகிறது

தற்போதைய நிலவரப்படி மருந்து கண்டுபிடிக்கும் பணியில் இங்கிலாந்து ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் முந்துகிறது. இங்கிலாந்து அரசு மற்றும் அஸ்ட்ரா ஜெனேகா மருந்து நிறுவனத்துடன் இணைந்து ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கொரோனாவுக்கு தாடுப்பூசி உருவாக்கியிருக்கிறது. இந்த தடுப்பூசியானது பிற எந்த தடுப்பூசியையும் விட நம்பகத்தன்மை அளிப்பதாக தெரியவந்து இருக்கிறது. இந்த மருந்தானது கொரோனா வைரசை வீழ்த்துவதற்கான ஆன்டிபாடிகளையும், டி செல்களையும் ஒருச்சேர உருவாக்குவது ‘இரட்டை பாதுகாப்பு’ வழங்கும் என விஞ்ஞானிகள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.

இந்திய மருந்து தயாரிப்பு நிறுவனம்

உலக அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் தடுப்பூசி மருந்தை இந்தியாவில் தயாரிப்பதற்கு மராட்டிய மாநிலம், புனேயை சேர்ந்த இந்திய சீரம் இன்ஸ்டிடியூட், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துடன் ஒப்பந்தம் செய்திருக்கிறது. சீரம் இன்ஸ்டிடியூட்டின் தலைவர் டாக்டர் சைரஸ் பூனவாலா, புனே நகர மகளிர் அமைப்பினருடன் ஆன்லைன் வழியாக கலந்துரையாடினார்.

அப்போது தடுப்பூசி பற்றி பேசுகையில், எங்கள் நிறுவனம், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துடனும், அதன் கூட்டாளியான அஸ்ட்ரா ஜெனேகா நிறுவனத்துடனும் ஒரு ஒப்பந்தம் செய்து இருக்கிறது. தடுப்பூசி பரிசோதனை அளவில் இருந்து வருகிறது. இது விரைவில் வெளியிடப்படும். இவ்வாண்டு டிசம்பர் மாதத்துக்குள் தடுப்பூசி தயாராக இருக்கும்.

தடுப்பூசியை பாதுகாப்பானதாகவும், நல்ல செயல்திறன் கொண்டதாகவும், எந்த பக்க விளைவுகளும் இல்லாமல் உருவாக்குவதற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. தடுப்பூசியின் அவசரம் கருதி பிற தயாரிப்பு பணிகளை நிறுத்தவும் தீர்மானித்து இருக்கிறோம். சரியான ஒப்புதல்களை பெற்ற பின்னர் பெரிய அளவில் தடுப்பூசிகள் தயாரிக்கப்படும் எனக் கூறியிருக்கிறார்.

1000 ரூபாயில்

இந்த மருந்து தயாரிப்புக்காக 1000 கோடி ரூபாய்க்கு மேல் வழங்குவதாக அரசு உறுதி அளித்து இருக்கிறது. ஏழை மக்களும் பெற்று பயன்பெறத்தக்க அளவில் மலிவான விலையில் தடுப்பூசி கிடைக்கச்செய்யவே விரும்புகிறோம். இந்தியா தவிர்த்து, ஆப்பிரிக்கா போன்ற வளர்ச்சி அடையாத நாடுகளிலும் இந்த தடுப்பூசியை கிடைக்க செய்ய வேண்டும் என்பது எங்கள் நோக்கமாகும். சில லட்சம் தடுப்பூசி ‘டோஸ்‘கள் இந்தியாவுக்கு போதுமானதாக இருக்காது. எனவே, தேவையான ஒப்புதல்களை பெற்று குறைந்தது 100 கோடி ‘டோஸ்‘ தடுப்பூசியை தயாரிக்க நாங்கள் உறுதியாக உள்ளோம் எனவும் கூறியிருக்கிறார்

சீரம் இன்ஸ்டிடியூட்டின் தலைமை செயல் அதிகாரியும், டாக்டர் சைரஸ் பூனவாலாவின் மகனுமான ஆதர் பூனவாலா, கொரோனா தடுப்பூசியின் விலை 1,000 ரூபாய்க்கு சற்று குறைவாக இருக்கும் என்று கூறியிருக்கிறார். ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்குடன் ஆதர் பூனவாலா காணொலி காட்சி மூலம் பேசியபோது வருகிற அக்டோபர் அல்லது நவம்பருக்குள் தடுப்பூசி தயாராகிவிடும் என்று தெரிவித்து உள்ளார். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக தடுப்பூசியின் முதல் கட்ட சோதனை வெற்றிகரமான முடிந்து விட்டதும், இரண்டாவது மற்றும் மூன்றாவது கட்ட பரிசோதனை மருத்துவமனையில் நடந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

0 0
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %