‘இந்தி திரையுலகில் வாரிசு அரசியல்…’ ஆஸ்கார் வென்ற பின்னர் ஏ.ஆர். ரகுமான், ரசூல் பூக்குட்டிக்கு நடந்தது என்ன…?

Read Time:7 Minute, 34 Second

சுஷாந்த் சிங் தற்கொலைக்கு பிறகு பாலிவுட் என்றழைக்கப்படும் இந்தி திரையுலகில் வாரிசு அரசியல் சர்ச்சை பெரிதாக விஸ்வரூபம் எடுத்து இருக்கிறது. சுஷாந்த் சிங் தற்கொலை தொடர்பான் விசாரணையானது ஒரு வலைப்பின்னல் போன்று நீண்டு செல்கிறது. இதற்கிடையே இந்தி திரையுலகில் வாரிசுகளின் ஆதிக்கம் குறித்து கங்கனா ரனாவத் அதிரடியான பேட்டிகளை கொடுத்து வருகிறார்.

சுஷாந்த் சிங்.

அரசியலில் ஒரு கட்சியின் தலைவரின் மகனே அக்கட்சியின் தலைவராவது; கட்சியின் அடிமட்ட தொண்டனும், தீவிரப்பணியாற்றும் தலைகளும் ஒரு காட்சிப்பொருளாகவே சுற்றிவருவார்கள். இதுதான் வாரிசு அரசியல். இது இந்தியாவில் நிரம்பியிருக்கிறது. இதேபோன்ற நிலைதான் இந்தி சினிமா உலகம் மட்டுமின்றி பிற இந்திய சினிமா உலகிலும் நிலவுகிறது. ஒப்பீட்டு முறையில் இந்தி சினிமா அதிகமாக இருக்கிறது. இந்தி சினிமாவில் ஒரு நடிகரின் மகனோ, செல்வாக்கு மிக்கவரின் ஒருவரின் உறவினரோ எளிதாக பிரபலம் ஆகலாம்.. ஆனால், திறமையிருந்தும் வெளியுலகில் இருந்து உள்ளே நுழைபவர்கள் எண்ணில் அடங்காத சோதனை தடைகளை உடைக்க வேண்டும்.

அப்படியும் முன்னேரினாலும் வாரிசுகளின் சதி நெருக்கடிகளுக்கும் பதிலடியை கொடுக்க வேண்டும். இப்படி இந்தி சினிமாவே வாரிசு அரசியலில் சுழன்று கொண்டிருக்கையில் திறமையான நடிகராக விளங்கிய சுஷாந்த் சிங் தற்கொலையானது உண்மையை அறம் கேட்கப்பட வேண்டும் என்ற நிலையை வலியுறுத்தியிருக்கிறது.

இப்போது வாரிசு அரசியல் தொடர்பாக அனைத்து திரையுலகிலிருந்தும் முன்னணி நடிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இவ்வரிசையில் ஆஸ்கார் விருது பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் மற்றும் ரசூல் பூக்குட்டி ( ‘ஸ்லம்டாக் மில்லியனர்’ படத்துக்காக ஒலிப்பதிவுக்கான ஆஸ்கர் விருது வென்றவர்) இணைந்து உள்ளனர்.

சுஷாந்த் சிங் நடிப்பில் உருவான கடைசி படமான ‘தில் பெச்சாரா’, ஜூலை 24-ம் தேதி ஓடிடி தளத்தில் இலவசமாக வெளியானது. இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார்.

இந்நிலையில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இந்தி பட உலகில் தன்னை பணியாற்ற விடாமல் தடுக்க ஒரு கும்பல் வேலை செய்கிறது என்ற திடுக்கிடும் புகாரை தெரிவித்தார். இது பரபரப்பை ஏற்படுத்தியது.

“ இந்தி பட உலகில் எனக்கு எதிராக நடக்கும் செயல்கள் குறித்து நான் கவலைப்படுவது கிடையாது. எனக்கு விதி மேல் நம்பிக்கை இருக்கிறது. அனைத்தும் இறைவனிடம் இருந்து வருகிறது. யார் மீதும் வெறுப்பு இல்லை என்றும்” அவர் கூறியுள்ளார்.

ஏ.ஆர். ரகுமான்

ஆஸ்கார் விருது பெறுவதற்கு முன்புவரை 11 வருடங்களில் ஷாருக்கானின் தில் சே, அமிர்கானின் லகான், கஜினி, ஹிருத்திக் ரோஷனின் ஜோதா அக்பர், அபிஷேக் பச்சனின் குரு உள்பட 33 இந்தி படங்களுக்கு இசையமைத்து வட இந்தியாவில் ஏ.ஆர்.ரகுமான் கொடி கட்டி பறந்தார்.

ஆனால், ஆஸ்கார் விருது பெற்ற பிறகு படங்கள் குறைந்தன. இந்தி பட உலகில் அவரது வாய்ப்புகளை தடுக்க சதி நடந்து இருப்பது இப்போது அம்பலமாகியிருக்கிறது. சமூக வலைதளத்தில் ஏ.ஆர்.ரகுமானுக்கு ஆதரவாக ரசிகர்கள் ஹேஷ்டேக்கு உருவாக்கி ஆதரவை பகிர்ந்து டிரெண்ட் செய்து வருகிறார்கள். ஆஸ்கார் விருது பெற்றவருக்கே இந்த கதி என்றால் சாதிக்க வேண்டும் என வரும் சிறு கலைஞர்களின் நிலையை யோசிக்கவே முடியாது.

ஏ.ஆர்.ரகுமான் செய்தியை பகிர்ந்து நடிகரும், இயக்குநருமான சேகர் கபூர் தனது டுவிட்டர் பதிவில், “உங்களுடைய பிரச்சினை என்னவென்று உங்களுக்கு தெரிகிறதா ரகுமான்? நீங்கள் ஆஸ்கர் விருதை பெற்றது தான். ஆஸ்கர், என்பது பாலிவுட்டுக்கு கானல் நீர் போன்றது. பாலிவுட்டை விட நீங்கள் அதிக திறமை கொண்டவர் என்பது இதன் மூலம் நிரூபணமாகிறது” என்று தெரிவித்தார். இதனையடுத்து ‘ஸ்லம்டாக் மில்லியனர்’ படத்துக்காக ஆஸ்கர் விருது வென்ற ரசூல் பூக்குட்டி, சேகர் கபூர் டுவீட்களை பகிர்ந்து தன்னுடைய பதில்களை தெரிவித்து உள்ளார்.

அதில், அன்பார்ந்த சேகர் கபூர் அவர்களே, என்னிடம் அதைப்பற்றி கேளுங்கள். இந்தி திரைப்படங்களில் யாரும் எனக்கு வாய்ப்பு தராததால் நான் கிட்டத்தட்ட விரக்தி நிலைக்கே சென்றுவிட்டேன். நான் ஆஸ்கார் வென்ற பிறகு மாநில மொழிப்படங்கள் என்னைப் பற்றிக்கொண்டன.

“நீங்கள் எங்களுக்கு தேவை இல்லை” என்று என் முகத்துக்கு நேரே சொன்ன தயாரிப்பு நிறுவனங்கள் உள்ளன. ஆனாலும் எனக்கு என் துறையை பிடிக்கும்.

ரசூல் பூக்குட்டி.

சேகர் கபூர் எனக்கு கனவு காண கற்று கொடுத்தார். ஒரு கையளவு மக்கள் என்னை நம்பினார்கள் இன்னும் நம்பிக்கையை வைத்திருக்கிறார்கள். நான் எளிதாக ஹாலிவுட்டுக்கு நகர்ந்திருக்கலாம். ஆனால், நான் அதை செய்யவில்லை. அதனை செய்யவும் மாட்டேன்.ஏனென்றால் இந்தியாவில் நான் செய்த பணிக்குத்தான் எனக்கு ஆஸ்கர் விருது கிடைத்தது. ஆறுமுறை MPSE விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டு அதனை வென்றிருக்கவும் செய்துள்ளேன். இவை அனைத்துமே நான் இங்கு செய்த பணிக்காகத்தான். எங்கும் நமக்கு எதிராக வேலை செய்யும் ஆட்கள் எப்போதுமே இருப்பார்கள். ஆனால், எல்லாவற்றையும் விட என் மக்கள் மீது எனக்கு அதிக நம்பிக்கை உள்ளது.

இதுகுறித்து அகாடமியில் இருக்கும் எனது நண்பர்களிடம் பேசியபோது அவர்கள் என்னிடம் ஆஸ்கர் சாபத்தை பற்றி பேசினார்கள். இது அனைவராலும் எதிர்கொள்ளப்படும் ஒன்று தான். நான் அந்த காலகட்டத்தை ரசிக்கவே செய்தேன். ஏனென்றால் நாம் வெற்றியின் உச்சியில், உலகின் மேலே மிதக்கும் அதே நேரம் மக்கள் நம்மை நிராகரிக்கும் போது அது தான் நமக்கு எதார்த்தத்தை மிகப்பெரிய அளவில் புரியவைக்கும்” எனக் கூறியிருக்கிறார்.