குருவிகளுக்காக இருளில் வாழ்ந்த தமிழக கிராம மக்கள்… ஒரு நெகிழ்ச்சி சம்பவம்…

Read Time:6 Minute, 59 Second
Page Visited: 357
குருவிகளுக்காக இருளில் வாழ்ந்த தமிழக கிராம மக்கள்… ஒரு நெகிழ்ச்சி சம்பவம்…

மரங்கள் அழிப்பு, வேட்டையாடுதல், அதிகரிக்கும் மொபைல் போன் டவர்கள், நகரமயமாக்கல், சுற்றுச்சூழல் பாதிப்பு ஆகியவற்றால் பறவையினங்கள் இன்று அரிதாகி வருகின்றன.

‘கீச்… கீச்… கீச்…’ என்ற செல்ல குரலில் காலையிலேயே சங்கீதம் பாடும் குருவிகள் இன்று, தனது இறுதி அத்தியாயத்தை எழுதி கொண்டு இருக்கிறது என்றே சொல்லலாம். சில குருவி வகைகள்தேடி பார்த்தாலும் கிடைக்காத அரிய இனமாக உருவெடுத்து இருக்கிறது. இதன் பின்னணியில் மனிதன் இருக்கிறான் என்பது தான் வேதனையின் உச்சமாகும்.

மறுபுறம் இதே குருவி இனங்கனங்களை காக்கவும், மீட்டெடுக்க உறுதி எடுத்து சில நல்ல உள்ளங்கள் இப்போதும் நற்செயல்கள் ஆற்றிவருவது மிகவும் மகிழ்ச்சிக்குரியது.

இப்படிப்பட்ட ஒரு சம்பவம்தான் சிவகங்கை மாவட்டம் மறவமங்கலம் அருகே பொத்தக்குடி கிராமத்தில் நடந்திருக்கிறது. இக்கிராமத்தில் குருவிக்காக ஊர் மக்கள் 45 நாட்கள் இருளில் வாழ்நது உள்ளனர். இக்கிராமத்தில் 500-க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் விவசாயிகளாக இருக்கின்றனர்.

இக்கிராமத்தில் உள்ள 22 தெரு விளக்குகளை இயக்குவதற்கான சுவிட்ச் பெட்டி ஒரு மின்கம்பத்தில் பொருத்தப்பட்டு உள்ளது. சுவிட்ச் அமைந்துள்ள பெட்டிக்குள் தஞ்சம் அடைந்திருந்தது, சின்னஞ்சிறு குருவி. அந்த பெட்டிக்குள் முதலில் விருந்தினர் போல் சென்று வந்த அக்குருவி, அதற்குள் கூட்டினை கட்ட தொடங்கியதும் அந்த கிராமத்தாரின் பார்வையில் பட்டது. கூட்டை யாரும் தொடவில்லை என்பதை உறுதி செய்து கொண்ட அந்த குருவி, பின்னர் அதில் முட்டைகள் இட்டுள்ளது.

ஒருகட்டத்தில் கூடு சுவிட்சை மறைத்துவிட்டது. கூட்டை கலைத்தால் முட்டைகள் உடைந்து விடும். குருவியும் அச்சத்தில் பறந்துவிடும் என மனிதாபிமான எண்ணம் கொண்ட கிராம மக்கள், நாம் இருளில் நடந்தாலும் பரவாயில்லை; கூட்டில் யார் கையும் பட்டுவிடக்கூடாது என முடிவு செய்து உள்ளனர். இதை பார்த்த இளைஞர்கள் குருவிக்கூட்டை கலைக்க மனமின்றி சுவிட்சை இயக்குவதை நிறுத்தி தெருவிளக்குகள் ஒளிர்வதை தவிர்த்தனர்.

மேலும், குருவி அடைகாத்து குஞ்சுகளுடன் வெளியேறும் வரை சுவிட்சை இயக்க வேண்டாம் என கிராம பெரியவர்களிடமும் கேட்டுள்ளனர். இதையடுத்து சுவிட்சை இயக்காததால் ஒட்டுமொத்த கிராமமே தெருவிளக்குகள் எரியாமல் பல நாட்களாக இருளில் மூழ்கியிருக்கிறது.. இப்படியே நாட்களும் நகர்ந்தன.

இதற்கிடையே குருவி அடைகாத்து 3 குஞ்சுகளை பொறித்து உள்ளது. இதனையடுத்து தாய் குருவியும், குஞ்சுகளும் பயப்படாமல் இருக்க சுவிட்ச் பெட்டி அருகே யாரும் நடந்து செல்லக்கூட இளைஞர்கள் தடை விதித்து உள்ளனர்.

இதற்கிடையே குஞ்சுகள் கண் விழித்து பறக்கும் நிலையை அடைந்துவிட்டன. நேற்று முன்தினம் தாய் குருவியும், குஞ்சுகளும் வானில் வட்டமிட்டு கிராம மக்களுக்கு நன்று சொல்லி பறந்துவிட்டன. அவற்றை கிராம மக்கள் மகிழ்ச்சியுடன் வழியனுப்பி வைத்தனர். அதன்பிறகே தெரு விளக்குகளுக்கு மின் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

பொத்தக்குடி கிராமத்தினரின் இந்த மனிதாபிமான செயலை அனைத்து தரப்பினரும் பாராட்டி வருகின்றனர். அனைத்து செய்தி மீடியாக்களிலும் செய்திகள் வெளியாகி வருகிறது.

குருவிகள் அழிந்துவரும் இக்காலக்கட்டத்தில் அவைகளின் இனப்பெருக்கத்தை பாதுகாத்து பத்திரமாக செல்லவே இம்முடிவை மகிழ்ச்சிக்கராமாக எடுத்தோம் என கிராம மக்கள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.

“கரிச்சான் குருவி போன்ற பறவையினங்கள் இப்போது அரிதாகி வருகின்றன. அந்த இனங்களை பாதுகாப்பது நமது கடமை. எனவே, இந்த குருவிகளுக்காக தெரு விளக்குகளை எரியவிடாமல் 45 நாட்கள் இருளில் வாழ்ந்தது சுமையாக தெரியவில்லை. இக்குருவிகள் எங்கள் கிராம மக்களை ஒற்றுமைப்படுத்தி விட்டன,” என கிராம இளைஞர்கள் தெரிவித்து உள்ளனர்.

“குருவியினம் நாளுக்கு நாள் அழிந்து கொண்டே வருகிறது. அறிவியல் வளர்ச்சி, அடுக்குமாடி குடியிருப்புகளால் குருவிகள் வசிக்க இடமின்றி தவிக்கும் நிலை ஏற்படுகிறது. செல்போன் டவரில் இருந்து வரும் கதிர் வீச்சுகளால் இவை அழிந்து வருவதாக சொல்கிறார்கள். செல்போன் டவர் இல்லாத ஒரு சில கிராமங்களில் தான் சின்னஞ்சிறு குருவி இனத்தை அதிகமாக பார்க்க முடிகிறது.

எனவே, எங்கள் கிராமத்தில் அடைக்கலம் புகுந்த குருவியை பாதுகாக்க அனைவரும் முடிவு எடுத்தோம். அதன்படி குருவி கூட்டை பாதுகாத்து வந்தோம். இப்போது குருவி குஞ்சுகளை பொறித்து மகிழ்ச்சியாக சென்றது மனதில் மிகவும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது என கிராம மக்கள் தெரிவித்து உள்ளனர்.

0 0
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %