‘லேப் டெஸ்ட் இல்லை…’ வெறும் 30 நொடிகளில் கொரோனா தொற்றை கண்டறியலாம்…! இஸ்ரேல் தயாரிப்பு கருவி செயல்படுவது எப்படி…?

Read Time:5 Minute, 53 Second

கொரோனா வைரஸ் பரிசோதனைகள் முடிவுகள் கிடைப்பதில் காலதாமதம் நிலவுவதாக கூறப்படும் நிலையில், வெறும் 30 நொடிகளில் கொரோனா தொற்றை கண்டறியும் வகையில் கருவியொன்றை இஸ்ரேல் நிறுவனம் தயாரித்து இருக்கிறது.

கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான போரில் முக்கிய நடவடிக்கைகளில் ஒன்றாக வேகமான பரிசோதனை முறை இருந்து வருகிறது. தொற்று பாதித்தவர்களை விரைவில் கண்டறிந்து, மற்றவர்களிடம் இருந்து தனிமைப்படுத்தினால் வைரஸ் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த முடியும். ஆனால், தற்போதைய நிலையில் பரிசோதனை முடிவுகள் கிடைப்பதில் கால தாமதம் ஏற்படுகிறது.

பாதிக்கப்பட்டவர்கள், அறிகுறி கொண்டவர்களின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வகம் சென்று பரிசோதனை முடிவானது கிடைக்க காலதாமதம் ஏற்படுகிறது. இதனால், பாதிக்கப்பட்டவர்கள் மூலம் மற்றவர்களுக்கு பரவும் ஆபத்தும் அதிகமாக நிலவுகிறது.

மேலும், பரிசோதனை கருவிகளின் உற்பத்தி, விலை மற்றும் விற்பனை உள்ளிட்ட காரணங்களால் இன்னும் பல நாடுகளில் அவைகளுக்கு தட்டுப்பாடு நிலவி வருகிறது.

கொரோனா வைரஸ் தொற்று தொடர்பாக விரைந்து விரிவான சோதனையை மேற்கொள்ள வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு கேட்டுக்கொண்டு வருகிறது. இந்நிலையில் தொற்றை விரைந்து கண்டுபிடிக்கும் முறையில் ஒரு நேர்மறையான நகர்வு ஏற்பட்டுள்ளது. அதாவது, இஸ்ரேலை சேர்ந்த NanoScent நிறுவனம் வெறும் 30 நொடிகளில் கொரோனா வைரஸ் தொற்றை கண்டுபிடிக்கும் வகையிலான கருவியை உருவாக்கியிருக்கிறது.

இந்த கருவி செயல்படுவது எப்படி…?

இந்த கருவியில் ஒருவரின் மூச்சுக்காற்றை கொண்டே கொரோனா வைரஸ் தொற்று கண்டுபிடிக்கப்படுகிறது.

கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டவர்கள் உடனான தொடர்பு; மற்றும் அறிகுறிகள் உள்ளிட்ட கேள்விகள் பரிசோதனை மேற்கொள்பவர் வைத்திருக்கும் திறன் பேசியில் கேட்கப்படும்.

பின்னர் பரிசோதனைக்கு உட்படுபவர் நன்றாக மூச்சை உள்ளே இழுத்து, மூக்கின் ஒரு துழை வழியாக ஆய்வுக்கு பயன்படுத்தப்படும் ஏர்பேக்கில் மூச்சு காற்றை ஒரு குழாயின் வழியாக செலுத்த வேண்டும்.

இந்த மூச்சுக்காற்று அடங்கிய ஏர்பேக்கில் பொருத்தப்பட்டிருக்கும் குழாயானது சென்சிடார் எனப்படும் ஒரு சிறிய செவ்வக வடிவிலான கருவியில் செருகப்படும். இந்த கருவியானது பையிலிருந்து காற்றை உள்ளே இழுக்கும் போது மென்மையாக சுற்றும். அடுத்த சில நொடிகளில் நோய்தொற்றுக்கான முடிவு திறன்பேசியில் வெளிவரும் என ஏஎப்பி செய்தி நிறுவனம் செய்தியில் தெரிவித்து இருக்கிறது.

வடக்கு இஸ்ரேலில் உள்ள NanoScent நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்கள் இந்த கருவியை மென்மேலும் திறனாக்க தேவையான பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

இந்த கருவியானது முழுக்க முழுக்க கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டவர்களின் மூச்சுகாற்றின் வாசம் கொண்டே செயல்படுகிறது என நிறுவனத்தின் தலைமை அதிகாரி கூறியிருக்கிறார்.

இதற்காக இஸ்ரேலில் 6000 கொரோனா தொற்று நோயாளிகளின் சுவாசத்தின் வாசம் ஆராயப்பட்டுள்ளது. இதனையடுத்து வைரசுடன் தொடர்புடைய வாசத்தை அடையாளம் கண்டதாக அந்நிறுவனம் தெரிவிக்கிறது. இஸ்ரேலில் இந்த கருவியை பரிசோதனை பார்த்ததில் 85 சதவீதம் சரியான முடிவை தெரிவிப்பதாக தெரியவந்துள்ளது. இந்த கருவியானது கொரோனாவுக்கு எதிரான போரில் முன்னணியில் செயல்படும் என நம்பப்படுகிறது. இந்த கருவிக்கு அடுத்த சில மாதங்களில் ஒப்புதல் வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

கொரோனா வைரஸ் பரிசோதனையில் தற்போது நடைமுறையில் இருக்கும் ஆய்வக முறைக்கு மாற்றாக இம்முறை இருக்க முடியாது. ஆனால், பெருமளவில் பாதிக்கப்பட்ட நாடுகளில் இந்த கருவியை பயன்படுத்தி அதில் நோய் தொற்று உள்ளவர்களை கண்டறிந்து முழுமையான பரிசோதனையை மேற்கொள்ளலாம் என அந்நிறுவன செயல் அதிகார் கூறுகிறார்.

இப்போது விமான நிலையங்கள், ரெயில் நிலையங்களில் மனிதர்களின் உடல்வெப்ப நிலையை பரிசோதனை செய்யும் கருவிகள் பயன்படுத்தப்படுகிறது. அதனுடன், இஸ்ரேல் தயாரிப்பான இந்த கருவியையும் பயன்படுத்தலாம் என யோசனைக் கூறப்படுகிறது. இதற்காக சராசரியாக ஒருவருக்கு ரூ. 200 செலவாகும் என NanoScent நிறுவனம் தெரிவிக்கிறது. இந்த கருவியானது பயன்பாட்டுக்கு வருவது மிகவும் பயனுள்ள மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.