ராஜஸ்தான் அரசியல் நெருக்கடி: மாயாவதியின் முடிவு அசோக் கெலாட்டிற்கு பெரும் அடியாக இருக்கும்..! எப்படி…? விளக்கம்

Read Time:11 Minute, 28 Second
Page Visited: 377
ராஜஸ்தான் அரசியல் நெருக்கடி: மாயாவதியின் முடிவு அசோக் கெலாட்டிற்கு பெரும் அடியாக இருக்கும்..! எப்படி…?  விளக்கம்

மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளராக ராஜஸ்தானில் 2018 சட்டப்பேரவை தேர்தலில் வெற்றிப்பெற்ற 6 எம்.எல்.ஏ.க்களை அசோக் கெலாட் தலைமையிலான அரசாங்கத்திற்கு எதிராக வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது.

ஒரு தேசியக் கட்சியின் மாநிலப்பிரிவு காங்கிரசுடன் இணைக்க அனுமதிப்பது தொடர்பான சபாநாயகரின் முடிவை பகுஜன் சமாஜ் கட்சி நிராகரிக்கிறது (கீழே விரிவாக பார்கலாம்). இப்போது ராஜஸ்தான் அரசியல் நெருக்கடியில் ஏற்பட்டுள்ள புதிய ‘டுவிஸ்ட்’ பற்றி விளக்கமாக தெரிந்துக்கொள்வோம்.

ராஜஸ்தான் சட்டப்பேரவையில் பலம் என்ன…?

ராஜஸ்தான் சட்டசபையில் காங்கிரஸ் பலம் விபரம்:-

200 உறுப்பினர்களை கொண்ட ராஜஸ்தான் சட்டசபையில் ஆட்சியமைக்க 101 பேரின் ஆதரவு இருந்தால் போதுமானது. 2018-ல் அங்கு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் 99 தொகுதிகளில் வென்றது. அப்போது பகுஜன் சமாஜ் மற்றும் சுயேட்சைகள் உதவியுடன் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் அரசு ஆட்சிக்கு வந்தது. அப்போது துணை முதல்வராக சச்சின் பைலட் பொறுப்பு ஏற்றார். பின்னர் நடைபெற்ற இரண்டு சட்டப்பேரவை இடைத்தேர்தலில் காங்கிரஸ் வென்றது. இதனால் காங்கிரஸ் கட்சியின் பலம் மட்டுமே அவையில் 103 ஆக உயர்ந்தது. இந்நிலையில் தான் சச்சின் பைலட் அக்கட்சியுடன் மோதல் போக்கில் விலகி நிற்கிறார். அவருக்கு 18 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இப்போது அசோக் கெலாட்டின் காங்கிரஸ் அரசாங்கம் ராஜஸ்தான் சட்டப்பேரவையில் மெல்லிய பெரும்பான்மையில் தொங்கிக்கொண்டு இருக்கிறது. 200 உறுப்பினர்களை கொண்ட சட்டப்பேரவையில் 103 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருப்பதாக கெலாட் தரப்பு கூறுகிறது. இதில், 6 பேர் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளராக ராஜஸ்தானில் 2018 சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்டு வென்றவர்கள் ஆவார். இப்போது அவர்களை அசோக் கெலாட் தலைமையிலான அரசாங்கத்திற்கு எதிராக வாக்களிக்குமாறு மாயாவதி கட்சி கேட்டுக்கொண்டுள்ளது.

மாயாவதியின் இந்த முடிவானது அசோக் கெலாட்டிற்கு பெரும் அடியாக இருக்கும் என்றே பார்க்கப்படுகிறது.

ராஜஸ்தானில் மாயாவதி கட்சி எம்.எல்.ஏ.க்கள் பிரச்சினை தான் என்ன….?

2018-ல் ராஜஸ்தானில் சட்டப்பேரவை தேர்தலில் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியானது 6 எம்.எல்.ஏ.க்களை கொண்டிருந்தது. காங்கிரஸ் தலைமையிலான அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு தெரிவிப்பதாக தெரிவித்தது. ஆனால், காங்கிரஸ் சூழ்ச்சியால் 6 எம்.எல்.ஏ.க்களும் அப்படியே காங்கிரஸ் பக்கம் தாவினர். அதாவது 2019 செப்டம்பரில் மாநில பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்து காங்கிரசிற்கு கூண்டோடு ஐக்கியமானார்கள். சபாநாயகர் சி.பி. ஜோஷி இந்த இணைப்பை அரசியலமைப்பின் பத்தாவது அட்டவணை அல்லது கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் செல்லுபடியாகும் என்று ஏற்றுக்கொண்டார். இதனால் பகுஜன் சமாஜ் கட்சிக்கு எம்.எல்.ஏ.க்கள் இல்லாத நிலையாகிவிட்டது. இதனால், காங்கிரஸ் மீது மாயாவதி கடும் கோபம் கொண்டார்.

ராஜஸ்தான் மாநிலத்தில் பகுஜன் சமாஜ் கட்சியை காங்கிரசுடன் இணைக்கும் சபாநாயகரின் முடிவை எதிர்த்து அக்கட்சி தேர்தல் ஆணையத்தை நாடியது. மறுபுறமோ அங்கு எதிர்க்கட்சியாக இருக்கும் பா.ஜனதாவும் தனது கட்சியின் எம்.எல்.ஏ மதன் திலாவர் மூலம் சபாநாயகர் முடிவுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தை நாடியிருக்கிறது.

கெலாட் அரசுக்கு எதிராக வாக்களிக்க மாயாவதி உத்தரவு…

இந்நிலையில் ராஜஸ்தான் சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரப்பட்டால் கெலாட் தலைமையிலான அரசுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என 6 எம்.எல்.ஏ.க்களுக்கு மாயாவதியின் பகுஜன் சமாஜ் கொறாடா உத்தரவை பிறப்பித்து இருக்கிறது.

இதுகுறித்து அக்கட்சியின் தலைவரும், மாயாவதியின் நெருங்கிய உதவியாளருமான சதீஷ் சந்திர மிஸ்ரா விளக்கம் அளித்து ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் பேசுகையில், “பகுஜன் சமாஜ் கட்சி ஒரு தேசியக் கட்சியாகும், தேசிய அளவில் பகுஜன் சமாஜ் கட்சி ஒன்றிணைக்கப்படாவில்லை என்றால் ஆறு எம்.எல்.ஏ.க்களின் விவகாரத்தில் மாநில அளவில் எந்த இணைப்பும் சாத்தியமாக இருக்க முடியாது” என்று கூறியிருக்கிறார். அதாவது தேசியக் கட்சியின் ஒரு மாநில பிரிவானது இணைப்பு தொடர்பாக முடிவுகளையோ, செயல்திட்டத்தையோ எடுக்க முடியாது என விளக்குகிறார்.

இதுபோன்றதொரு மற்றொரு வழக்கானது தெலுங்கானா உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. அதாவது, தெலுங்கானா சட்டப்பேரவையில் 18 காங்கிரஸ் எம்.எல்.ஏக்களில் 12 பேர் அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவின் ஆளும் தெலுங்கானா ராஷ்டிர சமிதியில் இணைந்தனர். இதற்கும் சபாநயாகர் அனுமதி வழங்கியிருந்தார். இவ்வழக்கு உயர்நீதிமன்றத்தில் இருக்கிறது.

கட்சி தாவல் தடை சட்டம் சொல்வது என்ன…?

ஒரு அரசியல் கட்சியின் சார்பில் தேர்தலில் போட்டியிட்டு வென்ற உறுப்பினர்கள் வேறொரு கட்சிக்கு செல்வதை தடுக்கும் நோக்கில் கட்சி தாவல் தடை சட்டமானது 1985-ல் இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் 52-வது திருத்தத்தின்படி 10-வது அட்டவணையில் சேர்க்கப்பட்டது. இதன்படி ஒரு கட்சியின் சார்பில் தேர்வான எம்.பி.யோ, எம்.எல்.ஏ.யோவோ மற்றொரு கட்சியில் சேர்ந்தால் அல்லது கொறடா உத்தரவை மீறி வாக்களித்தால் அவர்களது பதவி பறிபோகிவிடும். ஆனால், ஒரு கட்சியின் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள், மற்றொரு கட்சிக்கு தாவினார்கள் என்றால் அது கட்சி பிளவாக கருதப்படும். அந்த உறுப்பினர்களின் பதவி பறிபோகாது.

இருப்பினும் எம்.எல்.ஏக்கள் அல்லது எம்.பி.க்கள் ஒரு அரசியல் கட்சியிலிருந்து மற்றொரு கட்சிக்கு தாவுவது குறித்து கட்சி தாவல் தடை சட்டம் பொருந்தாதபோது என்ன நகர்வு என்பதை பத்தாவது அட்டவணையின் நான்காவது பத்தி விளக்குகிறது. அது எம்.எல்.ஏ. அல்லது எம்.பி.க்கள் தகுதியிழப்பிலிருந்து பாதுகாப்பதற்கான ஒரு நிபந்தனையை திட்டவட்டமாக முன்வைக்கிறது: அதாவது, “அவருடைய அசல் அரசியல் கட்சி மற்றொரு அரசியல் கட்சியுடன் ஒன்றிணைகிறது”. என்பதாகும். எளிமையான சொற்களில் சொல்லப்போனால் ராஜஸ்தானில் பகுஜன் சமாஜ் சார்பில் போட்டியிட்டு வென்ற 6 எம்.எல்.ஏ.க்கள் தங்களுடைய கட்சியை காங்கிரசுடன் இணைவதாக அறிவிக்க எந்தஒரு பிரத்யேக உரிமை இல்லை என்பதுதான்.

மேலும், கட்சியை பிரிதொரு கட்சியுடன் இணைக்கும் விவகாரத்தில் கட்சி தலைமையானது ஒருதலைப்பட்ச முடிவை எடுப்பதை தடுக்கவும் எம்.எல்.ஏ.க்களுக்கு வழியை ஏற்படுத்திக்கொடுக்கிறது. மேலும், தங்களுடைய கட்சி பிற கட்சியுடன் இணைய விரும்பும் போது அதை ஏற்காத உறுப்பினர்களை தகுதி நீக்கத்திலிருந்து இப்பிரிவு காப்பாற்றவும் செய்கிறது. ராஜஸ்தான் விவகாரத்தை பொறுத்தமட்டில், ஆறு பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏக்களும், மாநில காங்கிரஸ் பிரிவும் தாங்களாகவே செயல்பட்டு உள்ளன என்பது தெளிவாகிறது.

கெலாட்டிற்கு பெரும் அடியாக அமையும்…

மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி ஒரு தேசியக் கட்சியாகும். அதன் மத்திய தலைமை பகுஜன் சமாஜ் கட்சி அல்லது அதன் மாநில பிரிவை காங்கிரஸ் கட்சியுடன் இணைப்பதை அங்கீகரிப்பதற்கான அறிவிப்பை வெளியிடவில்லை. இணைப்பிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் போது சபாநாயகர் அதிகார வரம்பில்லாமல் செயல்பட்டார் என்ற வாதத்தில் பகுஜன் சமாஜ் கட்சியும், பா.ஜனதாவும் நிற்கின்றன. இப்போது, பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏக்கள் உண்மையில் பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏ.க்களாக இருந்து அக்கட்சியின் கொறடா உத்தரவுப்படி வாக்களித்தால், அசோக் கெலாட் அரசாங்கம் கடுமையான சிக்கலில் சிக்கும். மற்றும் பெரும் அடியை எதிர்க்கொள்ளும். சட்டப்பேரவையில் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசின் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கை 90 ஆக குறைந்துவிடும்.

0 0
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %