‘30 ஆயிரம் பேருக்கு செலுத்தப்பட்டது…’ இறுதிக்கட்ட பரிசோதனையில் இருக்கும் அமெரிக்கா உருவாக்கிய தடுப்பூசி பாதுகாப்பானதா…? விபரம்:-

Read Time:4 Minute, 56 Second
Page Visited: 371
‘30 ஆயிரம் பேருக்கு செலுத்தப்பட்டது…’ இறுதிக்கட்ட பரிசோதனையில் இருக்கும் அமெரிக்கா உருவாக்கிய தடுப்பூசி பாதுகாப்பானதா…? விபரம்:-

சீனாவில் கடந்த ஆண்டு இறுதியில் உருவாகிய கொரோனா வைரஸ் சுமார் 8 மாதங்களாக உலக நாடுகளை ஆக்கிரமித்து வருகிறது.

இதில் தினமும் இந்த வைரஸ் தொற்றுக்கு ஆயிரக்கணக்கான மக்கள் பலியாகியும், ஆயிரக்கணக்கானோர் புதிதாக தொற்றுக்கு ஆளாகியும் வருகின்றனர். எனவே, இந்த ஆட்கொல்லி வைரசை கட்டுப்படுத்த தடுப்பூசியை உருவாக்கும் பணிகளில் அனைத்து நாடுகளும் தீவிரமாக இறங்கி உள்ளன. இதில் பல நாடுகள் தொடக்ககட்ட வெற்றியை பெற்றிருக்கின்றன. பல்வேறு தடுப்பூசி மருந்துகள் மனித பரிசோதனையை எட்டியிருக்கின்றன. இதனால் இந்த தடுப்பூசி தயாரிக்கும் பணிகள் முக்கிய கட்டத்தை அடைந்து உள்ளன என பார்க்கப்படுகிறது.

இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் போன்றவை தயாரித்த தடுப்பூசி இறுதிக்கட்ட சோதனையை எட்டியிருக்கிறது. பிரேசில் போன்ற அதிக பாதிப்பு உள்ள நாடுகளில் இந்த தடுப்பூசிகள் இறுதிக்கட்ட சோதனைக்கு உட்படுத்தப்பட்டு இருக்கிறது.

பாதுகாப்பானதா…?

இதைப்போல அதிகமாக பாதிக்கப்பட்ட அமெரிக்காவும் தடுப்பு மருந்து தயாரிக்கும் பணியில் அதிதீவிரமாக செயல்பட்டு வருகிறது. அமெரிக்காவின் தேசிய சுகாதார அமைப்பும், மாடர்னா நிறுவனமும் ( National Institutes of Health and Moderna Inc) இணைந்து தயாரித்த தடுப்பூசி ஏற்கனவே தொடக்ககட்ட சோதனைகளை வெற்றிகரமாக முடித்து இருந்தது.

இந்த தடுப்பூசி இறுதிக்கட்ட சோதனையை எட்டியுள்ள போதிலும், இது பாதுகாப்பானதா…? என்ற கேள்வியானது வெகுவாக எழுகிறது. இந்த தடுப்பூசியின் முதற்கட்ட சோதனையில் பங்கேற்றவர்களுக்கு காய்ச்சல், தடுப்பூசி போடப்பட்ட இடத்தில் வலி போன்ற சின்னச்சின்ன பக்க விளைவுகள் இருந்து இருக்கிறது. ஆனால், தடுப்பூசி போட்டவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. எதிர்ப்பு சக்தி உருவாக்கம் கொரோனாவை எதிர்த்து நிற்பதற்கு இது முக்கிய தேவை என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் தொடர்ச்சியாக இந்த தடுப்பூசியின் இறுதிக்கட்ட பரிசோதனை திங்கள் கிழமை தொடங்கியிருக்கிறது.

30 ஆயிரம் பேர்…

இதில் அமெரிக்கா முழுவதிலும் இருந்து 30 ஆயிரம் தன்னார்வலர்களுக்கு இந்த தடுப்பூசி செலுத்தப்பட்டது. இவர்களில் பாதிக்கும் மேற்பட்டோருக்கு உண்மையான மருந்தும், மீதமுள்ளவர்களுக்கு போலி மருந்தும் செலுத்தப்பட்டு உள்ளது. இவர்கள் அனைவரையும் மருத்துவ நிபுணர்கள் தொடர்ந்து கண்காணிக்கின்றனர். ஒரே முறையாக 30 ஆயிரம் பேரிடம் தடுப்பூசி பரிசோதனை நடத்துவது முக்கியமான நகர்வாக பார்க்கப்படுகிறது.

முன்னதாக இந்த தடுப்பூசியை பல்வேறு இனத்தினர், பலவேறு வயதுக்குட்பட்டவர்கள் என அமெரிக்காவின் பன்முகத்தன்மையை பிரதிபலிக்கும் மக்களிடம் செலுத்தி சோதிக்க வேண்டியது முக்கியமானது என நிபுணர்கள் கூறியிருந்தனர். அந்தவகையில் தற்போது பல்வேறு பகுதிகளை சேர்ந்த மக்களிடம் இந்த தடுப்பூசி செலுத்தி சோதிக்கப்பட்டு வருகிறது. இந்த தடுப்பூசியின் தொடக்ககட்ட சோதனையில் பங்கேற்றவர்கள், மற்றவர்களையும் ஊக்கப்படுத்தி வருகின்றனர். இதனால் தடுப்பூசி பரிசோதனைக்கு 1½ லட்சம் பேர் வரை பதிவு செய்திருந்தனர். இம்மருந்து கொரோனாவுக்கு எதிரான சோதனையில் வெற்றியடைந்தால் விரைவில் பயன்பாட்டுக்கு வரும்..

0 0
Happy
Happy
100 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %