மிக்-21 முதல் ரபேல் வரையிலான ஜெட் விமானங்கள்…. இந்திய விமானப்படை வாங்கிய முக்கிய போர் விமானம் விபரம்:- படங்களுடன்…

Read Time:8 Minute, 30 Second

1961-ம் ஆண்டில் ரஷ்யாவின் மிகோயன்-குருவிச் நிறுவனம் தயாரித்த மிக்-21 ரக விமானத்தை தேர்ந்தெடுப்பதில் இருந்து புதன்கிழமை ஐந்து பிரான்ஸ் தயாரிப்பு ரபேல் ஜெட் விமானங்களை பெறுவது வரையில் இந்தியா தனது வான்வழித் தாக்குதலை வலுப்படுத்த நீண்ட தூரம் பயணம் செய்திருக்கிறது. பல ஆண்டுகளாக சில முக்கிய போர் ஜெட் விமானங்கள் வாங்குதல் மற்றும் அவை கொண்டிருக்கும் போர் செயல்திறன்கள் ஆகியவை இந்திய விமானப்படையின் பலத்தை அளவீடும் சக்தியாக மாறியிருக்கிறது. இந்திய விமானப்படை வாங்கிய முக்கிய போர் விமானங்கள் பற்றிய தகவல்களை அறிந்துக்கொள்வோம்.

ரபேல் போர் விமானங்கள்

ஏறக்குறைய இரண்டு தசாப்தங்களில் பிரான்ஸ் தயாரிப்பு ஐந்து ரபேல் ஜெட் போர் விமானங்களின் வருகையுடன் இந்தியா தனது முதல் தொகுதி புதிய மல்டிரோல் போர் விமானங்களை பெற்றிருக்கிறது. இது நாட்டின் விமானப்படையின் சக்தியை மேலும் அதிகரித்து இருக்கிறது.

இந்திய விமானப்படைக்கு பிரான்சில் இருந்து 36 ரபேல் போர் விமானங்களை வாங்குவதற்காக கடந்த 2016-ம் ஆண்டு இரு நாட்டு அரசுகளுக்கு இடையேயான ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. ரூ.59 ஆயிரம் கோடிக்கு வாங்கப்படும் இந்த விமானங்களை பிரான்சின் டசால்ட் நிறுவனம் தயாரித்து வழங்குகிறது. டசால்ட் நிறுவனத்தின் இந்த நவீன போர் விமானங்கள் மிக முக்கியமான ஆயுதங்களை சுமந்து செல்லும் திறன் பெற்றவை. குறிப்பாக ஐரோப்பிய ஏவுகணை தயாரிப்பாளரான எம்.பி.டி.ஏ.வின் ‘மெடடோர்’ ஏவுகணை (வானில் இருந்து வானுக்கு) மற்றும் ஸ்கால்ப் நாசகாரி ஏவுகணைகளை சுமந்து செல்லும் திறன் பெற்றது.

கண்ணுக்கு எட்டிய தொலைவுக்கு அப்பால் சென்று தாக்கும் திறன் கொண்ட அடுத்த தலைமுறை ஏவுகணைகளான ‘மெடடோர்’ ஏவுகணைகள், ஒரு புரட்சிகர தயாரிப்பாக பார்க்கப்படுகிறது. அமெரிக்கா, ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ், ஸ்பெயின், சுவீடன் போன்ற நாடுகள் பொதுவாக எதிர்கொள்ளும் சவால்களை சமாளிக்கும் வகையில் இந்த ஏவுகணைகள் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

இந்த முக்கியமான ஏவுகணைகளை சுமந்து செல்வது மட்டுமின்றி, இந்தியாவுக்காக மேலும் சிறப்பான முறையில் பல மாற்றங்கள் இந்த ரபேல் போர் விமானத்தில் செய்யப்பட்டு உள்ளன. குறிப்பாக ரேடார் எச்சரிக்கை வாங்கிகள், ஜாமர்கள், 10 மணிநேர விமான தரவு பதிவு, தேடுதல் மற்றும் வழிகாட்டி அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்கள் இந்த விமானங்களில் இடம்பெறுகிறது.


சுகோய் -30 எம்.கே.ஐ.

ரஷ்ய மேம்பட்ட போர் விமானங்களில் முதன்மையானதாக பார்க்கப்படும் சுகோய் -30 எம்.கே.ஐ. விமானங்கள் இந்திய விமானப்படையில் 2002-ம் ஆண்டில் இணைக்கப்பட்டது. இந்த போர் விமானங்கள் வானிலிருக்கும் இல்லைக்கையும், நிலத்திலிருக்கும் இலக்கையும் தாக்கும் வல்லமை கொண்டது. இது, ரஷ்ய வம்சாவளியை சேர்ந்த இரட்டை இருக்கை, இரட்டை எஞ்சின் மல்டிரோல் ஃபைட்டர் விமானம் ஆகும். இது One X 30mm GSH gun துப்பாக்கியையும், 8000 கிலோ வெளிப்புற தாக்குதல் ஆயுதங்களையும் கொண்டிருக்கும். இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 2500 கிமீ தூரமாகும். வானில் நடுத்தர தொலைவில் வரும் ஏவுகணைகளை மிகவும் துல்லியமாக தாக்கும் திறனை கொண்டது.


மிராஜ் 2000

இந்திய விமானப்படையில் (ஐ.ஏ.எஃப்) மிகவும் அதிகமாக பயன்பாட்டிலிருக்கும் மற்றும் ஆபத்தான விமானங்களில் ஒன்றான மிராஜ் -2000 போர் விமானங்கள் முதன்முதலில் 1985-ல் இயக்கப்பட்டது. மிராஜ் -2000 பிரான்சின் டசால்ட் ஏவியேஷன் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது. இது ஒற்றை இருக்கை வான் பாதுகாப்பு மற்றும் ஒற்றை இயந்திரத்தால் இயக்கப்படும் பிரெஞ்சு வம்சாவளியை சேர்ந்த மல்டி-ரோல் ஃபைட்டர் போர் விமானம் ஆகும். இது மணிக்கு 2495 கிமீ வேகத்தில் செல்லும் திறன் கொண்டது. இது இரண்டு 30 mm ஒருங்கிணைந்த பீரங்கிகள் மற்றும் வெளிபுறத்தில் இரண்டு மெட்ரா சூப்பர் 530D நடுத்தர தூரம் மற்றும் இரண்டு R-550 மேஜிக் II நெருங்கிய போர் ஏவுகணைகளை கொண்டு செல்கிறது.


மிக்-27

சோவியத் மூலமாக இந்த தரைவழி தாக்குதல் விமானம் ரஷ்யாவின் மைக்கோயன்-குரேவிச் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டது மற்றும் இதற்கான கட்டமைப்பு உரிம ஒப்பந்தத்தின் கீழ் இந்தியாவின் எச்ஏஎல் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது. ரஷ்ய வம்சாவளியைச் சேர்ந்த இவ்விமானம் ஒற்றை இயந்திரம், ஒற்றை இருக்கை கொண்ட போர் விமானம் ஆகும். இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 1700 கிமீ ஆகும். இது ஒரு 23 mm ஆறு பீப்பாய் ரோட்டரி ஒருங்கிணைந்த பீரங்கியை கொண்டுள்ளது மற்றும் 4,000 கிலோ வரையில் மற்ற ஆயுதங்களை வெளிப்புறமாக எடுத்துச் செல்லும் திறனை கொண்டிருக்கிறது.


மிக்-29

இது, மற்றொரு சோவியத் (ரஷ்யா) மைக்கோயன்-குரேவிச் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்ட விமானம் ஆகும். 1970-களில் அமெரிக்காவின் எஃப்-சீரிஸ் விமானங்களை (எஃப் -15, எஃப் -16) எதிர்கொள்ள மிக் ரக விமானம் அறிமுகப்படுத்தப்பட்டது. இது 1985-ம் ஆண்டில் இந்திய விமானப்படையில் சேர்க்கப்பட்டது. ஆனால், சுகோய் -30 விமானங்கள் வருகைக்கு பிறகு இந்த விமானங்கள் பாதுகாப்பு பணியில் இரண்டாவது வரிசைக்கு கொண்டு செல்லப்பட்டது.

இரட்டை இயந்திரம், ஒற்றை இருக்கை கொண்ட சூப்பர் போர் விமானம், மணிக்கு 2,445 கிமீ வேகத்தை எட்டக்கூடியது. இதன் போர் தாக்குதல் உச்சவரம்பு 17 கி.மீ. ஆகும். பிரங்கிகளையும், நடுத்தர தொலைவில் இலக்கை தாக்கும் ஏவுகணைகளையும் கொண்டிருக்கும்.


ஜாகுவார்

SEPECAT ஜாகுவார் என்பது பிரிட்டிஷ் ராயல் விமானப்படை மற்றும் பிரெஞ்சு விமானப்படை இணைந்து உருவாக்கிய போர் விமானமாகும். ஆங்கிலோ-பிரஞ்சு வம்சாவளியை சேர்ந்த ஒற்றை இருக்கை, இரட்டை இயந்திரம் கொண்ட தாக்குதல் விமானமாகும். மிக ஆழமாக ஊடுருவி துல்லிய தாக்குதலை நடத்தும் விமானமாகும். இதனுடைய அதிகபட்ச வேகம் மணிக்கு 1350 கிமீ ஆகும். இது இரண்டு 30mm துப்பாக்கிகளை கொண்டுள்ளது. 4750 கிலோ அளவில் வெளிப்புற ஆயுதங்கள் (குண்டுகள் / எரிபொருள்) மற்றும் இரண்டு ஆர் -350 மேஜிக் சிசிஎம்களை (overwing) கொண்டு செல்லும் திறன் கொண்டது.


மிக் -21 பிசோன்

1961-ம் ஆண்டில் இந்திய விமானப்படையால் ரஷ்யாவின் மைக்கோயன்-குரேவிச் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட MIG 21 விமானங்கள் வாங்கப்பட்டது. இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 2230 கிமீ ஆகும். நான்கு ஆர் -60 நெருக்கமான போர் ஏவுகணைகளுடன், ஒரு 23mm இரட்டை பீப்பாய் பீரங்கியை கொண்டுள்ளது.