நாளை 31-7-2020 வரலட்சுமி விரதம் ஸ்பெஷல்…! வறுமையை அகற்றும் வரலட்சுமி நோன்பு இருக்கும் முறை..

Read Time:6 Minute, 40 Second
Page Visited: 701
நாளை 31-7-2020 வரலட்சுமி விரதம் ஸ்பெஷல்…! வறுமையை அகற்றும் வரலட்சுமி நோன்பு இருக்கும் முறை..

மகத நாட்டில் வாழ்ந்த சாருமதி என்ற பெண், கணவன், மாமனார், மாமியார் ஆகியோரை சாதாரண மனிதர்களாக கருதாமல், இறைவனைப்போல கருதி அவர்களுக்கு பணிவிடை செய்து வாழ்ந்து வந்தாள்.

அவளுடைய செய்கை, மகாலட்சுமிக்கு மகிழ்ச்சியை அளித்ததால், அன்னையானவள் சாருமதியின் கனவில் வரலட்சுமியாக தோன்றி அருள் வழங்கினார். மேலும் சாருமதிக்கு வரலட்சுமி நோன்பின் வழிமுறைகளை கூறி, அதை மற்றவர்களுக்கு எடுத்துரைக்கும்படி கூறினாள். “என்னை துதித்து வரலட்சுமி விரதம் மேற்கொள்பவர்களின் இல்லத்தில் நான் வசிப்பேன்” என்றும் அருளினாள், மகாலட்சுமி தாயார். அதன்படியே செய்தாள் சாருமதி.

அவள் பெற்ற நன்மைகளை கண்ட பெண்கள் பலரும், தாங்களும் மகாலட்சுமிக்காக விரதம் இருக்க தொடங்கினர். நாளடைவில் அந்த நாட்டு மக்கள் முழுவதும் விரதம் இருக்க தொடங்கினர். நாடு சுபீட்சம் அடைந்தது. இதனையடுத்து இந்துக்கள் இதனை கொண்டாடுவது வழக்கமானது.

விரதம் இருக்கும் முறை

வரலட்சுமி விரத பூஜையை வெள்ளிக்கிழமை காலை அல்லது மாலையில் உங்கள் வசதிக்கு ஏற்ப செய்துக்கொள்ளலாம். விரத பூஜைக்கு தேவையான எல்லாப் பொருட்களையும் தயார் நிலையில் வைத்துக்கொள்ளுங்கள். முதலில் மஞ்சள் அல்லது பசும் சாணத்தால் செய்யப்பட்ட விநாயகருக்கு பூஜையை நடத்த வேண்டும். அதன்பிறகு வரலட்சுமி பூஜை செய்ய வேண்டும்.

ஒரு தாம்பாளத்தில் அரிசியை பரப்பி, அதன் மேல் கலசம் வைத்து, பழம், வெற்றிலை, பாக்கு வைக்க வேண்டும். பொங்கல், பாயசம், அப்பம், வடை, கொழுக்கட்டை, லட்டு, தயிர், பசும்பால், நெய், தேன், கற்கண்டு உள்ளிட்ட நிவேதனப்பொருட்களை கலசம் முன்வைக்க வேண்டும்.

ஆரஞ்சு, மாதுளை, விளாம்பழம், மாம்பழம், திராட்சை ஆகிய பழவகைகளையும் நிவேதனத்துக்காக வைக்கலாம். பின்னர் வாசலில் உள்நிலைப்படி அருகே நின்று வெளியில் நோக்கி கற்பூர ஆரத்தி காட்டி மகாலட்சுமியை வீட்டுக்குள் வருமாறு அழைக்க வேண்டும். மகாலட்சுமி வீட்டுக்குள் வந்துவிட்டதாக பாவனை செய்து, பூஜையில் உள்ள கலசத்தில் அமர்ந்து அருள்புரியுமாறு மகாலட்சுமியை வேண்டிக் கொண்டு ஆவாஹணம் செய்ய வேண்டும்.

இதையடுத்து நோன்புக் கயிறை கும்பத்திற்கு சாற்றி பூக்களால் அர்ச்சனை செய்ய வேண்டும். அப்போது லட்சுமியின் 108 போற்றி மற்றும் லட்சுமி அஷ்டோத்ர சத நாமாவளி சொல்லலாம்.

‘மகாலட்சுமி தாயே எங்கள் வீட்டில் நிரந்தரமாக தங்க வேண்டும். எங்களுக்கு எல்லா செல்வங்களையும் நீ தர வேண்டும்’ என்று மனம் உருக வழிப்பட வேண்டும். பின்னர் பூஜையை நிறைவு செய்ய வேண்டும். குடும்பத்தில் உள்ள மூத்த சுமங்கலிப் பெண்களுக்கு முதலில் பிரசாதம் வழங்க வேண்டும். இளம்பெண்கள் அவரிடம் ஆசி பெற்றுக்கொள்ள வேண்டும். இப்படி வரலட்சுமி விரத பூஜையை நெறி தவறாமல் செய்தால் மகாலட்சுமியின் பரிபூரண அருள் உங்களுக்கு நிச்சயம் கிடைக்கும் வறுமை அகலும்… சுபீட்சம் பெருகும்.

அலைமகள் சரணம் !
ஓம் மகாலட்சுமியே நமஹ !

இழந்த பொருள் மீண்டும் கிடைக்க…

பத்ரச்ரவஸ் என்ற மன்னன், மகாவிஷ்ணுவின் சிறந்த பக்தனாக இருந்து வந்தான். அவனது மனைவி சுரசந்திரிகா. இந்த தம்பதிகளின் மகள் சியாமபாலா. இவளை சக்கரவர்த்தியான மாலாதரன் என்பவருக்கு திருமணம் செய்து வைத்தனர். காலம் கடந்தது. ஒரு சமயம் மகாலட்சுமி தாயார், வயதான சுமங்கலியின் வேடம் தரித்து சுரசந்திரிகாவின் அரண்மனைக்கு வந்தாள். சுரசந்திரிகாவிடம் வரலட்சுமி விரதத்தை விரிவாகக் கூறி அதை கடைப்பிடிக்கும்படி கூறி சென்றாள்.

ஆனால், மகளை பிரிந்த ஏக்கத்தில் இருந்த சுரசந்திரிகா, லட்சுமி தேவியை யாரோ என்று கருதி விரட்டிவிட்டாள். அப்படி விரட்டப்பட்ட மகாலட்சுமி தேவியை, அரசியின் மகள் சியாமபாலா சமாதானப்படுத்தி அவளிடம் இருந்து வரலட்சுமி விரத முறைகளை விரிவாக கேட்டு உபதேசம் பெற்றுக்கொண்டாள். பக்தியுடன் விரதத்தை கடைப்பிடிக்கவும் செய்தாள்.

விரத மகிமையில் அவள் செல்வச் சிறப்பையும் அடைந்தாள். ஆனால் லட்சுமிதேவியை அவமானப்படுத்திய சியாமபாலாவின் பெற்றோர், வறுமையில் வாடினர். விவரம் அறிந்த சியாமபாலா ஒரு குடம் நிறைய தங்கத்தை பெற்றோருக்கு அனுப்பினாள். ஆனால் அவர்கள் செய்த தீவினையால் அது கரியாக மாறிவிட்டது. இதையடுத்து சியாமபாலா, தன் தாயான சுரசந்திரிகாவிடம் வரலட்சுமி விரதத்தைப்பற்றி சொல்லி பூஜை செய்யும் படி கூறினாள். அவளும் மகள் சொன்னபடி வரலட்சுமி விரதத்தை கடைப்பிடித்து பூஜை செய்தாள். அதன் பிறகு அவளுக்கு இழந்த செல்வங்கள் மீண்டும் கிடைத்தது.

0 0
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %