தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் கூடிய 7ம் கட்ட ஊரடங்கு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது..! விபரம்:-

Read Time:4 Minute, 14 Second

தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் கூடிய 7ம் கட்ட ஊரடங்கு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் நோக்கில் ஊரடங்கு இம்மாதம் ஆகஸ்ட் 31-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான அரசாணையை தலைமைச் செயலாளர் கே.சண்முகம் நேற்று வெளியிட்டார். அதில் கூடுதல் தளர்வுகளுடன் கூடிய 7ம் கட்ட ஊரடங்கு குறித்து கூறப்பட்டு இருப்பதாவது:-

வழிபாட்டு தலங்கள்

* தமிழகத்தின் அனைத்து மாநகராட்சியில் உள்ள அனைத்து மத வழிபாட்டு தலங்கள் மற்றும் தமிழகத்தின் பிற பகுதிகளில் உள்ள பெரிய மத வழிபாட்டு தலங்கள் பொதுமக்களின் வழிபாடுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

* அனைத்து சினிமா தியேட்டர்கள், உடற்பயிற்சி கூடங்கள், நீச்சல் குளங்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள், மதுக்கூடங்கள், ஊட்ட அரங்கங்கள், கடற்கரைகள், சுற்றுலா தலங்கள், மிருககாட்சி சாலைகள், அருங்காட்சியகங்கள் மற்றும் அதுபோன்ற இடங்களுக்கு தடை நீடிக்கிறது.

* பார்வையாளர்கள் இல்லாத நிலையில் விளையாட்டு வளாகங்கள், அரங்கங்கள் திறக்க அனுமதிக்கப்படுகின்றன.

அனைத்து சமூக, அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, கல்வி, கலாசாரம், மத உள்ளிட்ட கூடுகைகளுக்கு தடை நீடிக்கும்.

* ஆகஸ்ட் மாதத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் நிலையில், பால் விநியோகம், மருத்துவமனைகள், மருந்துக் கடைகள், மருத்துவமனை வாகனங்கள், ஆம்புலன்ஸ், மருத்துவ காரணங்களுக்கான தனியார் வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்படும்.

திருமணம், இறுதிச் சடங்கு

* திருமண நிகழ்ச்சிகளில் 50 பேருக்கு மேல் யாரும் கூடக் கூடாது. இறுதிச் சடங்கு நிகழ்ச்சிகளில் அதிகபட்சம் 20 பேர் மட்டுமே வரலாம். தமிழகம் முழுவதும் மாவட்டங்களுக்குள் அரசு மற்றும் தனியார் பஸ் போக்குவரத்து தடை செய்யப்படுகிறது.

* மாநிலங்களுக்கு இடையே மற்றும் மாவட்டங்களுக்கு இடையே செல்வதற்கு பெறப்பட வேண்டிய ‘இபாஸ்’ முறை தொடர்ந்து நீடிக்கிறது.

* 65 வயதுக்கு அதிகமானோர், ஏற்கனவே நோய்வாய்ப்பட்டவர்கள், கர்ப்பிணிகள், 10 வயதுக்கு குறைந்த குழந்தைகள் வீட்டிலேயே இருக்க வேண்டும். மிக அவசியமான அல்லது மருத்துவ காரணங்களுக்காக மட்டும் வெளியே வரலாம்.

ஆரோக்கிய சேது செயலி

* அலுவலகங்கள், பணியிடங்களில் அனைத்து பணியாளர்களும் ஆரோக்கிய சேது செயலியை செல்போன்களில் பதிவிறக்கம் செய்துள்ளார்களா? என்பதை பணி வழங்குவோர் உறுதி செய்ய வேண்டும். தொற்றை தவிர்க்கவும், சுகாதார நிலையை கண்டறிந்து உடனடியாக சிகிச்சையை நாடவும் இந்த செயலியை செல்போன்களில் பதிவிறக்கம் செய்யும்படி மாவட்ட நிர்வாக உரிய ஆலோசனைகளை மக்களுக்கு வழங்க வேண்டும்.

சட்ட நடவடிக்கை

* வீட்டைவிட்டு வெளியே வரும்போது முககவசங்களை கட்டாயம் அணிந்திருக்க வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். பொது இடங்களில் துப்பினால் அபராதம் விதிக்கப்படும். மது, பான், குட்கா, புகையிலை போன்றவற்றை பொது இடங்களில் பயன்படுத்தக்கூடாது.

* பொது இடங்களில் 5 பேருக்கு மேல் கூடக்கூடாது. வீடுகளில் இருந்தபடி ஊழியர்கள் பணியாற்றுவதை நிறுவனங்கள் ஊக்கப்படுத்த வேண்டும். ஊரடங்கு காலகட்டத்தில் அரசின் உத்தரவை மீறுவோர் மீது சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.