புதிய கல்வி கொள்கையில் இடம்பெறும் மும்மொழித் திட்டம் என்ன…? விளக்கம்

Read Time:7 Minute, 1 Second

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதில் உள்ளூர் மொழி அல்லது தாய்மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு இருக்கிறது. அதாவது, 5-ம் வகுப்பு வரை பயிற்று மொழி தாய்மொழியில் இருக்க வேண்டும், 8-ம் வகுப்புக்கு மேலும் அதை நீடித்தால் நல்லது என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மும்மொழித் திட்டத்திற்கு தமிழகம் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. இந்நிலையில் புதிய கல்வி கொள்கையில் இடம்பெறும் மும்மொழித் திட்டம் குறித்து விரிவாக அறிந்துக்கொள்ளலாம்.

மூம்மொழித் திட்டம் என்றால் என்ன?

புதிய தேசிய கல்வி கொள்கையில் (NEP) அனைத்து மாணவர்களும் தங்கள் பள்ளியில் மூன்று மொழிகளை கற்க வேண்டும் என்று பரிந்துரைக்கிறது. மூன்று மொழிகளில் குறைந்தபட்சம் இரண்டு இந்தியாவை பூர்வீகமாக கொண்டிருக்க வேண்டும் என தெரிவிக்கிறது. உதாரணமாக சென்னையில் ஒரு மாணவர் தமிழ் மற்றும் ஆங்கிலம் கற்கிறார் என்றால், அவர் வேறொரு இந்திய மொழியை கற்க தேர்வு செய்ய வேண்டும் என்பதாகும்.

புதிய தேசிய கல்வி கொள்கை அனைத்து மாநிலங்களிலும் இந்தி கற்றலை கட்டாயமாக்குகிறதா…?

கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட புதிய தேசிய கல்வி கொள்கை வரைவில் மூன்று மொழி திட்டத்தின் கீழ், இந்தி மொழி பொதுவாக பேசப்படாத மாநிலங்களிலும் இந்தி கற்பித்தல் / கற்றல் கட்டாயமாகும் என்று ஒரு பத்தி பரிந்துரைத்தது. இதற்கு தமிழகம் போன்ற இந்தி அல்லாத மொழி பேசும் மாநிலங்கள் எதிர்ப்பை பதிவு செய்தன. இதனையடுத்து, இந்தி கட்டாயம் கற்றல் என்பதை மத்திய அரசு கைவிட்டிருக்கிறது. வேறு ஏதாவது ஒரு இந்திய மொழி எனக் குறிப்பிட்டு இருக்கிறது.

பள்ளியில் மாணவர்கள் கற்கும் மூன்று மொழிகளை யார் தீர்மானிப்பது…?

மொழிகளின் தேர்வு என்பது மாநிலத்தையும், மாணவர்களையும் பொறுத்தது. எவ்வாறாயினும், மூன்று மொழிகளில் குறைந்தது இரண்டு இந்திய நாட்டை பூர்வீகமாக கொண்டிருப்பது கட்டாயமாகும். அவற்றில் ஒன்று பெரும்பாலும் உள்ளூர் / பிராந்திய மொழியாக இருக்கலாம். கல்வி அமைச்சகத்தினால் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில், “எந்தவொரு மாணவனிடமும் எந்தஒரு மொழியும் திணிக்கப்படாது” என்று கூறப்பட்டுள்ளது. இருந்தாலும், ஒரு மாணவர் எந்த அளவிற்கு ஒரு குறிப்பிட்ட மொழியைத் தேர்வு செய்ய முடியும் என்பது தெளிவாக தெரியவில்லை.

மாணவர்கள் இப்போது அனைத்து பாடங்களையும் தங்கள் தாய்மொழியில் படிக்க வேண்டுமா…?

‘பல மொழி மற்றும் மொழியின் சக்தி’ என்ற பிரிவின் கீழ் முடிந்தவரையில் 5-ம் வகுப்பு வரை பயிற்று மொழி தாய்மொழியில் இருக்க வேண்டும், 8-ம் வகுப்புக்கு மேலும் அதை நீடித்தால் நல்லது என்று பொதுவாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் பொருள் ஆங்கிலவழிக் கல்வி கற்பித்தல் பள்ளிகளில் மொழி மாறும் என்பதா…?

பெரும்பாலும் அது மாறாது. “சாத்தியமான இடங்களில்” உள்ளூர் மொழி / தாய்மொழியைப் பயன்படுத்த வேண்டும் என்று புதிய தேசிய கல்வி கொள்கை கூறுகிறது. எனவே, பள்ளிகள் அவர்கள் எந்த மொழியில் கற்பிக்கிறார்களோ அவர்கள் தொடர்ந்து கற்பிப்பிற்கலாம், சாத்தியமானபோது உள்ளூர் மொழியைப் பயன்படுத்துவதற்கும் வாய்ப்பு வழங்கப்படுகிறது.

இந்த விதிமுறையானது தனியார் மற்றும் அரசு கல்வி நிறுவனங்களுக்கு பொருந்துமா…?

ஆம், தனியார் மற்றும் அரசுப் பள்ளிகளுக்கு இந்த விதி பொருந்தும் என்று புதிய தேசிய கல்வி கொள்கை கூறுகிறது.

கேந்திர வித்தியாலயா பள்ளிகளில் தாய்மொழி கல்வியா..?

புதிய கல்விக் கொள்கையின்படி கேந்திர வித்தியாலயா பள்ளிகளில் பயிற்று மொழியாக அந்தந்த மாநில தாய் மொழியை மாற்ற வாய்ப்பில்லை என்று கல்வி அதிகாரிகள் கூறியிருக்கின்றனர். இந்தியா முழுவதும் இந்தப் பள்ளிகள் உள்ளன. இங்கு கடந்த 55 ஆண்டுகளாக மும்மொழிக் கொள்கை பின்பற்றப்படுகிறது. அவற்றில் மாணவர்களின் தாய்மொழி அல்லது உள்ளூர் மொழியை பயிற்று மொழியாக மாற்றுவது என்பது நடைமுறையில் சாத்தியமில்லை என்பது அதிகாரிகளின் கருத்தாக இருக்கிறது.

வீட்டு மொழி / தாய்மொழி / உள்ளூர் மொழியில் கற்பிப்பது குறித்து புதிய தேசிய கல்வி கொள்கை என்ன சொல்கிறது?

அறிவியல் உட்பட உயர்தர பாடப்புத்தகங்கள் வீட்டு மொழிகளில் (வீட்டில் பேசும் மொழி) கிடைக்க வழிவகை செய்யப்பட வேண்டும்.

வீட்டு மொழி பாடநூல் கிடைக்காத சந்தர்ப்பங்களில், ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையிலான கற்பித்தல் மொழியானது முடிந்தவரை வீட்டு மொழியாகவே இருக்கும்.

இருமொழி அணுகுமுறையை பயன்படுத்த ஆசிரியர்கள் ஊக்குவிக்கப்படுவார்கள்.

மூம்மொழி திட்டம் தொடர்பாக பதிலளிக்கப்படாத சில கேள்விகள்…

பெற்றோர்கள் வீட்டில் இரண்டு வெவ்வேறு மொழிகளைப் பேசும் குழந்தைகள் பற்றிய நிலை என்ன…? எது அவர்களுடைய தாய்மொழியாகக் கருதப்படும்….?

உள்ளூர் மொழி தானாகவே தாய்மொழியாக மாறுமா….?

மாற்றத்தக்க வேலைகளில் இருக்கும் பெற்றோரின் குழந்தைகளைப் பற்றி நிலை என்ன…? அவர்களின் கற்பித்தல் முறையில் உள்ளூர் மொழி எப்படி இருக்கும்…?

மாணவர்கள் தாங்கள் எந்த மொழியில் கற்கலாம் என்பதை தேர்வு செய்ய எவ்வளவு சுதந்திரம் வழங்கப்படும்…? உள்ளிட்டவை எழுகிறது.