கொரோனா தடுப்பூசி ‘சர்வதேச அளவில் இந்தியா முக்கிய பங்காற்றி வருகிறது…’ உலக சுகாதார அமைப்பு புகழாரம்.. விபரம்:-

Read Time:4 Minute, 10 Second

உலகம் முழுவதும் கொரோனா வைரசுக்கு எதிரான போராட்டம் முழு தீவிரமாக நடைபெறுகிறது.

கொரோனா அரக்கனை ஒழிக்கும் வகையில் மருந்து கண்டுபிடிக்கும் பணியில் உலக நாடுகள் தீவிரமாக இறங்கியிருக்கின்றன. பல்வேறு மருந்துகள் மனித பரிசோதனைக்கு வந்திருக்கிறது.

இதுவரையில் உலகளவில் சுமார் 120 தடுப்பு மருந்துகள் ஆய்வு கட்டத்தில் இருக்கிறது இந்தியாவில் மட்டும் சுமார் அரை டஜன் மருந்து நிறுவனங்கள் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தை உருவாக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளன.

இந்தியாவில் பாரத் பயோடெக் மற்றும் ஜைடஸ் கடிலா ஆகிய இரு நிறுவனங்கள் கண்டுபிடித்த தடுப்பூசி விலங்குகளிடம் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. இதனையடுத்து மனிதர்களிடம் பரிசோதனை செய்யும் நிலையை எட்டியிருக்கிறது. இதுபோக இங்கிலாந்து நாட்டின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், அந்நாட்டு அரசு மற்றும் அஸ்ட்ரா ஜெனேகா மருந்து நிறுவனம் ஆகியவை இணைந்து ஒரு தடுப்பூசியை உருவாக்கி இருக்கிறது.

இந்த தடுப்பூசியை இந்தியாவில் தயாரிப்பதற்கு மராட்டிய மாநிலம் புனேயை சேர்ந்த இந்திய சீரம் இன்ஸ்டிடியூட் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துடன் ஒப்பந்தம் செய்து இருக்கிறது. இந்தியாவில் இந்த மருந்தின் 2 வது மற்றும் 3வது கட்ட பரிசோதனைக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

உலக சுகாதார அமைப்பு புகழாரம்

இந்நிலையில் கொரோனா தடுப்பூசி உருவாக்குவதில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது உலக சுகாதார அமைப்பு புகழாரம் சூட்டியிருக்கிறது.

உலக சுகாதார அமைப்பின் அவசரகால சுகாதார திட்ட செயல் இயக்குனர் டாக்டர் மைக்கேல் ரயான் ஆகஸ்ட் 3-ம் தேதி ஜெனிவாவில் செய்தியாளர்களிடம் பேசுகையில் இந்தியாவை வெகுவாக பாராட்டியிருக்கிறார்.

அவர் பேசுகையில், கொரோனா வைரசுக்கு எதிராக சிகிச்சையளிக்கும் வகையில் சக்திவாய்ந்த தடுப்பூசி உருவாக்குவதில் இந்தியா முன்னணி இடம் வகிக்கிறது. மேலும், சக்திவாய்ந்த கொரோனா தடுப்பு மருந்துகளையும் தயாரித்து வருகிறது. எனவே, மொத்தத்தில் சர்வதேச அளவில் இந்தியா முக்கிய பங்காற்றி வருகிறது எனக் குறிப்பிட்டார்.

இந்தியாவில் அதிக பாதிப்பு ஏன்?

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவது உண்மை தான் எனக் கூறியிருக்கும் மைக்கேல் ரயான், இந்தியா பெரிய நாடாகும், அங்கு 130 கோடி மக்கள் வசிக்கிறார்கள் என்ற கண்ணோட்டத்தில் அதை பார்க்க வேண்டியது அவசியம். அதுபோல், கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனைகளையும் இந்தியா நன்கு செய்து வருகிறது. ஏற்கனவே 2 கோடி மாதிரிகளை பரிசோதித்து உள்ளது. நாள் ஒன்றுக்கு சராசரியாக 5 லட்சம் மாதிரிகளை பரிசோதித்து வருகிறது.

கடந்த சில நாட்களாகவே இந்தியாவில் தொற்று தொடர்பான பரிசோதனைகளை அதிகரித்து வருகிறது. கொரோனா பரிசோதனை மையங்கள் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டு உள்ளது. இந்தியாவில் கிராமப்புறங்களிலும் கொரோனா வைரஸ் தொற்று பரவி வருவது கவலை அளிக்கிறது. எனவே, நோய் பரவலை தடுப்பதுடன், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதிலும் தீவிர முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும் எனக் கூறியிருக்கிறார்.