ஜம்மு காஷ்மீர் மற்றும் குஜராத்தின் ஒரு பகுதியை இணைத்து புதிய வரைபடத்தை வெளியிட்டது பாகிஸ்தான்..! ‘இது முட்டாள்தனமானது…’ இந்தியா சாடல்

Read Time:4 Minute, 2 Second

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியலமைப்பின் 370 மற்றும் 35-ஏ பிரிவுகளை மத்திய அரசு 2019 ஆகஸ்ட் 5 -ம் தேதி ரத்து செய்தது. மேலும், மாநிலத்தை மறுசீரமைத்து ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்தது.

ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு இன்றோடு சரியாக ஓராண்டு நிறைவுறுவதை முன்னிட்டு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் சர்ச்சைக்குரிய வகையில் பாகிஸ்தானின் புதிய வரைப்படத்தை வெளியிட்டார்.

இம்ரான் பேசியது என்ன…?

வரைப்படத்தை வெளியிட்ட இம்ரான் கான் பேசுகையில், “இன்று, பாகிஸ்தானின் புதிய வரைபடத்தை உலகிற்கு அறிமுகப்படுத்துகிறோம். இந்த புதிய வரைபடத்திற்கு பாகிஸ்தானின் அமைச்சரவை, எதிர்க்கட்சிகள் மற்றும் காஷ்மீர் தலைமை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த வரைபடம் பாகிஸ்தான் மக்களின் நம்பிக்கைகளுக்கு ஒப்புதல் அளிக்கிறது. இந்த வரைபடம் காஷ்மீர் மற்றும் பாகிஸ்தான் மக்களின் நிறைவேறாத விருப்பங்களுக்கு ஒப்புதல் அளிக்கிறது, ”என்று கூறினார்.

அதுமட்டுமில்லாது, “இந்த வரைபடம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி காஷ்மீர் தொடர்பாக இந்தியா எடுத்த சட்டவிரோத நடவடிக்கையை ரத்து செய்கிறது (சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டது). இன்று முதல், இது பாகிஸ்தானின் அதிகாரப்பூர்வ வரைபடமாக இருக்கும்,” என்றும் குறிப்பிட்டார்.

பாகிஸ்தானின் புதிய வரைப்படத்தில் எந்தப்பகுதிகள் எல்லாம் சேர்க்கப்பட்டு உள்ளது…?

வரைப்படம் திருத்தம் விவகாரத்தில் இம்ரான் கான் அரசாங்கத்திற்கும் பாகிஸ்தான் மக்களுக்கும் வாழ்த்து தெரிவித்துள்ள அந்நாட்டு வெளியுறவு மந்திரி ஷா மெகமூத் குரேஷி, காஷ்மீர் மற்றும் அதன் மக்கள் மீதான இந்தியாவின் “சட்டவிரோத ஆதிக்கத்தை” இந்த வரைபடம் சவால் செய்கிறது என்று கூறியிருக்கிறார்.

இந்த வரைபடம் காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வு காண வழிவகுக்கும் என்றும் குரேஷி கூறியிருக்கிறார்.

பாகிஸ்தான் வெளியிட்டுள்ள புதிய வரைப்படத்தில் ஜம்மு காஷ்மீரை சர்ச்சைக்குரிய பகுதி என்றும் சர் கிரீக் மற்றும் குஜராத்தின் ஜுனாகத்தை பாகிஸ்தானுடையது என்றும் குறிக்கப்பட்டு உள்ளது.

இந்தியாவின் பதிலடி விபரம்

பாகிஸ்தான் வெளியிட்ட புதிய வரைபடத்துக்கு மத்திய வெளியுறவு அமைச்சகம் பதிலடியை கொடுத்திருக்கிறது.

வெளியுறவுத்துறை அமைச்சகம் தன்னுடைய பதிலடியில், “

“பாகிஸ்தானின் அரசியல் வரைபடம் என அழைக்கப்படும் ஒன்றை இம்ரான் கான் வெளியிட்டதை பார்த்தோம். இது, அரசியல் அபத்தம் அல்லாமல் வேறு என்ன…? அடிப்படை ஆதாரமற்ற உரிமை கோரல்கள் ஆகும். குஜராத்தின் ஒரு பகுதியையும், ஜம்மு காஷ்மீர், லடாக்கை இணைக்கும் அவர்கள் செயல் சட்டரீதியாகவோ, சர்வதேச அளவில் நம்பகத்தன்மையானதோ கிடையாது. இது முட்டாள்தனமானது.

எல்லை தாண்டிய பயங்கரவாதத்தின் உதவியுடன் பாகிஸ்தானின் பிரதேச அக்கிரமிப்பு மனநிலையையே இது வெளிப்படுத்துகிறது” என்று கடுமையாக சாடியுள்ளது.