‘டிக்-டாக்’ – அமெரிக்க விவகாரம் தான் என்ன…? மைக்ரோசாப்ட் இவ்வளவு ஆர்வம் கொள்வது ஏன்…? விளக்கம் இதோ…!

Read Time:12 Minute, 50 Second

சீனாவின் பைட்டான்ஸ் (ByteDance) நிறுவனம் கடந்த 2016-ம் ஆண்டு ‘டிக்-டாக்’ செயலியை தொடங்கியது. இந்நிறுவனம் தன்னுடைய வளர்ச்சிக்கு மத்தியில் 2017-ம் ஆண்டு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் மிகவும் பிரபலமாக இருந்த ‘மியூசிக்கலி’ செயலி வாங்கியது. பின்னர் உலகம் முழுவதும் பிரபலமானது ‘டிக்-டாக்’ செயலி. இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது இச்செயலி. உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோர் இந்த ‘டிக்-டாக்’ செயலியை பயன்படுத்தி வருகின்றனர். பல்வேறு விமர்சனங்களை கடந்து வெற்றிப்பாதையில் சென்று கொண்டிருந்தது. லாபங்களை அள்ளியது.

சிக்கலில் சீனாவின் ‘டிக்-டாக்’ செயலி

சீன நிறுவனம் கடந்த ஆண்டு 17 பில்லியன் டாலருக்கும் (இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 1,27,594 கோடி) அதிகமான வருவாயை ஈட்டியது. 3 பில்லியன் டாலருக்கும் (இந்திய ரூபாயின் மதிப்பில் சுமார் 22,500 கோடியாகும்) அதிகமாக நிகர லாபத்தை ஈட்டியதாக சிஎன்பிசி தெரிவித்து இருக்கிறது. யூ-டியூப் பிற வீடியோ செயலிகளுக்கு சவாலாக இதனுடைய மார்க்கெட் வேகம் ஏறியது. இந்நிறுவனத்தின் மிகப்பெரிய மார்க்கெட்டாக, டார்க்கெட்டாக அமெரிக்காவும், இந்தியாவும் இருந்தது.

இருப்பினும் இச்செயலியை பயன்படுத்தும் பயனாளர்கள் வழங்கும் தகவல்களின் பாதுகாப்பு விவகாரம் பெரும் சிக்கலாக அந்நிறுவனத்திற்கு எழுந்தது. தொடர்ந்து சர்ச்சைகள் நிலவியது.

இந்தியாவில் தடை

இருப்பினும் இச்செயலியின் பயனாளர்கள் தொடர்பான தகவல்கள் பாதுகாப்பு விவகாரம் தொடர்பாக தொடர்ந்து சர்ச்சைகள் எழுந்தது. சீன நிறுவனம் பயனாளர்களின் தகவல்களை திருடுவதாக அமெரிக்கா, ஆஸ்திரேலியாவின் குற்றச்சாட்டுகளாக இருந்துவந்தது. இந்தநிலையில் கடந்த ஜூன் மாதம் 15-ம் தேதி இந்தியா-சீனா இடையேயான எல்லைப் பகுதியில் இரு தரப்பு ராணுவத்தினருக்கு இடையே ஏற்பட்ட மோதல் இரு நாடுகளின் உறவில் விரிசலை ஏற்படுத்தியது.

இதனையடுத்து இந்தியாவின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி சீனாவின் ‘டிக்-டாக்’ செயலி உள்பட 59 செயலிகளுக்கு இந்தியா தடை விதித்தது. இந்தியாவின் இந்த அதிரடி நடவடிக்கையை வரவேற்ற அமெரிக்க எம்.பி.க்கள் பலர் சீனாவின் ‘டிக்-டாக்’ செயலிக்கு அமெரிக்காவிலும் தடை விதிக்க வேண்டும் என ஜனாதிபதி டிரம்பை வலியுறுத்தினர்.

அமெரிக்காவிலும் ‘டிக்-டாக்’ செயலிக்கு தடை

அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோவும் சீனாவின் ‘டிக்-டாக்’ செயலி தனிநபர்களின் தகவல்களைத் திருடுவதாகவும், விரைவில் அந்த செயலிக்கு தடை விதிக்கப்படும் என்று தொடர்ச்சியாக குறிப்பிட்டார். இந்த நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், “டிக்-டாக்’ செயலிக்கு தடைவிதிக்கப் போகிறோம். மற்ற சில விஷயங்களையும் செய்ய இருக்கிறோம். இரு வாய்ப்புகள் உள்ளன. நிறைய விஷயங்கள் நடக்க வேண்டி உள்ளன. என்ன நடக்கிறது எனப் பார்க்கலாம்” என சூழ்ச்சிய அடங்கிய பதிலை வெளியிட்டார்.

அமெரிக்காவில் ‘டிக்-டாக்’ செயலியின் இயக்கம் மீதான உரிமையை விலக்கிக்கொள்ள பைட்டான்ஸ் நிறுவனத்துக்கு டிரம்ப் நிர்வாகம் விரைவில் உத்தரவிடும் என்று அந்நாட்டு ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.

இதனிடையே ஜனாதிபதி டிரம்பின் இந்த அறிவிப்பை அமெரிக்க எம்.பி.க்கள் பலரும் வரவேற்று இருக்கின்றனர்.

அமெரிக்க விவகாரம் தான் என்ன…?

‘டிக்-டாக்’ செயலியைத் தடை செய்ய டிரம்ப் நிர்வாகம் பரிசீலித்து வருகிறது என தகவல் வெளியாகிய நிலையில், டிக்-டாக்கை விலைக்கு வாங்குவது தொடர்பாக பைட்டான்ஸ் நிறுவனத்துடன் மைக்ரோசாப்ட் நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியாகியது. பேச்சுவார்த்தையில் பைட்டான்ஸ் மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனங்களுடன் வெள்ளை மாளிகை பிரதிநிதிகளும் இடம் பெற்றதாகவும் தகவல்கள் வெளியாகியது.

“டிக்-டாக் பயனாளர்களின் தகவல்களை சீன நிறுவனம் திருடுகிறது,” என்ற குற்றச்சாட்டு அமெரிக்காவில் நிலவியதும் அந்நிறுவனத்தின் மீதான தடைக்கு “தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கிறது,” என்ற இந்தியாவின் குற்றச்சாட்டே முன்வைக்கப்பட்டது.

அமெரிக்காவில் டிக்-டாக் தடையென்ற உச்ச நிலைக்கு கொண்டு சென்ற டிரம்ப் அப்போதே ஆச்சரிய குறியும் முன்வைத்தார். அதாவது, “டிக்டாக் வெளிப்படையான தடையை எதிர்க்கொள்வதற்கு பதில் அதனை அமெரிக்க நிறுவனத்திற்கு விற்றுவிடலாம்…” என்ற உள்ளார்ந்த பொருள் இருந்த சஸ்பென்ஸ் உடைந்திருக்கிறது.

பைட்டான்ஸ் சீன நிறுவனம் என்பதால் அந்நாட்டு அரசுடன் தகவல்களை பறிமாற்றம் செய்யும் என்ற கவலைக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம் என மேம்போக்காக கூறப்படுகிறது.

இவ்விவகாரத்தில் முடிவு எடுப்பதற்கு டிக்-டாக் நிறுவனத்திற்கு 45 நாட்கள் கால அவகாசம் அமெரிக்காவில் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இவ்விவகாரத்தில் டொனால்டு டிரம்ப் மூன்று விஷயங்களுக்கு அழுத்தம் கொடுப்பதாக தெரிகிறது:-

அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தல்கள் நடக்க இன்னும் 100 நாட்களுக்கும் குறைவாக உள்ள நிலையில், அமெரிக்காவிற்கு நன்மை பயக்கும் ஒரு ஒப்பந்தத்திற்கு ‘புரோக்கரிங்’ செய்வதோடு சீன செல்வாக்கை வெளியே வைத்திருக்கிறார் டிரம்ப் என சொல்லிக்கொள்ளலாம். மேலும், டிக்-டாக்கினால் கிடைக்கும் வேலைவாய்ப்பை தக்க வைத்திருப்பதாகவும் பெருமைப்பட்டுக்கொள்ளலாம் டிரம்ப். ஆனால், 45 நாட்கள் அவகாசம் முடிந்ததும் தன்னுடைய நிலைப்பாட்டிலிருந்து பின்வாங்க முடியாத நெருக்கடியும் ஏற்படும். இருப்பினும் பல்டி அடிப்பதில் பிரபலமான டிரம்ப் அதனையும் செய்யலாம்.

மைக்ரோசாப்ட் இவ்வளவு ஆர்வம் கொள்வது ஏன்…?

‘டிக்-டாக்’ செயலியை மைக்ரோசாப்ட் நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டு இருக்கிறது. தொழில்நுட்பத்துறையில் ஜாம்பவனாக இருக்கும் மைக்ரோசாட் நிறுவனத்திற்கு இந்த வீடியோ செயலியை தான் வாங்க வேண்டுமா… என்ற கேள்வியும் இருக்கிறது. மைக்ரோசாப்ட்டை பற்றி மற்றொன்று அறிதல் அவசியம். அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்களில் மைக்ரோசாப்ட் மட்டும் சீனாவில் LinkedIn மூலம் செயல்பட்டு வருகிறது. டிக் -டாக் போன்ற ஒரு நிறுவனத்தை மைக்ரோசாப்ட் வாங்குவதில் ஆழமான ஆர்வம் கொள்வதில் பல காரணங்களுக்காக உள்ளார்ந்த அர்த்தம் நிறையவே இருக்கிறது.

விளம்பரம் மூலமான வருவாய்: விளம்பரத்திலிருந்து வருவாய் என்று வரும்போது மைக்ரோசாப்ட், பேஸ்புக் மற்றும் கூகிள் உடன் ஒப்பிடும்போது மோசமாக செயல்பாட்டில் இருக்கிறது. “பிங் (Bing) மற்றும் லிங்க்ட்இன் (LinkedIn) மூலமான விளம்பர வணிகம் யூடியூப்பின் கால் பகுதி தான் இருக்கும். மேலும், அவர்களின் வருடாந்திர வருமானத்தை ஒரு வாரத்திலேயே விளம்பரங்களிலிருந்து பேஸ்புக் நிறுவனம் சம்பாதிக்கிறது என்று WIRED தெரிவித்துள்ளது. இப்போது டிக்-டாக்கை வாங்குவதன் மூலம் ஆன்லைன் விளம்பர இடத்தில் அவர்களுக்கு ஆக்கப்பூர்வமான இடமானது கிடைக்கும்.

சமூக வலைதளம்: மைக்ரோசாப்ட் ஸ்மார்ட்போன் தயாரிப்பு விவகாரத்திலான போட்டியில் தோற்றது மற்றும் சமூக வலைதள வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை ஏற்படுத்த போராடியது. இப்போது டிக்-டாக்கி வாங்குதல் என்பது மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு ஒரு பெரிய சமூக வலைதளத்திற்கான் அணுகலை வழங்கும். ஆகஸ்ட் 3-ம் தேதி செய்தியாளர் சந்திப்பில் டிக் டாக் தடை அறிவிப்பை வெளியிட்ட போது “பெயரும் சூடாக இருக்கிறது, பிராண்ட் சூடாக இருக்கிறது” என்று டிரம்பே கூறியிருந்தார். சீனாவுக்கு வெளியே டிக்-டாக் அதிகமாக வருவாய் ஈட்டும் நாடுகளில் ஒன்று அமெரிக்காவும் ஆகும்.

தரவுகள்: டிக்-டாக் உடனான எந்தவிதமான ஒப்பந்தத்தின் போதும் முக்கிய பகுதியாக பயனாளர்கள் தகவல் தரவுகளை மைக்ரோசாப்ட் பெறும். “மைக்ரோசாப்ட் கண்மூடித்தனமான செயல்பட்ட இடங்களை சரிசெய்வதற்கு டிக்-டாக் உதவியாக இருக்க கூடும்” மேலும், நிறுவனத்திற்குள் மற்ற மென்பொருள்கள் மற்றும் சேவைகள் எவ்வாறு உருவாக்கப்படுகின்றன என்பதிலும் தாக்கத்தையும் ஏற்படுத்தும். எனவே, டிக்-டாக்கை வாங்குவதில் அதிகம் நாட்டம் கொள்கிறது மைக்ரோசாட். டிக்-டாக் விவகாரத்தில் அமெரிக்கா நகர்வில் இந்தியாவின் நிலைப்பாடு எவ்வாறு ஒத்திருக்கிறது மற்றும் டிக்-டாக்கின் புலம்பலும் நகர்வும் என்ன என்பதை தொடர்ச்சியாக பார்க்கலாம். இணைந்திருங்கள் மெட்ராஸ் போஸ்ட் உடன்…

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %