இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ‘ஜைகோவ்-டி’தடுப்பூசி 2-ம் கட்ட சோதனை தொடங்கியது

Read Time:5 Minute, 0 Second

உலகம் முழுவதும் கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசி மருந்து தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று நோயை தடுத்து நிறுத்துவதற்காக உள்நாட்டில் 2 தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டு உள்ளன. விலங்குகளிடம் நடத்தப்பட்ட சோதனையில் இம்மருந்துகள் சிறப்பாக எதிர்வினையாற்றுவதாக தெரியவந்தது.

  • ஐதராபாத்தை தலைமையகமாக கொண்டு இயங்கும் பாரத் பயோடெக் நிறுவனம் கண்டுபிடித்து உள்ள மருந்துக்கு கோவேக்சின் என பெயரிடப்பட்டு உள்ளது.
  • ஆமதாபாத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஜைடஸ் கேடிலா நிறுவனம் ஜைகோவ்-டி என்ற பெயரில் தடுப்பூசி மருந்தை தயாரித்து உள்ளது. இவ்விரு தடுப்பூசிகளையும் மனிதர்களுக்கு செலுத்தி பார்ப்பதற்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அனுமதியை அளித்தது. இதனையடுத்து மனித பரிசோதனையில் முதல்கட்ட பரிசோதனைகள் தொடங்கியது.

ஜைகோவ்-டி தடுப்பூசி பரிசோதனை

ஜைகோவ்-டி தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தி பார்க்கிற முதல் கட்ட பரிசோதனையானது கடந்த மாதம் 15-ம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. முதல்கட்ட சோதனையின் முடிவில் மருந்து பொறுத்துக்கொள்ளத்தக்கது மற்றும் பாதுகாப்பானது என்பது தெரியவந்திருக்கிறது.

தடுப்பூசி மருந்து பாதுகாப்பானது, பொறுத்துக்கொள்ளத்தக்கது, நோய் எதிர்ப்புத்திறன் உருவாக்குகிறது என கண்டுபிடிக்கப்பட்டது. விலங்குகளிடம் நடத்தப்பட்ட பரிசோதனையின் சோதனையில் இந்த தடுப்பூசி மருந்து நோய் எதிர்ப்பு சக்தியை (ஆன்டிபாடி) உருவாக்கும் என்பது தெரியவந்தது. இந்த மருந்து பிளாஸ்மித் டி.என்.ஏ. அடிப்படையில் உருவாக்கப்பட்டு உள்ளது.

2-ம் கட்ட சோதனை இன்று தொடங்கியது

ஜைகோவ்-டி தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தி பார்க்கிற இரண்டாம் கட்ட சோதனையானது இன்று தொடங்கியது. இந்த கட்டத்தில் பரிசோதனைகளில் கலந்துக் கொள்பவர்களின் எண்ணிக்கை 100-க்கும் அதிகமாக இருக்கும். பெரியவர்கள், சிறியவர்கள் என அனைத்து தரப்பினரையும் அடங்கிய பரிசோதனையில் பாதுகாப்பு, எதிர்ப்பு சக்தி உருவாக்கம் மற்றும் பக்க விளைவுகள் தொடர்பாக ஆழ்ந்த பரிசோதனை ஆய்வுகள் நடக்கும்.

தடுப்பூசி மருந்தின் ‘ஹியூமோரல்’ நோய் எதிர்ப்புச்சக்தி; ‘செல்லுலார்’ நோய் எதிர்ப்புசக்தி; தடுப்பூசி மருந்தால் வெளிப்படுத்தப்படுகிற ஆன்டிபாடிகளின் வைரஸ் கொல்திறன் ஆகியவை ஆய்விடப்படும்.

ஜைடஸ் கேடிலா நிறுவனத்தின் தலைவர் பங்கஜ் ஆர்.படேல் பேசுகையில், “ எங்கள் தடுப்பூசியின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் முதல் கட்ட சோதனை முடிந்திருப்பது முக்கிய ‘மைல் கல்’. எங்கள் தடுப்பூசி மருந்து பாதுகாப்பானது என கண்டறியப்பட்டுள்ளது. நாங்கள் இப்போது 2-வது கட்ட சோதனையை தொடங்குகிறோம். இப்போது ஒரு பெரிய மக்கள் தொகையில் தடுப்பூசியின் பாதுகாப்பு மற்றும் நோய் எதிர்ப்புத்திறன் பற்றி மதிப்பிடப்படும்” என தெரிவித்து உள்ளார்.

கோவேக்சின் தடுப்பூசி நிலை என்ன…?

ஜைகோவ்-டி தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதனை செய்ய அனுமதி வழங்கப்பட்ட போதே, பாரத் பயோடெக் நிறுவனம், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுடன் கூட்டாக உருவாக்கிய கோவேக்சின் தடுப்பூசியை முதல் கட்டமாக மனிதர்களுக்கு செலுத்தி பார்க்க அனுமதி வழங்கப்பட்டது. போது இம்மருந்தும் சோதனையை நிறைவு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

கொரோனா வைரஸ் தொற்றினை தடுத்து நிறுத்துவதற்கு ஏதுவாக பாதுகாப்பான மற்றும் பயனுள்ள தடுப்பூசியை உருவாக்குவதற்கு 6 தடுப்பூசிகள் போட்டியிடுவதாகவும், அவை இறுதி கட்ட சோதனைக்குள் வந்துள்ளதாகவும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்து இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.