கொரோனா வைரஸ் ‘மாரடைப்புக்கும் வழி நடத்தும்…’ இந்திய மருத்துவ நிபுணர்களின் அதிர்ச்சி தகவல் விபரம்:-

Read Time:3 Minute, 45 Second

உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் தொற்றினால் மனித உடலுக்கு ஏற்படும் பாதிப்புக்கள் தொடர்பாக ஒவ்வொரு ஆராய்ச்சியிலும் புதுப்புது தகவல்கள் வந்த வண்ணம் உள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் தொடங்கிய போது தொற்று ஒருவரை தாக்கினால் அவரது நுரையீரலையும், சிறுநீரகத்தையும் தாக்குகிற வாய்ப்புகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதனை பல்வேறு ஆய்வு முடிவுகள் உறுதி செய்திருக்கின்றன.

இதயம் பாதிப்பு

இந்த நிலையில் இப்போதைய புதிய தகவலாக கொரோனா வைரஸ் ஒருவரை தாக்கினால் இதயத்தையும் பாதிப்படைய செய்யும் என தெரியவந்து உள்ளது. கொல்கத்தாவில் உள்ள பி.எம்.பிர்லா இதய ஆராய்ச்சி மையம் இதுதொடர்பான ஆய்வு முடிவுகளை வெளியிட்டு இருக்கிறது.

கொரோனா வைரசால் பாதிக்கப்படுகிற 5 நோயாளிகளில் ஒருவருக்கு சுவாச பிரச்சினை இருந்தாலும் இல்லாவிட்டாலும் இதயத்தில் பாதிப்பு ஏற்படுகிறது என்ற அதிர்ச்சி தகவல் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

மாரடைப்பு

“20 சதவீத கொரோனா வைரஸ் தொற்று நோயாளிகள் தங்களுக்கு நெஞ்சு வலி இருப்பதாகவும், மூச்சு திணறல் இருப்பதாகவும் கூறுகின்றனர். இது ஒரு கட்டத்தில் மாரடைப்புக்கும் வழி நடத்தும் வாய்ப்பு உள்ளது” என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.

பி.எம்.பிர்லா இதய ஆராய்ச்சி மையத்தின் இதயவியல் துறையின் இயக்குனர் டாக்டர் திமன் கஹாலி தெரிவிக்கையில், “கொரோனா தொற்றுடன் தொடர்புடைய பிரச்சினை இதயத்தை பாதிக்கும். வைரஸ் தொற்று இதயத்தை ஏன் சேதப்படுத்துகிறது என்பதற்கு சில வழிமுறைகள் உள்ளன என்பதை ஆராய்ச்சி தகவல்கள் கூறுகின்றன. கொரோனா வைரஸ் தொற்று நேரடியாகவே இதய அமைப்பை காயப்படுத்துகிறது.

கொரோனா வைரஸ் நோயாளிகளும் தங்களுக்கு மார்பு வலி இருப்பதாகவும், மூச்சு திணறல் உள்ளதாகவும் குறிப்பிடுகிறார்கள்ள். இறுதியில் இது அவர்களை மாரடைப்பில் கொண்டு போய் விட்டு விடும் வாய்ப்பும் உள்ளது” என்று குறிப்பிட்டு உள்ளார்.

விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ள தகவலில், கொரோனா வைரஸ் தொற்று கடுமையாக பாதிக்கிற போது உடல் முழுவதும் வீக்கத்தை ஏற்படுத்துகிறது. மேலும், அது இதயத்தை பாதித்தால், விளைவுகள் மோசமாக வாய்ப்பிருக்கிறது.

ஏற்கனவே, இதய நோய் இருப்பவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்றும் ஏற்பட்டால் அது மிகவும் ஆபத்தானது.

கொரோனாவுக்கு முன்பாக இதயத்தில் பாதிப்பு இல்லாதவர்களுக்கும் கொரோனா வைரஸ் தொற்றின் பிடியில் சிக்குகிறபோது இதயம் பாதிப்பு அடைகிறது. இதய நோய் இருப்பவர்கள், கொரோனா வைரஸ் தொற்று அறிகுறிகள் இருப்பவர்களிடம் இருந்து எப்போதும் விலகி இருக்க வேண்டும். தொடர்ந்து சிகிச்சை பெறுவதும் அவசியம் ஆகும். இன்புளூவென்சா, நிமோனியா நோய்களுக்கான தடுப்பூசிகளையும் போட்டு கொள்ள வேண்டும் என தெரிவித்து உள்ளனர்.