நூற்றாண்டு கால அயோத்தி பிரச்சினை… சுதந்திரத்திற்கு முன்பும், பின்பும் நடந்தது என்ன…? சுருக்கமான வரலாற்று பதிவு

Read Time:13 Minute, 34 Second
Page Visited: 556
நூற்றாண்டு கால அயோத்தி பிரச்சினை… சுதந்திரத்திற்கு முன்பும், பின்பும் நடந்தது என்ன…? சுருக்கமான வரலாற்று பதிவு

அயோத்தியில் ராமர் பிறந்த இடத்தில் பிரமாண்டமாக கட்டப்படும் ராமர் கோவிலுக்கு பிரதமர் மோடி ஆகஸ்ட் 5-ம் தேதி அடிக்கல் நாட்டினார். உலகமெங்கும் வாழுகிற இந்துக்களின் கனவாக இருந்த கோவில் கட்டும் பணி தொடங்கியிருக்கிறது. அயோத்தி பிரச்சினையில் 90 ஆண்டு காலம் ஆங்கிலேயர் ஆட்சியிலும், 70 ஆண்டு காலம் சுதந்திர இந்தியாவிலும் நடந்த சட்ட போராட்டம் முடிவுக்கு வந்து கோவில் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டு உள்ளது.

அயோத்தி பிரச்சினையில் சுதந்திரத்திற்கு முன்பும், பின்பும் நடந்தது என்ன என்பது பற்றிய சுருக்கமான வரலாறை அறிவோம்:-

பாபரி மசூதி 1528-ம் ஆண்டில் முதல் முகலாய பேரரசர் பாபரின் தளபதியான மிர் பாகி என்பவரால் அயோத்தியில் கட்டப்பட்டது.

இவ்விவகாரத்தில் முதல் பிரச்சனயனாது 1853 ஆண்டு எழும்பியது. 1853-ம் ஆண்டில் அவாத்தைச் சேர்ந்த நவாப் வாஜித் அலி ஷாவின் ஆட்சிக் காலத்தில் முதல் வன்முறை ஏற்பட்டது. மசூதியை கட்ட பாபரின் காலத்தில் ஒரு இந்து கோவில் அழிக்கப்பட்டதாக நிர்மோகி என்ற இந்து அமைப்பு குற்றம் சாட்டியது. இதனையடுத்து இவ்விவகாரம் பல்வேறு நீதிமன்றங்களுக்கு சென்றுள்ளது.

ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில்…

1857 : அன்றைய பைசாபாத் மாவட்டத்தின் ஒரு அங்கமாக அயோத்தி நகரம் இருந்தது.

பைசாபாத் மாஜிஸ்திரேட்டு முன்பாக பாபர் மசூதியின் மத குரு மவுலவி முகமது அஸ்கார் ஒரு வழக்கை தொடந்தார். அதில், பாபர் மசூதியின் முற்றத்தை அனுமன் கர்ஹி மகந்த் பலவந்தமாக கைப்பற்றிக்கொண்டார் என்று வழக்கில் தெரிவிக்கப்பட்டது.

1859 : இவ்விவகாரத்தில் ஆங்கிலேய அரசாங்கம் முதன்முதலாக தலையிட தொடங்கியது.

ஆங்கிலேய அரசு இஸ்லாமிய, இந்துக்கள் வழிபாட்டு தலங்களை பிரிக்கும் வகையில் ஒரு சுவர் கட்டியது. இந்துக்கள் கிழக்கு வாசல் வழியாகவும், முஸ்லிம்கள் வடக்கு வாசல் வழியாகவும் தத்தமது வழிபாட்டு தலங்களுக்கு செல்லலாம் என இந்த சுவர் எழுப்பப்பட்டது.

1860-1884 : முந்தைய வழக்குகளை போன்ற வழக்குகளை இஸ்லாமியர்கள் தொடர்ந்து தொடுத்தனர். நிலத்தை சட்ட விரோதமாக உள்ளூர் ஜீயர்களும், சாதுக்களும் ஆக்கிரமிப்பதாக வழக்குகளில் புகார் தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பான வழக்குகள் நீதிமன்றங்களில் தள்ளுபடி செய்யப்பட்டன.

1885 : கிழக்கு முற்றத்தில் உள்ள உயர்த்தப்பட்ட மேடை (சபுதாரா) ராமரின் பிறப்பிடம் என்றும், அங்கு ராமர் கோவில் கட்டுவதற்கு அனுமதி கோரியும், ராமர் பிறப்பிடத்தின் மகந்த் என்று அழைக்கப்பட்ட ரகுபர்தாஸ் என்பவர் வழக்கினை தொடுத்தார்.

1886 : ஆனால், ரகுபர்தாஸ் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. ஆங்கிலேய ஆட்சியாளர்கள் இவ்விவகாரத்தை ஒரு இந்து-முஸ்லிம் பிரச்சினை என பார்க்க தொடங்கினர்.

1870-1923 : பிரச்சினை தொடர்பான சர்ச்சைகள் மேலும் பரவியது. மசூதியின் பிரதான நுழைவாயிலில் எண்.1, ராம ஜென்மபூமி என்ற கல்வெட்டு வைக்கப்பட்டது.

சுதந்திரத்துக்கு பின்னர்…

1949 டிசம்பர் 22, 23: நள்ளிரவில் ராமர், லட்சுமணர் சிலைகள் அங்கு வைக்கப்பட்டன. மக்கள் ஒன்றாக கூடி பக்திப் பாடல்களை பாடினர்.

1949 டிசம்பர் 29 : பைசாபாத் நீதிமன்றம் பாபர் மசூதி சர்ச்சைக்குரிய சொத்து என்று அறிவித்தது. மேலும், அப்போதைய நிலை அப்படியே தொடர வேண்டும் என்றும் உத்தரவிட்டது. மசூதிக்குள் நுழைய இஸ்லாமியர்களுக்கு தடை விதிக்கப்பட்டது. பிரதான வாயிலும் பூட்டப்பட்டது. பக்க வாயிலில் இருந்து இந்துக்கள் தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டது. சிலைகளுக்கு பூஜை செய்ய 4 பூசாரிகள் நியமிக்கப்பட்டனர்.

1950 ஜனவரி 16 : இந்து மகாசபாவின் உறுப்பினர் கோபால் சிங் விஷாரத் என்பவர் சிவில் வழக்கு ஒன்றை தொடுத்தார். அதில் தடங்கல் இல்லாமல் அங்கு வழிபாட்டுக்கு அனுமதி கோரி இருந்தார். சிலைகளை அகற்ற நிரந்தரமான தடையை கேட்டார்.

1959 : நிர்மோஹி அகாரா அமைப்பும் வழக்கு ஒன்றை தாக்கல் செய்தது. அது மசூதி கிடையாது, அது கோவில் என்பதால் முழு கட்டமைப்பையும் அதற்கு மாற்ற வேண்டும் என்று கோரி இருந்தார்.

1961 டிச. 18 : சன்னி மத்திய வக்பு வாரியம் ஒரு வழக்கு தொடுத்தது. அதில் பாபர் மசூதியை தங்களிடம் ஒப்படைக்க கேட்டது. அங்கு சிலைகளை வைத்ததற்கும் எதிர்ப்பு தெரிவித்தது. மசூதி மற்றும் அதை சுற்றியுள்ள நிலம் ஒரு மயானமாக இருந்தது எனக் கூறியது.

1984 : ராம ஜென்மபூமி தளத்தில் ராம் கோவில் கட்டுமானத்திற்கு தலைமை தாங்க இந்து குழுக்கள் ஒரு குழுவை அமைத்தன. கோயில் இயக்கம் வேகத்தை அதிகரித்தது. பாரதிய ஜனதா தலைவர் எல் கே அத்வானி இயக்கத்தின் தலைமையை ஏற்றுக்கொண்டார்.

1986 பிப்ரவரி : பாபர் மசூதி பூட்டுகள் பைசாபாத் நீதிமன்றத்தால் உத்தரவால் திறக்கப்பட்டன.

1987 : பைசாபாத் நீதிமன்றத்தில் இருந்த வழக்குகள் அலகாபாத் உயர்நீதிமன்ற லக்னோ அமர்வுக்கு மாற்றப்பட்டன. மேலும், விஷாரத் தாக்கல் செய்த வழக்கு முதல் வழக்கு ஆனது. ராமச்சந்திர பரமஹன்ஸ் வழக்கு 2-ம் வழக்கு ஆனது. நிர்மோஹி அகாரா வழக்கு 3-ம் வழக்கானது. வக்பு வாரியத்தின் வழக்கு 4-ம் வழக்கானது.

1989 : ராம் லல்லா (குழந்தை ராமர்) வழக்கின் ஒரு தரப்பு ஆனார். 5-வது வழக்கு, ராம் லல்லாவின் சகா என்ற பெயரில் தியோகி நந்தன் அகர்வால் தாக்கல் செய்த வழக்கு.

1992 டிச. 6 : ஆயிரக்கணக்கான கரசேவகர்களால் பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இதையொட்டி 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. கர சேவகர்களுக்கு எதிராக முதல் வழக்கும், அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி, அசோக் சிங்கால், கிரிராஜ் கிஷோர், டால்மியா, வினய் கட்டியார், சாத்வி ரதம்பரா ஆகியோருக்கு எதிராக 2-வது வழக்கும் பதிவு செய்யப்பட்டது.

1992 டிச. 16 : பாபர் மசூதி இடிக்கப்பட்ட நிகழ்வுகள் தொடர்பான உண்மைகள், சூழ்நிலைகள் குறித்து ஆராய நீதிபதி லிபரான் கமிஷன் அமைக்கப்பட்டது.

1993 ஜன. 7 : பிரச்சினைக்குரிய இடத்தை சுற்றிலும் அமைந்து உள்ள இடத்தை கையகப்படுத்த ஜனாதிபதி அவசர சட்டம் ஒன்றை பிறப்பித்தார். அது, பின்னாளில் சட்டமானது.

1993-2002 : அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னோ அமர்வில் சொத்து உரிமை தொடர்பான வழக்கு விசாரணை நடந்தது.

2002 ஆக. 1 : இடிக்கப்பட்ட இடத்தில் தொல்பொருள் ஆராய்ச்சி நடத்த இந்திய தொல்பொருள் ஆராய்ச்சி அமைப்புக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

2002 டிச.- 2003 ஆக. : டிசம்பர் 30-ம் தேதி தொல்பொருள் ஆராய்ச்சியை தொடங்கியது.

2003 ஆக. : உயர்நீதிமன்றத்தில் தொல் பொருள் ஆராய்ச்சி அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.

2010 செப்டம்பர் 30 : அலகாபாத் உயர்நீதிமன்றம் சர்ச்சைக்குரிய இடத்தின் உரிமை பற்றிய தீர்ப்பை வழங்கியது. சன்னிவக்பு வாரியம், நிர்மோஹி அகாரா, ராம்லல்லா ஆகியோர் சர்ச்சைக்குரிய இடத்தை சமமாக பிரித்துக்கொள்ள வேண்டும் என தீர்ப்பு வழங்கியது. ஆனால், முத்தரப்பும் தீர்ப்பில் திருப்தி அடையவில்லை.

2011 மே 9 : உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து சம்பந்தப்பட்ட தரப்பினர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். பின்னர் உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது.

2017-2019 : உச்சநீதிமன்றத்தில் முதலில், தலைமை நீதிபதியாக இருந்த தீபக் மிஸ்ராவும், பின்னர் ரஞ்சன் கோகாயும் அயோத்தி வழக்கில் கவனம் செலுத்தினர். 2018-ல் தீபக் மிஸ்ரா ஓய்வு பெற்றார்.

2018 : அக்டோபரில் ரஞ்சன் கோகாய், தலைமை நீதிபதியாக பதவி ஏற்றதும், அயோத்தி வழக்கை விரைவாக விசாரித்து முடிக்க விருப்பத்தினை தெரிவித்தார்.

2019 ஜனவரி : அயோத்தி வழக்கை விசாரிக்க தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையில் அரசியல் சாசன அமர்வு அமைக்கப்பட்டது.

2019 மார்ச் : நீதிமன்றத்திற்கு வெளியே பிரச்சினைக்கு தீர்வு காண முன்னாள் நீதிபதி எப்.எம். கலிபுல்லா, வாழும் கலை நிறுவனர் ரவிசங்கர், மூத்த வக்கீல் ஸ்ரீராம் பஞ்சு ஆகியோர் தலைமையில் சமரச குழு ஒன்றை உச்சநீதிமன்றம் அமைத்தது.

2019 ஆகஸ்டு : ஆகஸ்டு 2-ந் தேதியன்று, சமரச ஒப்பந்தம் ஏற்படுத்த முடியவில்லை என்று சமரச குழு, நீதிமன்றத்தில் அறிக்கை அளித்தது. தொடர்ந்து 6-ம் தேதி முதல் இந்த வழக்கில் தினசரி விசாரணை என அறிவிக்கப்பட்டது.

2019 அக்டோபர் 16 : ஆகஸ்டு 6-ம் தேதி முதல் தொடர்ந்து 40 நாட்கள் விசாரணை நடந்து முடிந்தது. முத்தரப்பும் தங்கள் தரப்பு எழுத்துப்பூர்வ அறிக்கையினை தாக்கல் செய்தது.

உச்சநீதிமன்ற தீர்ப்பு

2019 நவம்பர் 9 : தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையில் நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், எஸ்.ஏ.போப்டே, எஸ்.அப்துல் நசீர், அசோக் பூஷண் ஆகியோரை கொண்ட அரசியல் சாசன அமர்வு தனது தீர்ப்பை வழங்கியது.

ஒருமனதாக அளிக்கப்பட்ட இந்த தீர்ப்பில், சர்ச்சைக்குரியதாக கருதப்பட்ட 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோவில் கட்டப்பட வேண்டும், இதை மேற்பார்வையிட மத்திய அரசு ஒரு அறக்கட்டளையை அமைக்க வேண்டும் என்றும் கூறப்பட்டது. இஸ்லாமியர்கள் மசூதி கட்டிக்கொள்வதற்கு 5 ஏக்கர் நிலம் வழங்குமாறும் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

2020 ஆக.5 : அயோத்தியில் ராமர் கோவிலுக்கு பூமி பூஜை போடப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி விழாவில் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார். இந்துக்களின் கனவு நனவாக அடிக்கல் நாட்டப்பட்டு, புதிய சரித்திரம் உருவாகிறது.

1 0
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %