கோழிக்கோடு விமான விபத்து… மழையில் தரையிறங்க முயன்ற விமானம் இரண்டாக உடைந்தது… முழு விபரம்:-

Read Time:4 Minute, 10 Second

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் கனமழை பெய்து வருகிறது. அங்கு அதிதீவிர கனமழை இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்து இருந்தது. இந்நிலையில், வந்தே பாரத் திட்டத்தின் கீழ் துபாயிலிருந்து அங்கிருக்கும் கோழிக்கோடு கரிப்பூர் விமான நிலையத்தில் இரவு 7:40 மணியளவில் தரையிறங்க முயன்ற Air India Express விமானம் விபத்துக்குள் சிக்கியது.

விபத்துக்குள்ளான AXB1344 எண் கொண்ட ஏர்இந்தியா எக்ஸ்பிரஸ் போயிங் 737 ரகத்தை சேர்ந்த விமானம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

விமானத்தில் மொத்தம் 195 பேர் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இதில் 10 பேர் குழந்தைகள் என முதல்கட்ட தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கொண்டுவரப்பட்ட லாக்டவுனால் வெளிநாடுகளில் சிக்கித் தவித்த இந்தியர்களை தாயகம் அழைத்துவரும் வந்தே பாரத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தில் இந்த விமானம் துபாயிலிருந்து கோழிக்கோட்டிற்கு வந்திருக்கிறது.

விமானம் தரையிறங்கும் போது ஓடுதளத்திலிருந்து விலகி பள்ளத்திற்குள் பாய்ந்து இரண்டாக உடைந்திருக்கிறது என முதல்கட்ட தகவல்கள் குறிப்பிட்டு உள்ளன. இந்த விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

தகவல் அறிந்ததும் மீட்பு குழுவினர் விரைந்து சென்று மீட்பு பணியை மேற்கொண்டு உள்ளனர். இந்த விபத்தில் உயிரிழப்பு மற்றும் காயம் தொடர்பாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை. ஆனால், விபத்தில் விமானி உள்பட 3 பேர் உயிரிழந்து உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டு இருந்த ஆம்புலன்ஸ்கள் வாயிலாக காயம் அடைந்தவர்கள் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர்.

கோழிக்கோடு விமான நிலையத்தில் வானிலை மோசமாக இருந்தால் அங்கு வரும் விமானங்களை அருகிலுள்ள விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்படும். ஆனால் இன்று அது செய்யப்படவில்லை எனத் தெரிகிறது.

இந்திய விமானப்போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) வெளியிட்டுள்ள செய்தியில், “துபாயிலிருந்து கோழிக்கோட்டிற்கு வந்த ஏர்இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் 195 பேர் இருந்து உள்ளனர். விமானம் தரையிறங்கிய போது தெரிவுநிலை 2000 மீட்டராக இருந்துள்ளது, கனமழை பெய்தது. ஓடுபாதை 10-ல் தரையிறங்கிய விமானம் ஓடுபாதையின் முடிவில் தொடர்ந்து வேகமாக சென்று பள்ளத்தாக்கில் இறங்கி இரண்டு துண்டுகளாக உடைந்துள்ளது.” என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

விமானம் விபத்துக்குள்ளான சம்பவம் குறித்து அதிர்ச்சி தெரிவித்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா டுவிட்டரில் வெளியிட்டு உள்ள செய்தியில், கேரளாவின் கோழிக்கோட்டில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் சோகமான விபத்து பற்றிய தகவல் அறிந்து மிகவும் மன உளைச்சலுக்கு ஆளானேன். விபத்து நேரிட்ட இடத்திற்கு விரைந்து செல்லவும், மீட்பு நடவடிக்கைகளுக்கு உதவவும் தேசியப்பேரிடர் மீட்பு படைக்கு அறிவுறுத்தியுள்ளேன் எனக் கூறியிருக்கிறார்.