பாகிஸ்தான் உரிமை கொண்டாடும் குஜராத்தின் ஜுனாகத் வரலாறு ஒரு பார்வை…

Read Time:10 Minute, 22 Second

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியலமைப்பின் 370 மற்றும் 35-ஏ பிரிவுகளை பிரதமர் மோடியின் தலைமையிலான மத்திய அரசு 2019 ஆகஸ்ட் 5 -ம் தேதி ரத்து செய்தது. இந்திய அரசின் இந்நடவடிக்கையின் ஓராண்டு நிறைவுறுவதை முன்னிட்டு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் சர்ச்சைக்குரிய பாகிஸ்தானின் புதிய வரைப்படம் ஒன்றை வெளியிட்டார்.

அதில், ஜம்மு காஷ்மீரை சர்ச்சைக்குரிய பகுதி என்றும்; சர் கிரீக் மற்றும் குஜராத்தின் ஜுனாகத்தை பாகிஸ்தானுடையது என்றும் குறிக்கப்பட்டு இருந்தது.

“காஷ்மீர்காக நான், நீ என்று இந்தியா – பாகிஸ்தான் எப்போதும் தீராது டிஷ்யூம் தான்…” என்று காஷ்மீர் தொடர்பான பிரச்சினைகள் நமக்கு நன்கு தெரிந்தவை தான்.

ஆனால், பாகிஸ்தான் புதியதாக சர் கிரீக் மற்றுன் ஜுனாகத் பகுதிகளுக்கும் உரிமை கொண்டாடும் வகையில் வரைப்படம் வெளியிட்டுள்ளது. இதில் சர் கிரீக் பகுதியானது இருநாட்டு எல்லை பிரச்சினை நிலவும் மற்றொரு பகுதியாகும். அதாவது குஜராத் மாநிலம் கட்ச் வளைகுடா பகுதியில் (கடல் எல்லை) சர் கிரீக் எல்லை தொடர்பாக பிரச்சினை இருந்து வருகிறது. இதைகூட பாகிஸ்தானின் அரசியல் என புறந்தள்ளலாம்.

ஆனால், ஆச்சர்யமூட்டும் வகையில் பாகிஸ்தான், குஜராத்தின் ஜுனாகத் பகுதியினையும் தன்னுடைய வரைப்படத்தில் இணைத்து இருக்கிறது. குஜராத்தின் ஒரு கடற்கரை பகுதியான ஜுனகாத் மீதான பாகிஸ்தானின் பார்வையானது வரலாற்றின் ஒரு சுவாரஸ்யமான பகுதியைக கொண்டிருக்கிறது என்பதும் உண்மையாகும். அதுபற்றி இப்போது தெரிந்துக்கொள்வோம்.

பாபி ஆட்சியாளர்கள்

ஆப்கானிஸ்தானை சேர்ந்த முகமது ஷெர்கான் பாபாய் 1654-ல் குஜராத்தின் ஜுனாகத்தில் பாபி வம்ச ஆட்சியை நிறுவியவர். பின்னர் அவரது சந்ததியினரே ஜுனாகத்தை ஆளும் பாபி நவாப்கள் ஆனர்கள். வம்சாவழி ஆட்சியில் சுற்றியிருந்த பிற பகுதிகளையும் கைப்பற்றி தங்களுடைய ஆட்சியின்கீழ் கொண்டுவந்தனர். முகலாயப் பேரரசு வீழ்ச்சி கண்ட நேரத்தில், குஜராத் பகுதிகளின் சுபேதாராக இருந்த முதலாவது பகதூர் கான் என்ற முகமது சேர் கான் பாபி 1730 முதல் ஜூனாகத் பகுதிக்கு மன்னராக தன்னை அறிவித்து கொண்டு செயல்பட தொடங்கினார். அப்போது, தன்னாட்சி கொண்ட அரசாக அறிவித்து கொண்டாலும், மராத்திய பேரரசுக்கு கப்பம் கட்டும் சமஸ்தானமாக ஜுனாகத் இருந்தது. பின்னர் 1807 முதல் ஜுனாகத் அரசு, பிரித்தானிய இந்தியா அரசுக்கு கப்பம் செலுத்தும் மன்னராட்சி பகுதியாக விளங்கியது.

முகமது மகாபத் கான் பாபி III

சுதந்திரத்திற்கு முன்னர் இந்தியாவில் இருந்த 565 சமஸ்தானங்களுள் ஜுனாகத்தும் ஒன்று. ஆங்கிலேயர்கள் இந்தியாவை விட்டு வெளியேறும் போது, இந்த சமஸ்தானங்கள் இந்தியா அல்லது புதியதாக உருவாகிய் பாகிஸ்தானில் இணைந்துக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது. அப்போது பதிவுகள் எதுவும் இல்லை என்றாலும், வைஸ்ராய் லூயிஸ் மவுண்ட்பேட்டன் இந்தியா அல்லது பாக்கிஸ்தானில் சேருவது தொடர்பாக ஒரு சமஸ்தானத்தின் முடிவுகள் புவியியல் ரீதியாக தகுதியானதாக இருக்க வேண்டும் என்று சுட்டிக்காட்டியதாக கூறப்படுகிறது.

பிரிவினையின் போது இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் இருந்த ஜுனாகத் சமஸ்தானத்தின் அரசராக முகமது மகாபத் கான் பாபி III ஆவார். இந்தியாவில் மிகவும் செழிப்பாக வாழ்ந்த இஸ்லாமிய மன்னர்களில் ஒருவர் மகாபத் கான். விலங்குகள், குறிப்பாக நாய்கள் மீதான அதிகமான அன்பினைக் கொண்டவர் என்று அறியப்படுகிறது. பாபி அப்போதை தன்னுடைய கொட்டாகையில் சுமார் 2,000 நாய்களை கொண்டிருந்ததாக கூறப்படுகிறது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். மேலும், அவைகளுக்கு பிறந்த நாள் கொண்டாட்டம் மற்றும் திருமணங்களை மிகவும் ஆரம்பரமாக விருந்துகளுடன் கொண்டாடுவார்.

பாபியைத் தவிர, ஜுனாகத் சமாஸ்தானத்தின் அனைத்து விஷயங்களிலும் கணிசமான செல்வாக்கை செலுத்திய மற்ற நபர் அவருடைய திவான் அல்லது பிரதம மந்திரி ஷா நவாஸ் பூட்டோ ஆவார். அவருடைய குடும்ப பெயர் இன்று வரையில் பாகிஸ்தன் அரசியல் மூலம் எதிரொலிக்கிறது.

பாகிஸ்தானுடன் இணைய முடிவு

பிரிவினையின் போது அரபிக்கடல் கரையில் துறைமுக நகராக செழிப்பிலிருந்த ஜுனாகத் சமஸ்தானத்தினை 1947 செப்டம்பரில் பாகிஸ்தானுடன் இணங்க முடிவு செய்தார் பாபி. இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் தெற்கு சவுராஷ்டிராவில் அமைந்திருக்கும் ஜுனாகத்தை பாகிஸ்தானுடன் இணைப்பதற்கு புவியியல் ரீதியாக எந்த தொடரும் இல்லை. இருப்பினும், இக்காரணத்தை நிராகரித்த பாபி, தன்னுடைய சமஸ்தானம் பாகிஸ்தானுடன் கடல் வழியாக இணைக்கப்பட்டதாக கூறினார். இதுதொடர்பான ஆவணங்களை ஜின்னாவிடம் வழங்க பாபியும், ஷா நவாஸ் பூட்டோவும் புதியதாக உருவாகிய பாகிஸ்தான் நாட்டிற்கு ஆகாய மார்க்கமாக விரைந்து சென்றனர்.

சர்தார் வல்லபாய் படேல்

இதற்கிடையே ஜுனாகத் சமாஸ்தானத்தில் பெரும் அதிர்வலைகள் ஏற்பட்டது. அதாவது அங்கிருந்த இந்து மக்கள், பாபியின் அறிவிப்புக்கு எதிராக போராட்டங்களை நடத்தினர். சமஸ்தானங்களை இணைக்கும் பணியில் இந்திய உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் படேல் கவனம் செலுத்தினார்.

இந்தியா நடவடிக்கை

பாபியின் முடிவுக்கு எதிராக சமாஸ்தானத்தில் பெரும்பான்மையான இந்து மக்களில் பெரும் பகுதியினர் எழுந்து போராடிக் கொண்டிருந்தனர். அப்போது இந்தியப் படைகளுக்கும், ஜுனாகத் சமஸ்தானத்தின் படைகளுக்கும் இடையில் சண்டை நேரிட்டது. சமாஸ்தானத்தின் கீழ் இருந்த இரண்டு குறுநில ஆட்சிப்பகுதிகளான மங்ரோல் மற்றும் பாபரியாவாட் இந்தியாவுடன் இணைந்தது. எவ்வாறாயினும், ஜுனகாத்தின் மற்றொரு குறுநில ஆட்சிப்பகுதிகளான பன்ட்வா மனவதர், ஜுனகாத் பாகிஸ்தானுடன் இணைவதாகவே அறிவித்திருந்தது, இது சிக்கல்களை மேலும் சிக்கலாக்கியது.

இதனையடுத்து இந்திய அப்பகுதிகளை கையகப்படுத்தும் நடைமுறைகளை மேற்கொண்டது.

இக்காலக்கட்டத்தில் ஜுனாகத்தின் ஆட்சி அதிகாரத்தினை நிர்வாகி என்ற பொறுப்பில் ஷா நவாஸ் பூட்டோ இருந்தார். அப்போது, பாகிஸ்தான் இந்தியாவின் நடவடிக்கையை “நேரடி விரோத நடவடிக்கை” என்று குற்றம் சாட்டியது. மேலும், ஆட்சியாளர்கள் மீதான குற்றச்சாட்டை கைவிட்டு அதன் துருப்புக்களை (படைகளை) திரும்பப் பெறுமாறு இந்தியாவை கேட்டுக்கொண்டது. ஆனால், சட்டம் மற்றும் ஒழுங்கை மீட்டெடுப்பதற்கும் நிர்வாகத்தின் முழுமையான முறிவை தடுப்பதற்கும் கராச்சியில் இருக்கும் திவான் பூட்டோவின் கோரிக்கையின் பெயரிலே நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என இந்தியா பதில் கொடுத்தது.

பிப்ரவரி 1948-ல் இந்தியா அல்லது பாகிஸ்தானில் சேருவது தொடர்பாக இரு பகுதிகளிலும் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது, மக்கள் இந்தியாவில் இணைவதற்கு ஆதரவாக வாக்களித்தனர்.

இந்தியாவுடன் இணைந்தது

பிரச்சினையின் போது பொது வாக்கெடுப்பு மூலம் இணைப்பு நடவடிக்கையை முறைப்படுத்த விரும்புவதாக இந்தியா சுட்டிக்காட்டியிருந்தது. அதன்படியே பிப்ரவரி 20, 1948 அன்று பொது வாக்கெடுப்பு நடைபெற்றது. பதிவு செய்யப்பட்ட 2,01,457 வாக்காளர்களில் 1,90,870 பேர் வாக்களித்தனர். இந்த எண்ணிக்கையில் 91 பேர் மட்டுமே பாகிஸ்தானுக்கு ஆதரவாக வாக்களித்தனர். ஜுனாகத்தை சுற்றிய ஐந்து அண்டை சிற்றரசப்பிராந்தியங்களிலும் வாக்கெடுப்பு நடைபெற்றது. இந்த பகுதிகளில் பதிவான 31,434 வாக்குகளில் 39 மட்டுமே பாகிஸ்தானுடன் இணைவதற்கு ஆதரவாக இருந்தது. அடுத்த சில நாட்களில் இரு பகுதிகளும் அதிகாரப்பூர்வமாக இந்தியாவின் ஒரு பகுதியாக மாறியது.

இப்போது இப்பகுதியினை தான் பாகிஸ்தான் தன்னுடைய வரைப்படத்தில் குறிப்பிட்டு சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.