நரேந்திர மோடி – அமித்ஷா: இந்திய அரசியலை மாற்றிய ஒரு ஆழமான நட்பு…!

Read Time:18 Minute, 0 Second
Page Visited: 639
நரேந்திர மோடி – அமித்ஷா: இந்திய அரசியலை மாற்றிய ஒரு ஆழமான நட்பு…!

எப்போதெல்லாம் தேவைப்படுகின்றதோ அப்போதெல்லாம் தோள் கொடுக்கிறார்; படையை தளபதி போல் முன்நின்று போரை நடத்துகிறார்; தொட்ட செயல்களில் எல்லாம் வெற்றிகளை பெற்று இதோ உங்களுக்கானது என சமர்பிக்கிறார்; முன்னெடுத்து செல்லும் செயல்களில் எல்லாம் வெற்றிக்கான வாகையை சூடிக்கொண்டிருக்கும் பிரதமர் மோடிக்கு
இடர்களை களைகிறார் நண்பர் அமித்ஷா.

சாய்ந்து விழும்போது தாங்கி பிடிக்கவும், இடர்கள் நெருங்கும் போது பாதுகாக்கவும், மகிழ்ச்சியில் இருக்கும் போது பகிர்ந்துக்கொள்ளவும் நட்பு தேவையென்பார்கள், இவையத்தனையுமாக மோடிக்கு இருக்கிறார் நண்பர் அமித்ஷா.

போரை நிறுத்தவும், வணிகத்தை பெறுக்கவும் அரசியல் மாற்றங்களை செய்யவும் நட்பு காரணமாக இருந்தது என்பதை வரலாறே கூறுகிறது. புலவர்களும், மன்னர்களும் கொண்ட நட்பை இலக்கியங்கள் கொண்டாடுகின்றன. நட்பு என்பது ஆன்மாவின் நெருக்கமாகும். அப்படியொரு நட்பைதான் மோடியும், அமித்ஷாவும் உலகிற்கு பிரதிபலிக்கிறார்கள். இந்திய அரசியலில் துணிச்சலாக மாற்றங்களை கொண்டுவருதில் இந்த இணை நிகரற்றது என்பதை பலரும் ஒப்புக்கொண்டுள்ளனர்.

இருவருக்கும் இடையே தலைவர் – தொண்டர் என்ற நெருக்கத்தை காட்டிலும், சித்தாந்த நெருக்கத்தை காட்டிலும் அன்பும் மரியாதையும் மிகுந்த மிகவும் ஆழமான நட்பே இவர்களுடைய நடவடிக்கையில் முன்நிற்கிறது.

எனக்கு இவர் இப்படிபட்டவராக இருக்கிறார்… என்று கூறும் இடத்தில் நட்பு தொலைந்துவிடுகிறது என்கிறார் வள்ளூவர்….

இனையர் இவரெமக்கு இன்னம்யாம் என்று
புனையினும் புல்லென்னும் நட்பு.

(குறள்:- 790)

‘இவர் எமக்கு இப்படிப்பட்டவர்…’, ‘யாம் இவருக்கு இத்தன்மைவர்…’ என்று நட்பின் அளவை சொன்னாலும், அந்நட்பு சிறப்பை இழந்து போகும் என்று கூறுகிறார் வள்ளுவர்.

மோடியும், அமித்ஷாவும் அதனை சரியாக உணர்ந்து செயல்படுகிறார்கள் என்பதை பல்வேறு தருணங்களில் வெளிப்படையாக காண முடிகிறது. யாருடைய வெற்றிக்கு யார் காரணம் என்பதை பிரித்துக்கூற முடியாதபடி அவர்கள் இருவரும் ஒருவருக்கான செயலை மற்றவர் எடுத்துச் செய்து பணியினை முழுமையாக்கி கொள்ளும் பண்பை இருவருமே கொண்டிருக்கிறார்கள்.

பிரதமர் மோடிக்கு எதிராக மாபெரும் எதிர்ப்பலைகள் இருப்பதாக கூறப்பட்ட 2019 தேர்தலில் இந்த இணை அசாதாரணமாக வெற்றிக்கொண்டது. 70 ஆண்டுகளாக கடந்துவந்த காஷ்மீர் பிரச்சனை சிக்கலை இந்த இணை மிகவும் துணிவோடு எதிர்க்கொண்டு இருக்கிறது. தொடவே முடியாது என்ற குறிப்பிடப்பட்ட இலக்குகளை நோக்கியும் பயணிக்க தொடங்கியுள்ளது.

ஆமதாபாத்தில் கல்லூரி படிப்பை படித்த போது அமித்ஷா, 1984-ல் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் முதல்முறையாக நரேந்திர மோடியை சந்தித்தார். இன்றுவரையில் புரிதல் கொண்ட நட்புடன் செல்கிறார்கள். பா.ஜனதாவில் இணைத்துக்கொள்ள பிரதமர் மோடியை அவர்தான் கூறியதாக கூறப்படுகிறது.

1990-ம் ஆண்டு குஜராத்தில் நரேந்திர மோடியும், அமித்ஷாவும் தேர்தல் பிரசாரத்தில் மிகவும் தீவிரமாக பிரசாரம் மேற்கொண்டனர். பிரசார இடைவேளிக்கு இடையே இருவரும் உணவகம் ஒன்றில் உணவு அருந்தினர். அப்போது பிரதமர் மோடியிடம் பேசிய அமித்ஷா, ‘நரேந்திர பாய்…’ நீங்கள் ஒருநாள் இந்நாட்டின் பிரதமர் ஆவீர்கள் என்று கூறினார். அப்போது நரேந்திர மோடி குஜராத் மாநிலத்தின் முதல்வராகக்கூட இல்லை. அமித்ஷாவின் கூற்று சுமார் 24 ஆண்டுகள் கடந்து உண்மையாகியது. 2014-ம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் பா.ஜனதா அமோக வெற்றியை தனதாக்கியது. நரேந்திர மோடி பிரதமர் ஆனார்.

1964-ம் ஆண்டு மும்பையில் பிறந்த அமித்ஷாவிற்கு சிறுவயது முதலே ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் மிகுந்த ஈடுபாடை கொண்டிருந்தார். 1986-ம் ஆண்டு பா.ஜனதா கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டு செயல்பட தொடங்கினார். கட்சியின் இளைஞர் பிரிவில் பல்வேறு பொறுப்புகளை வகித்து செயல்பட்டார். 1995-ம் ஆண்டு குஜராத்தில் பா.ஜனதா முதல்முறையாக ஆட்சியமைத்த போது காங்கிரஸ் கட்சியை வீழ்த்த அமித்ஷாவும், பிரதமர் மோடியும் மிகவும் தீவிரமாக பணியாற்றினர்.

பிரதமர் மோடியையும், அமித்ஷாவையும் ஒன்றாக இணைத்தது ஆர்.எஸ்.எஸ். என்ற இயக்கம். சிறுவயதிலே ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் தன்னை இணைத்து செயல்பட்ட பிரதமர் மோடிக்கு அத்வானி உள்ளிட்ட பல்வேறு தலைவர்களின் அறிமுகம் கிடைத்தது. மும்பையில் தொழில் அதிபரின் மகனாக பிறந்த அமித்ஷா தொழில் துறையில் அதிகம் கவனம் செலுத்தினார். ஆர்.எஸ்.எஸ். அமைப்பிலும் தீவிரமாக செயல்பட்டார். பின்னர் பா.ஜனதா கட்சியின் மாணவர் அணியிலும் முழுமையாக தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்.

முழுநேர அரசியலை தேர்வுசெய்த அமித்ஷா வியாபாரத்தை நிறுத்திக்கொண்டார். அரசியல் என்றதுமே அமித்ஷா வைத்த இலக்கு தேசிய அரசியலைதான். தொடக்கத்தில் இருந்தே தேசிய அரசியல் நகர்வுகளை மிகவும் துல்லியமாக கவனித்துவந்தார். தன்னுடைய குறிப்பேட்டில் குறித்துவைப்பதையும் வழக்கமாக கொண்டிருந்தார். ஆமதாபாத்தில் கல்லூரி படிப்பை படித்த போது அமித்ஷா முதல்முறையாக நரேந்திர மோடியை சந்தித்தார். 1991-ம் ஆண்டு குஜராத் மாநிலம் காந்திநகரில் அத்வானி போட்டியிட்ட போது அமித்ஷா தேர்தல் முகவராக செயல்பட்டார்.

அவருடைய சிறப்பான பணி கட்சியில் நல்ல பெயரை வாங்கி கொடுத்தது. அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். அத்வானி, மோடியின் கவனத்தையும் பெற்றார். அவருடைய புத்தி கூர்மை பிரதமர் மோடியை வெகுவாக கவர்ந்தது. இருவருக்கும் இடையிலான நெருக்கம் அதிகரித்தது. 1995-க்கு பின்னர் குஜராத் மாநில பா.ஜனதாவில் நரேந்திர மோடியின் தலைமைக்கு கீழ் அமித்ஷா பணியாற்ற தொடங்கினார். பிரதமர் மோடியை விட 14 வயது இளையவர் அமித்ஷா, இருவருக்கும் இடையிலான புரிதல் காரணமாக இணைந்தே செயல்பட்டு வருகிறார்கள்.

ஆட்சி, கட்சி என இரண்டையும் ஒற்போல கருதுபவகள் இருவரும். நரேந்திர மோடி பிரதமர் ஆவதற்கு இன்றைய பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் அமித்ஷா முக்கிய பங்கு கொண்டவர். காங்கிரஸ் கோட்டையாக இருந்த குஜராத் மாநிலம் மோடி-அமித்ஷா இணையின் செயல்பாட்டால் மெதுவாக பா.ஜனதா வசம் வந்தது. 1995-ம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பா.ஜனதா தனிப்பெரும்பான்மையுடன் வென்றது. மொத்தம் உள்ள 182 தொகுதிகளில் பா.ஜனதா கட்சி 121 தொகுதிகளை கைப்பற்றியது. அன்றிலிருந்து இன்றுவரையில் குஜராத் பா.ஜனதாவின் கோட்டையாகவே இருக்கிறது.

அதற்கு முக்கிய காரணமாக இருப்பது மோடி-அமித்ஷா. 1990களில் மோடி பா.ஜனதா கட்சியின் பொதுச்செயலாளராக பணியாற்றிய போது அமித்ஷாவிற்கு பல்வேறு பொறுப்புகளை வாங்கி கொடுத்தார். 1997 குஜராத் மாநிலம் சர்கேஜ் சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் அமித்ஷா போட்டியிட்டார். நரேந்திர மோடியின் சிபாரிசில் சீட் பெற்று வெற்றியை தனதாக்கினார் அமித்ஷா. தொடர்ந்து 2007-ம் ஆண்டுவரையில் இத்தொகுதியில் வென்றார். 2002-ம் ஆண்டு தேர்தலில் சர்கேஜ் தொகுதியில் போட்டியிட்ட அமித்ஷா தன்னை எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளரைவிட ஒருலட்சத்து ஐம்பதாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றார்.

மோடி கூட இத்தனைவாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப்பெறவில்லை. 2002-ம் ஆண்டு குஜராத் மாநிலத்தின் முதல்வராக மோடி இரண்டாவது முறையாக பதவியேற்ற பின்னர், அவருடைய அமைச்சரவையில் அமித்ஷா முக்கிய இடம்பிடித்தார். உள்துறை உள்ளிட்ட 10-க்கும் அதிகமான துறைகள் அமித்ஷாவிடம் வந்தது. மோடியின் அமைச்சரவையில் இடம்பெற்ற இளம் தலைவர் அவராவார். அமித்ஷாவை மோடி மிகவும் நம்பினார். மோடிக்கு அடுத்த இடத்தில் அமித்ஷா இருந்தார். 2007-ம் ஆண்டு தேர்தலில் வெற்றிப்பெற்று மோடி மீண்டும் முதல்வரானதும் அமித்ஷாவிற்கான பொறுப்பு அதிகரித்தது. இடம் வலுப்பெற்றது.

இதற்கிடையே 2005-ம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதி குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற என்கவுண்டரில் சொராபுதீன் ஷேக் என்பவர் சுட்டுக் கொல்லப்பட்டார். அவருக்கு பாகிஸ்தானிலிருந்து செயல்படும் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்பு உள்ளது என காவல்துறை குற்றம் சாட்டியது. அதிலிருந்து ஒரு ஆண்டுகள் கழித்து 2006-ம் ஆண்டு டிசம்பர் 26-ம் தேதி சொராபுதீன் ஷேக் உடன் இருந்த துளசிராம் என்பவர் சுட்டுக் கொல்லப்பட்டார். இவ்விவகாரங்களில் அமித்ஷா மற்றும் குஜராத் காவல்துறையின் மீது குற்றம் சாட்டப்பட்டது.

இவ்வழக்கை விசாரித்துவந்த சிபிஐ அமித்ஷா உள்ளிட்டோர் மீது 2010-ம் ஆண்டு குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்தது. அமித்ஷாவுக்கு என்கவுண்டரில் தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது. அவர் கைது செய்யப்படலாம் என தகவல் கசிந்தது. உடனடியாக தலைமறைவு ஆனார். இறுதியாக 2010 ஜூலை 25-ம் தேதி அமித்ஷா கைது செய்யப்பட்டார். அக்டோபரில் ஜாமீனில் வெளிவந்தார். நரேந்திர மோடியை தேசிய அரசியலுக்கு கொண்டுவந்து அமித்ஷாவை குஜராத் முதல்வராக்கலாம் என பா.ஜனதா திட்டமிட்ட போது சிபிஐ வழக்கு முட்டுக்கட்டையானது.

இஸ்ரத் ஜகான் என் கவுண்டர் வழக்கு மற்றும் இளம்பெண் ஒருவர் உளவு பார்க்கப்பட்ட வழக்கிலும் அவருடைய பெயர் அடிப்பட்டது. ஒருகட்டத்தில் அவர் குஜராத் மாநிலத்திற்கு நுழையவே தடை விதிக்கப்பட்டது. 2012-ம் ஆண்டுவரையில் இதே நிலைதான் தொடர்ந்தது. நீண்ட சட்ட போராட்டத்திற்கு பின்னர் 2014-ம் டிசம்பர் மாதம் சொராபுதீன் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார். இதற்கு இடைப்பட்ட காலங்களில் பிரதமர் மோடி பல்வேறு இன்னல்களை தனியாக சந்தித்தார். காங்கிரஸ் அரசு ஆளுநர் மூலமாக பல்வேறு நெருக்கடிகளை கொடுத்தது. அமித்ஷாவின் அரசியல் வாழ்க்கை முடிக்குவந்தது என பலரும் நினைத்த நிலையில், புதியவேகம், உத்தியுடன் களமிறங்கினார்.

குஜராத் தேர்தலில் தொடர்ச்சியாக வென்றாலும் கூட பா.ஜனதாவிற்கு தேசிய அரசியலில் வெற்றி கிடைக்கவில்லை. காங்கிரஸ் மத்தியில் தொடர்ந்து 10 ஆண்டுகள் ஆட்சியிலிருந்தது. அப்போது வெறும் இந்துத்துவா அரசியல் மட்டும் வெற்றியை கொடுக்காது என எண்ணிய இருவரும் குஜராத் மாடல் வளர்ச்சி என்ற மந்திரத்தை உச்சரிக்க தொடங்கினர். 2014 தேர்தலில் பா.ஜனதா கட்சியின் உ.பி. செயல்பாட்டாளராக அமித்ஷா நியமனம் செய்யப்பட்டார். கட்சி எதிர்பார்க்காத வெற்றியை அங்கு பெற்றுக்கொடுத்தார் அமித்ஷா. அதாவது பா.ஜனதா கட்சிக்கு 72 இடங்கள் கிடைத்தது.

இதுவே பா.ஜனதா மெஜாரிட்டியாக ஆட்சியை பிடிக்க உதவியது. குஜராத் மாநிலத்தில் இருந்த மோடி என்ற வசீகரத்தை இந்தியா முழுவதும் கொண்டு சென்றதில் அமித்ஷாவிற்கு முக்கிய பங்கு இருக்கிறது. கட்சியை உ.பி.யில் வளர்ச்சியடைய செய்ய அமித்ஷாவின் பங்கு மிகவும் முக்கியமானது. மோடி வசிகரத்தின் காரணமாக மக்களை கவர்ந்த நிலையில், அமித்ஷா கட்சியின் பணிகளில் சிறப்பாக செயல்பட்டார். கட்சியின் தேசிய தலைவராகவும் அமித்ஷா நியமனம் செய்யப்பட்டார். இதனையடுத்து இக்கூட்டணிக்கு எல்லா தேர்தல்களிலும் வெற்றிக்கொடிதான். பா.ஜனதா கட்சியின் இரண்டு முகம்கள் மோடி-அமித்ஷா என்ற நிலைக்கு களம் மாறியது.

இடைவிடாத தேர்தல் பணி, வியூகங்கள், புதிய திட்டங்கள், அதற்கு ஏற்ப செயல்பாடு என்ற பணியால் பா.ஜனதாவிற்கு வெற்றிகள் குவிந்தது. மோடியும் – அமித்ஷாவும் இந்திய அரசியலில் தவிர்க்க முடியாத சக்திகளாகினர். 2018 இறுதியில் நடைபெற்ற மத்திய பிரதேச, ராஜஸ்தான், சத்தீஷ்கார் தேர்தல்களில் பா.ஜனதா காங்கிரசுடன் கடுமையாக போட்டியிட்டு தோல்வியை தழுவியது. 2019 தேர்தலில் கடினமான நிலையையே பா.ஜனதா அடையும் என கணிக்கப்பட்டது. இதையெல்லாம் மோடி -அமித்ஷா கூட்டணி உடைத்து தூக்கியெறிந்து ஆட்சியை மீண்டும் தனதாக்கியது. தேசிய அரசியலில் தீவிரமாக செயல்பட அவரை உள்துறை அமைச்சராக்கி மோடி தன்னுடைய வெற்றிகளை குவித்து முன்நோக்கி செல்கிறார். 70 ஆண்டுகளாக இருந்த காஷ்மீர் பிரச்சனையிலும் முக்கியமான நகர்வை முன்னெடுத்துள்ளனர். இருவருக்கும் இடையிலான புரிதல், ஆழமான, ஆன்மாவாக இருக்கும் நட்பே வெற்றிகளுக்கு அடித்தளமாக இருந்து வருகிறது.

0 0
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
50 %
Angry
Angry
50 %
Surprise
Surprise
0 %