‘சீனாவில் உயிர்க்கொல்லி Tick-Borne வைரஸ் பரவல்…’ எப்படி பரவுகிறது…? பாதிப்பு என்ன…? தெரிந்துக்கொள்வோம்:-

Read Time:6 Minute, 48 Second
Page Visited: 616
‘சீனாவில் உயிர்க்கொல்லி Tick-Borne வைரஸ் பரவல்…’ எப்படி பரவுகிறது…? பாதிப்பு என்ன…? தெரிந்துக்கொள்வோம்:-

சீனாவில் தோன்றிய கொரோனா வைரசின் கொடூரம் உச்சநிலையில் இருக்கிறது. இந்த வைரசை அழிக்க மருந்து இன்றி உலகம் மக்களின் உயிரை விலையாக கொடுக்கிறது.

இந்நிலையில் சீனாவில் Tick-Borne என்ற உயிர்க்கொல்லி வைரஸ் பரவுகிறது என்ற செய்தி வெளியாகியிருக்கிறது. இந்த வைரஸ் தொற்று பரவலுக்கு இதுவரையில் 6 பேர் உயிரிழந்து உள்ளனர். சுமார் 60-க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த வைரஸ் தொற்றின் பரவல் எப்படியிருக்கிறது என்பது தொடர்பாக சீன அதிகாரிகள் களப்பணிகளில் இறங்கியுள்ளனர். இந்த வைரஸ் தொடர்பான தகவல்களை தெரிந்துக்கொள்வோம்:-

வைரஸ் எங்கிருந்து பரவுகிறது…?

ஒருவகை உண்ணி கடித்தால் இந்த வைரஸ் தொற்று ஏற்படுகிறது என முதல்கட்ட தகவல் வெளியாகியிருக்கிறது.

வைரஸ்களை கடத்தும் முக்கிய உயிரினமாக உண்ணிகள் செயல்படுகிறது என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். மார்ச் முதல் நவம்பர் வரையிலான மாதங்களில் இந்த நோய் தொற்று நிலவும் என்றும் இதன் உச்சநிலை ஏப்ரல் மற்றும் ஜூலை மாதங்களுக்கு இடையில் இருக்கிறது எனவும் தெரிவிக்கப்படுகிறது.

உண்ணிகள் கடித்தால் மனிதர்களுக்கு Tick-Borne Virus தொற்று ஏற்படுகிறது. நோய்க்கிருமி மனிதர்களிடம் இருந்து மற்றொரு மனிதருக்கு பரவுவதையும் நிராகரிக்க முடியாது என சீன வைராலஜிஸ்டுகள் எச்சரித்து உள்ளனர். வைரசினால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் இரத்தம் மற்றும் சளி மூலம் மற்றவர்களுக்கு வைரஸ் பரவலாம் என ஜெஜியாங் பல்கலைக்கழக (Zhejiang University) மருத்துவர்கள் எச்சரித்து உள்ளனர்.

பாதிப்பு என்னாவாக இருக்கும்…?

உண்ணி கடிப்பதால் ஏற்படும் வைரஸ் தொற்றினால் மனித ரத்தத்தில் இருக்கும் பிளேட்லெட்டுகளை (ரத்தத்தில் உள்ள ‘பிளேட்லெட்’ அணுக்கள் உடலில் காயம் ஏற்பட்டவுடன் ரத்தம் வெளியேறுவதை இயற்கையாகவே தடுத்து உறையச்செய்யும் அமைப்பாக செயல்படுகிறது) குறைக்கிறது.

பிளேட்லெட் குறைவினால் தொற்றினை உருவாக்குகிறது. இதனால் த்ரோம்போசைட்டோபீனியா உடன் கடுமையான காய்ச்சல் (Severe Fever with Thrombocytopenia Syndrome, எஸ்.எப்.டி.எஸ்.) ஏற்படுகிறது.

பாதிப்புக்கான அறிகுறிகள் என்ன…?

உண்ணிகள் மூலம் பரவும் இந்த எஸ்.எப்.டி.எஸ். வைரஸ் (Severe Fever with Thrombocytopenia Syndrome) புதிய வைரஸ் இல்லை எனவும் கூறப்படுகிறது. இது முதன்முதலில் 2011-ல் சீனாவால் தடுக்கபட்டு இருக்கிறது.

  • இந்த நோய்க்கிருமி புன்யாவைரஸ் குடும்பத்தை சேர்ந்தது;
  • த்ரோம்போசைட்டோபீனியா நோய்க்குறி (எஸ்.எப்.டி.எஸ்) கடுமையான காய்ச்சலை ஏற்படுத்துகிறது.
  • காய்ச்சல், சோர்வு, இருமல், குளிர், குமட்டல் இந்த வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகளாகும்.
  • இரத்தத்தில் பிளேட்லெட் எண்ணிக்கை குறைவு, வெள்ளை அணுக்கள் குறைவு, நரம்பியல் மற்றும் இரைப்பை குடல் பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது.
  • ரத்தக்கசிவு மற்றும் பல உறுப்பு செயலிழப்பு போன்ற மிகவும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்துகிறது என குறிப்பிடப்படுகிறது.

வைரஸ் தொற்று தொடர்பாக அதிக கவலை கொள்ளலாமா…?

உலக சுகாதார அமைப்பின் அறிவிப்பின்படி அதிக உயிரிழப்பை ஏற்படுத்தும் முதல் 10 தொற்றுகளில் இந்த வைரஸ் தொற்றும் இடம்பெற்று இருக்கிறது.

மனிதர்களிடம் Tick-Borne வைரஸ் தொற்றினால் ஏற்படும் உயிரிழப்பு விகிதம் கிட்டத்தட்ட 30 சதவீதமாக உள்ளது. இது, இப்போது பரவும் கொரோனா வைரசைவிடவும் அதிகமான உயிரிழப்பு விகிதமாகும். இப்போது பரவும் கொரோனாவின் உயிரிழப்பு விகிதம் தோராயமாக 3.4% என உலக சுகாதார அமைப்பு மதிப்பிட்டுள்ளது.

வைரசுக்கு அதிகம் பாதிக்கப்படக்கூடியவர் யார்…?

ஆடுகள், மான் போன்ற கால்நடை விலங்குகள் மனிதர்களுக்கு வைரஸை மாற்றக்கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்து உள்ளனர்.

செல்லப்பிராணி வளர்ப்பவர்கள், விவசாயிகள், வேட்டைக்காரர்கள் இந்த நோயால் பாதிக்கப்படுகின்றனர். ஏனெனில், அவர்கள் வைரசை சுமந்து செல்லும் விலங்குகளுடன் தொடர்ந்து தொடர்பு கொள்கிறார்கள். வைரசால் பாதிக்கப்படும்போது கூட, விலங்குகள் பொதுவாக பாதிப்பு தொடர்புடைய எந்த அறிகுறிகளையும் காண்பிப்பதில்லை எனவும் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

சிகிச்சை மற்றும் தடுப்பு பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது…

காடுகள், பூங்காக்கள் மற்றும் உண்ணி செழித்து வளரக்கூடிய பிற சூழல்களில் நடந்து செல்லும்போது குறுகிய ஆடைகளை அணிவதை தவிர்க்குமாறு சீனாவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் பொது மக்களை வலியுறுத்தியுள்ளது. நோய்க்கு சிகிச்சையளிக்க இன்னும் தடுப்பூசி இல்லை என்றாலும், Ribavirin என்ற ஆன்டிவைரல் மருந்து சிகிச்சையளிக்க பயனுள்ளதாக உள்ளது என நிரூபிக்கப்பட்டுள்ளது.

0 0
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %