இந்தியாவில் கொரோனா தடுப்பூசி விலை ரூ.225 ஆக நிர்ணயம்… எப்போது தயாராகும்…?

Read Time:3 Minute, 59 Second

இங்கிலாந்து நாட்டின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், அஸ்ட்ரா ஜெனேகா மருந்து நிறுவனத்துடன் இணைந்து கொரோனா வைரஸ் தடுப்பூசியை உருவாக்கி இருக்கிறது.

இந்த தடுப்பூசிக்கு இந்தியாவில் ‘கோவிஷீல்டு’ என்று பெயரிடப்பட்டு உள்ளது.

கோவிஷீல்டு தடுப்பூசி, ஒரே நேரத்தில் கொரோனா வைரசை வீழ்த்துவதற்கான நோய் எதிர்ப்பு சக்தியையும் (ஆன்டிபாடி), டி செல்களையும் உருவாக்கும்; இது இரட்டை பாதுகாப்பு அம்சம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர்.

சீரம் இன்ஸ்டிடியூட்

இந்தியாவில் இந்த தடுப்பூசியை உற்பத்தி செய்து வினியோகிப்பதற்கு புனேவை சேர்ந்த இந்திய சீரம் இன்ஸ்டிடியூட் என்ற பிரபல மருந்து நிறுவனம், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துடனும், அதன் கூட்டாளியான அஸ்ட்ரா ஜெனேகா நிறுவனத்துடனும் ஒப்பந்தம் செய்திருக்கிறது.

கோவிஷீல்டு தடுப்பூசி 3-ம் கட்ட மருத்துவ பரிசோதனையில் இருக்கிறது. இந்தியாவிலும் இதன் 2-வது மற்றும் 3-வது கட்ட பரிசோதயை நடத்துவதற்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு ஒப்புதல் வழங்கியிருக்கிறது.

மலிவு விலையில்

100 கோடி டோஸ் தடுப்பூசியை தயாரித்து வினியோகிக்க இருப்பதாக இந்திய சீரம் இன்ஸ்டிடியூட் தெரிவித்து உள்ளது.

இந்தியாவில் ரூ.225 என்ற விலையில் தடுப்பூசி விற்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தடுப்பூசிக்கு 3 அமெரிக்க டாலர் என்ற மலிவு விலையை (சுமார் ரூ.225) நிர்ணயித்துள்ளோம் என அந்நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.

எப்போது தயாராகும்…?

தடுப்பூசி மருந்து ஒழுங்குமுறை ஒப்புதல் மற்றும் உலக சுகாதார நிறுவனத்தின் முன் ஒப்புதல் ஆகியவற்றை பெற்றதும் இந்தியாவிலும், குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளுக்கு வினியோகிக்க கொரோனா தடுப்பூசியை உற்பத்தி செய்ய முடியும். இது 2021-ம் ஆண்டின் முதல்பாதிக்குள் நிறைவேறும் என அந்நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.

குறைந்த விலையில் எப்படி…?

சீரம் இன்ஸ்டிடியுட் விடுத்துள்ள அறிக்கையில் இதுதொடர்பான விளக்கம் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதில், உலகின் மிகப்பெரிய தடுப்பூசி மருந்து உற்பத்தி நிறுவனமான இந்திய சீரம் இன்ஸ்டிடியுட், காவி என்று அழைக்க்கப்படுகிற தடுப்பூசி கூட்டணியுடனும், பில் கேட்ஸ் அண்ட் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையுடனும் ஒரு புதிய மைல்கல்லாக அமைகிற கூட்டாண்மைக்குள் நுழைகிறது.

இந்தியா மற்றும் குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளுக்கு 10 கோடி கொரோனா வைரஸ் தடுப்பூசி டோஸ்களை தயாரித்து வழங்குவதை இது துரிதப்படுத்துவதாக அமையும். இந்த ஒத்துழைப்பு, தடுப்பூசி உற்பத்தி திறனை அதிகரிப்பதற்கு இந்திய சீரம் இன்ஸ்டிடியுட்டுக்கு வெளிப்படையான முதலீட்டை வழங்கும். அஸ்ட்ரா ஜெனேகா மற்றும் நோவாவேக்ஸ் தடுப்பூசிகளை இந்திய சீரம் இன்ஸ்டிடியுட் உற்பத்தி செய்வதற்கு இந்த நிதி உதவி புரியும் என்று கூறப்பட்டுள்ளது.