இன்று உலகம் முழுவதும் மனித குலத்தை ஆட்டிப்படைத்து வருகிறது கொரோனா வைரஸ்.
இந்த வைரஸ் தொற்றுக்கு எதிரான மருந்து இல்லையென்பதால் நோயாளிகளுக்கு பிற தடுப்பு மருந்துகள் மூலம் சிகிச்சை அளிக்கப்படுகிறது. கொரோனா வைரசுக்கு எதிரான போராட்டத்தில் எதிர்ப்பு சக்தி மிகவும் அவசியமாதலால் அதற்கான உணவுகளை எடுத்துக்கொள்ள அறிவுரை வழங்கப்படுகிறது.
கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டவர்கள் சிலர் உயிரிழந்தாலும் முறையான சிகிச்சையின் மூலம் பலர் குணம் அடைந்து வருகின்றனர். இந்த உண்மையை புரிந்துக்கொள்ள முயற்சிக்காத சிலர் தற்கொலை செய்துக் கொள்கிறார்கள் மற்றும் இதுதொடர்பான கவலையிலே தங்களுடைய உடலை சோர்வடைய செய்து கொரோனா உயிருடன் விளையாட அனுமதிக்கிறார்கள்.
கொரோனா வைரஸ் முதியவர்களையே அதிகமாக பாதிக்கிறது, உயிரிழக்கச் செய்கிறது என்ற செய்தி பரவலாக உள்ளது. அறிவியல் ரீதியாக அவர்கள் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர் என கூறினாலும், ஆத்ம பலத்தினால் அவர்கள் குணம் அடைகிறார்கள் என்பதும் மறுக்க முடியாது. இதற்கு வலுசேர்க்கும் வகையில் உலகம் முழுவதும் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்ட 90 வயதுக்கும் அதிகமானவர்கள் வைரஸ் தொற்றிலிருந்து குணம் அடைந்து உள்ளனர். இதற்கெல்லாம் அவர்களுடைய நம்பிக்கையே ஆதார பலமாக இருந்து கொரோனாவிடம் வெற்றியடைய செய்திருக்கிறது என்பது ஆதாரப்பூர்வமான உண்மையாகும்.
இதுபோன்ற சம்பவம் தான் ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் நடந்திருக்கிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட 105 மூதாட்டி மோகானாம்பா உயிர்பிழைத்து இருக்கிறார்.
கர்னூலில் கொரோனாவினால் அதிகமாக பதிக்கப்பட்ட ஒரு தெருவில் பாட்டியின் வீடு உள்ளது. அவருடைய தெருவில் மட்டுமே 100-க்கும் அதிகமானோருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருந்தது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். பாட்டிக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு மாவட்ட தலைமை மருத்துவமனையில் ஜூலை 13-ம் தேதி சேர்க்கப்பட்டு உள்ளார். பாட்டி தனது மகனுடன் வசித்து வருகிறார். அவருக்கு 26 பேரன், பேத்திகளும்; 18 கொள்ளு பேரன் பேத்திகளும் உள்ளனர். பாட்டியை மருத்துவமனையில் அனுமதித்ததும் பலரும் பிழைப்பாரா…? என்ற சந்தேகத்திலேயே இருந்து உள்ளனர்.
ஆனால், பாட்டி தன்னுடைய மன வலிமை மற்றும் உணவு முறை இயல்பான வாழ்க்கையினால் கொரோனாவை விரட்டிவிட்டு வீடு திரும்பியிருக்கிறார். 12 நாட்கள் சிகிச்சைக்கு பிறகு அவர் வீடு சென்று இருக்கிறார்.இதுதொடர்பாக பாட்டி பேசுகையில், “என்னுடைய சுய நம்பிக்கையும், சரியான உணவு முறையும் மற்றும் தொடர்ச்சியான யோகாவும் தான் நான் கொரோனாவிலிருந்து மீழ்வதற்கு காரணமாகும்,” என்று கூறியிருக்கிறார்.
“சரியான நேரத்தில் மருந்து எடுத்துக்கொண்டது மற்றும் தியானம் மற்றும் சத்தான உணவு பழக்கவழக்கம் மூதாட்டியை கொரோனாவிலிருந்து குணம் அடைய உதவியிருக்கிறது. மருத்துவமனையில் மூதாட்டி எந்த ஒரு அச்சமும் இன்றி சிகிச்சைக்கு ஒத்துழைத்தார், ”என்று கர்னூல் மாவட்ட மருத்துவமனையின் கண்காணிப்பாளர் டாக்டர் ஜி நரேந்திரநாத் ரெட்டி கூறியிருக்கிறார். கொரோனா தொற்று வந்த பின்னர் பெரிதும் அச்சப்பட்டு உயிரிழப்பவர்களுக்கு முன்னால் தைரியமாக இருந்து வெற்றியை தனதாக்கிய பாட்டிக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.