‘இந்தியப் பெருங்கடலை நாசமாக்கும் கச்சா எண்ணெய் கசிவு…!’

Read Time:6 Minute, 37 Second

மொரீஷியஸ் கடற்கரையில் விபத்தில் சிக்கி நிற்கும் கப்பல் ஒன்றிலிருந்து சுமார் ஆயிரம் டன் கச்சா எண்ணெய் கசிந்து இந்தியப் பெருங்கடலில் கலந்து இருக்கிறது.

எம்.வி.வகாஷியோ கப்பல் ஜூலை 25-ம் இந்தியப் பெருங்கடலில் இருக்கும் தீவில் பவளப்பாறையொன்றில் மோதி விபத்துக்குள் சிக்கியது. அப்போது, கப்பலில் சுமார் 4 ஆயிரம் டன் கச்சா எண்ணெய் இருந்து உள்ளது. விபத்து நேரிட்டதும் கச்சா எண்ணெய் கசிய தொடங்கியது. இது அப்பகுதியில் ஒரு சுற்றுசூழல் பேரழிவை ஏற்படுத்தியிருக்கிறது. ஜூலை 25-ம் தேதியில் இருந்து சுமார் ஆயிரம் டன் கச்சா எண்ணெய் கடலுக்குள் கசிந்திருப்பதாக செய்தி வெளியாகியிருக்கிறது.

விபத்தில் சிக்கியிருக்கும் கப்பலை உறுதியாக நிலை நிறுத்தவும், 3,000 டன் கச்சா எண்ணெயையும் வெளியேற்ற மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வி அடைந்துவிட்டன. கரடுமுரடான கடல் பகுதியில் ஆக்ரோசமான நிலை காணப்படுகிறது. இந்நிலையானது டேங்கரை மேலும் சிதைக்கக்கூடும் என்று உள்ளூர் அதிகாரிகள் எச்சரித்து உள்ளனர்.

எண்ணெய் கசிவு நடந்த இடம் மொரிஷியஸின் பாயிண்ட் டி எஸ்னியில் Pointe d’Esny பகுதியாகும். இங்கு மிகவும் அரிதான மற்றும் உள்ளூர் வனவிலங்குகளுக்கான சரணாலயங்கள் உள்ளது. பழமையான பாதுகாக்கப்பட்ட பவளப்பாறைகள், சதுப்புநில காடுகள் மற்றும் ஆபத்தான உயிரினங்களை கொண்ட ஒரு கடல் பூங்காவாகவும் இப்பகுதியானது உள்ளது. இங்கு எண்ணெய் கசிவு என்பது மிகப்பெரிய சுற்றுசூழல் பேரழிவை ஏற்படுத்தும் என வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.

மொரிஷியஸின் பலவீனமான கடலோர சுற்றுச்சூழல் அமைப்புக்கு முன்எப்போதும் இல்லாத வகையில் ஏற்பட்டுள்ள சேதம் அதன் பொருளாதாரத்தையும் மிகவும் பாதிக்கும் என்று நிபுணர்கள் எச்சரித்து உள்ளனர். மொரீஷியஸ் மக்கள் உணவு மற்றும் சுற்றுலா பொருளாதாரத்திற்காக கடலை முதன்மையாக நம்பி உள்ளனர். மொரீஷியஸ் இயற்கை பாதுகாப்பு வெற்றியாக அதன் நற்பெயரை தக்க வைத்துக் கொண்டுள்ளது; மேலும், இயற்கை ஆர்வலர்களுக்கான உலகளாவிய இடங்களில் ஒன்றாகவும் விழங்கி வருகிறது. உலகளாவிய சுற்றுச்சூழல் பதுகாப்பில் சவாலாகியிருக்கும் கடல் சுற்றுச்சூழல் அமைப்பை நிரந்தரமாக அழிக்கும் வகையில் இந்த கசிவு அச்சுறுத்துகிறது.

உள்ளூர் தன்னார்வலர்கள் எண்ணெய் கசடு பரவலை கட்டுப்படுத்த முயற்சிக்கிறார்கள். வைக்கோல், சாக்குகளைக் கொண்டு எண்ணெய் படலத்தை உறிஞ்சிவிடலாம் என்ற நினைப்பில் அவர்கள் செயல்படுகிறார்கள். இந்த அவநம்பிக்கையான முயற்சிகள் இதுவரையில் தோல்வியையே தழுவியிருக்கிறது. அடர்த்தியான கசடு வளர்ந்து பரவி கடல் மேற்பரப்பு, நீர்வாழ் வாழ்விடங்கள் மற்றும் தீவுக்கூட்டத்தில் உள்ள வெள்ளை மணல் கடற்கரைகளில் பரவியிருக்கிறது.

கடற்கரையெல்லாம் ஆயில் கலந்து அடர்கருப்பு நில ஆயில் காணப்படுகிறது. கடல்வாழ் உயிரினங்கள் இறந்து கிடக்கும் வீடியோக்களும், உயிருக்கு போராடும் வீடியோக்களும் வெளியாகியிருக்கிறது.

மொரிஷியஸ் நாட்டின் பிரதமர் பிரவிந்த் ஜுக்னாத் இந்த ஆயில் கசிவை “சுற்றுச்சூழல் அவசரநிலை” என்று அறிவித்து, சேதத்தை கட்டுப்படுத்த சர்வதேச நாடுகளின் உதவியை நாடியிருக்கிறார். பேரழில் இருந்து காப்பாற்ற உதவுவதற்காக அருகிலிருக்கும் ரீயூனியனில் தீவிலிருந்து ஒரு கடற்படைக் கப்பல், ராணுவ விமானம் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களை பிரான்ஸ் அனுப்பியிருக்கிறது.

மோசமான வானிலை முன்னறிவிப்புக்கு திட்டமிட மொரிஷிய பிரதமர் ஒரு நெருக்கடி குழு கூட்டத்தை கூட்டியிருக்கிறார். கப்பல் உடைந்தால் கடற்கரைக்கு ஏற்படக்கூடிய சேதம் நாட்டின் பொருளாதாரத்திற்கு பேரழிவு தரக்கூடும் என்று சூழலியல் வல்லுநர்கள் எச்சரித்து உள்ளனர். எண்ணெய் கசிந்துக்கொண்டிருக்கும் எம்.வி.வகாஷியோ கப்பல் நாகாஷிகி ஷிப்பிங் நிறுவனத்திற்கு சொந்தமானது, இது ஜப்பானிய போக்குவரத்து நிறுவனமான மிட்சுய் ஓ.எஸ்.கே லைன்ஸ் நிறுவனத்தால் இயக்கப்படுகிறது.

கப்பலை கட்டுக்குள் வைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டதாகவும், கரடுமுரடான கடல் சூழ்நிலை காரணமாக அது வெற்றிகரமாக இருக்கவில்லை என கப்பல் நிறுவனம் தெரிவித்து இருக்கிறது. இதற்கிடையே சுற்றுசூழலுக்கு நேரிட்ட பாதிப்புக்கு மன்னிப்பு கோருவதாக நாகாஷிகி ஷிப்பிங் நிறுவனம் தெரிவித்து உள்ளது. இருப்பினும் அந்நிறுவனத்திற்கு ரூ 5 பில்லியன் வரையில் அபராதம் விதிக்கப்படலாம் என கூறப்படுகிறது. இயற்கையின் போக்கில் நாம் ஏற்படுத்தும் தீங்கு நமக்கே பேரும் இழப்பாக மாறும் என்பது மறுக்க முடியாத உண்மையாகும்… மாற்றங்களை சரிசெய்யும் திறன் இயற்கையிடம் இருந்தாலும், கசிந்திருக்கும் எண்ணெய் கழிவுகளை சரிசெய்து இயல்புக்கு திரும்ப இயற்கை எவ்வளவு நாள் எடுக்கும் என தெரியவில்லை. எண்ணெய் கழிவுகளை விரைந்து அகற்ற மொரிஷியஸ் அரசு நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்பதே இயற்கை ஆர்வலர்களின் கோரிக்கையாக இருக்கிறது…