740 டன் அமோனியம் நைட்ரேட் சென்னையில் எப்படி…? மணலியில் ஆய்வுக்கு வலியுறுத்தப்படுவது ஏன்…? விளக்கம்

Read Time:7 Minute, 14 Second

லெபனான் நாட்டின் பெய்ரூட் துறைமுகத்தில் வைக்கப்பட்டு இருந்த அமோனியம் நைட்ரேட் வெடித்து பயங்கர விபத்தை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து, சென்னை மணலியில் சுங்க இலாகா கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டு இருந்த அமோனியம் நைட்ரேட் பற்றிய தகவல் அப்பகுதி மக்களுக்கு கிடைத்ததும் பெரும் அச்சம் நிலவியது.

இதனையடுத்து அமோனியம் நைட்ரேட்டை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதனையடுத்து தீயணைப்பு, சுற்றுச்சூழல், வெடிமருந்து பாதுகாப்பு துறை அதிகாரிகள் அமோனியம் நைட்ரேட் வைக்கப்பட்டிருந்த இடத்திற்கு நேரில் ஆய்வு செய்தனர். அதைத்தொடர்ந்து அங்குள்ள அமோனியம் நைட்ரேட்டை உடனடியாக அப்புறப்படுத்த சுங்கத்துறை அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்தனர்.

அதைத்தொடர்ந்து சுங்கத்துறை அதிகாரிகள் அமோனியம் நைட்ரேட்டை ஐதராபாத்துக்கு அனுப்பி வைக்க நடவடிக்கையை மேற்கொண்டனர். இந்நிலையில் இவ்வளவு அமோனியம் நைட்ரேட் எப்படி சென்னை வந்தது…? எங்கு ஸ்டோர் செய்யப்பட்டது… மணலியில் ஆய்வு மேற்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுவது ஏன்…? என்பது உள்ளிட்ட கேள்விகளுக்கான பதில்களை தெரிந்துக்கொள்வோம்:-

சென்னையில் ‘ஸ்டோர்’ செய்யப்பட்டது எப்படி…?

கரூர் மாவட்டத்தில் உள்ள Sri Amman Chemicals என்ற தனியார் நிறுவனத்துக்காக தென்கொரியாவில் இருந்து சென்னை துறைமுகத்துக்கு கடந்த 2015-ம் ஆண்டு இறக்குமதி செய்யப்பட்ட 740 டன் அமோனியம் நைட்ரேட் இறக்குமதி விதிமீறல்களால் சுங்க இலாகா அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் சென்னை மணலியில் உள்ள சரக்கு கன்டெய்னர் முனையத்தில் தங்கள் கட்டுப்பாட்டில் அவற்றை வைத்து இருந்தனர். சென்னையின் மத்தியப்பகுதியில் இருந்து சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவில் வைக்கப்பட்டு இருந்தது.

37 கன்டெய்னர்களில் தலா 20 டன்கள் என்பதன் அடிப்படையில் கெமிக்கல் கன்டெய்னர்களில் வைக்கப்பட்டு இருந்தது. இந்த அமோனியம் நைட்ரேட் மழைநீர் மற்றும் ஆவியானதால் 43 டன் குறைந்து உள்ளது.

கெமிக்கல் வைக்கப்பட்ட இடத்திற்கு அருகில் மக்கள் வசிக்கிறார்களா…?

இரண்டு கிலோமீட்டர் சுற்றளவில் குடியிருப்பு இடங்கள் இல்லை என்று சுங்கத்துறை ஆகஸ்ட் 6-ம் தேதி அறிக்கையில் தெரிவித்து இருக்கிறது. ஆனால், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் ஆய்வு அறிக்கையானது வேறு விதமாக இருக்கிறது. ஏறக்குறைய 7,000 மக்கள்தொகை கொண்ட மணாலி நியூ டவுன் கெமிக்கல் வைக்கப்பட்டிருக்கும் இடத்திலிருந்து சுமார் 700 மீ தொலைவில் உள்ளது என தெரிவித்து உள்ளது. இதேஎபோன்று 5000-த்திற்கும் அதிகமான மக்கள் வசிக்கும் சடயங்குப்பம் கிராமம் அவ்விடத்திலிருந்து சுமார் 1,500 மீ தொலைவில் உள்ளது என தெரிவித்து உள்ளது.

இது எவ்வளவு ஆபத்தானது?

அமோனியம் நைட்ரேட் என்பது ஒரு படிகம் போன்ற வெள்ளை திடமான பொருளாகும். இது உரங்களில் பயன்படுத்தப்படுகிறது. சுரங்க வெடிபொருளாக பயன்படுத்தப்படுகிறது. நைட்ரிக் அமிலத்துடன் அம்மோனியாவை எதிர்வினையாற்றுவதன் மூலம் இது தயாரிக்கப்படுகிறது. இதனை பாதுகாப்பாகவும் கையாளலாம் என தெரிவிக்கப்படுகிறது. வெப்பநிலை அதிகரிப்பு மற்றும் பொருத்தமான பாதுகாப்பின்மை ஆகியவை வெடிப்பை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

மணலியில் ஆய்வு மேற்கொள்ள வலியுறுத்தப்படுவது ஏன்…?

லெபனானின் பெய்ரூட்டில் ஏற்பட்ட அமோனியம் நைட்ரேட் வெடிப்பின் தாக்கம் சுமார் 240 கிலோமீட்டர் தொலைவில் உணரப்பட்டிருக்கிறது. மணலியில் அதிகமான கெமிக்கல் ஆலைகள் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அங்கு ஆய்வை மேற்கொள்ள வேண்டும் என்ற வலியுறுத்தல் எழுந்திருக்கிறது.

மயிலாப்பூர் எம்.எல்.ஏ. மற்றும் முன்னாள் டி.ஜி.பி. நடராஜ் இதுதொடர்பாக தி குயிண்ட் இணையதளத்திற்கு அளித்து உள்ள பேட்டியில், மணலி பல ரசாயன தொழில்களுக்கு சொந்தமான இடமாக இருப்பதால் இது ஒரு பெரிய ஆபத்தை ஏற்படுத்துகிறது. பாதுகாப்பு தணிக்கை, சமூக தணிக்கை மற்றும் வெளியேற்றும் பயிற்சிகள் அங்கு மேற்கொள்ளப்பட வேண்டும். எங்காவது ஒரு சிறிய பிரச்சியானது பெரும் சோகத்தினை ஏற்படுத்தக்கூடும் என எச்சரித்து இருக்கிறார்.

ஐதராபாத் கொண்டு செல்லப்பட்டது ஏன்…?

சென்னையில் இருந்த 697 டன் அமோனியம் நைட்ரேட்டும் கடந்த பிப்ரவரி மாதம் மின்னணு முறையில் ஏலம் விடப்பட்டு இருந்தது. இதனை தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்று ஏலத்துக்கு எடுத்தது. ஆனால், அதற்கான பணத்தை செலுத்தாததால், அதனை சென்னையில் இருந்து எடுத்து செல்லப்படாமல் மணலியில் உள்ள சரக்கு கன்டெய்னர் முனையத்திலேயே இருந்தது.

இந்நிலையில் சுங்கத்துறை அதிகாரிகள் அமோனியம் நைட்ரேட்டை ஐதராபாத்துக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுத்தனர். நேற்று (ஆகஸ்ட் 9) சுங்கத்துறை, வெடி மருந்து பாதுகாப்புத்துறை, தீயணைப்புத்துறை, காவல்துறை மற்றும் சுற்றுச்சூழல் அதிகாரிகள் கண்காணிப்பில் அமோனியம் நைட்ரேட்டை பாதுகாப்பாக அனுப்பும் பணி நடந்தது. 10 கன்டெய்னர் லாரிகள் 181 டன் அமோனியம் நைட்ரேட்டுடன் ஐதராபாத்துக்கு புறப்பட்டுள்ளது.

ஐதராபாத்திற்கு அருகே ரங்கா ரெட்டி மாவட்டத்தில் உள்ள அங்கிரெட்டி பள்ளி கிராமத்திற்கு கன்டெய்னர்கள் பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட்டது. எஞ்சியிருக்கும் 27 கன்டெய்னர்களும் ஓரிரு நாளில் கொண்டு செல்லப்படும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.