நீட் தேர்வு 2020: எதற்கெல்லாம் அனுமதி…? ஆடைக் கட்டுப்பாடுகள் என்னென்ன…?

Read Time:4 Minute, 41 Second

இளநிலை மருத்துவப் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான ‘நீட்’ தேர்வு தமிழகத்தில் உள்ள 14 நகரங்கள் உட்பட நாடு முழுவதும் 154 நகரங்களில் 3,842 மையங்களில் நாளை நடக்கிறது.

இந்த தேர்வை 15.97 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர். கொரோனா தொற்று காரணமாக அனைத்து தேர்வு மையங்களிலும் முழுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

தேர்வை நடத்தும் தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ), மாணவர்கள் எந்தெந்தப் பொருட்களை கொண்டு செல்லலாம், என்னென்ன ஆடைக் கட்டுப்பாடுகள் உள்ளன என்பன குறித்து சில வழிகாட்டு நெறிமுறைகளை அறிவிப்பாக வெளியிட்டு உள்ளது. அதனை தெரிந்துக்கொள்வோம்.

நீட் 2020 தேர்வுக்கு என்ன ஆவணங்களை எடுத்துச் செல்ல வேண்டும்?

  • நீட் தேர்வு அனுமதிச் சீட்டுடன் சுய அறிவிப்புப் படிவம்
  • புகைப்படம் (விண்ணப்பப் படிவத்தில் பதிவேற்றப்பட்ட அதே படம்)
  • செல்லத்தக்க புகைப்பட அடையாள அட்டை
  • மாற்றுத்திறனாளியாக இருந்தால் அதற்கான சான்றிதழ்

அனுமதிச் சீட்டில் தவறு இருந்தால் என்ன செய்ய வேண்டும்…?

ஏதேனும் பிழை ஏற்பட்டால் நீங்கள் உடனடியாக அதிகாரிகள் அல்லது என்.டி.ஏவை தொடர்பு கொள்ள வேண்டும். நீங்கள் அவர்களுக்கு [email protected]-ல் மின்னஞ்சல் செய்யலாம் அல்லது பின்வரும் உதவி எண்களை தொடர்புக்கொண்டு விபரத்தினை தெரிவிக்கலாம்.

உதவி எண்கள்: 8287471852 | 8178359845 | 9650173668 | 9599676953

ஆடைக் கட்டுப்பாடுகள் என்ன…?

 * அனைத்து மாணவர்களும் பேஸ் மாஸ்க் மற்றும் கையுறைகளை அணிவது கட்டாயமாகும்.

* மாணவர்கள் குறைவான உயரம் கொண்ட காலணிகளை அணியலாம். ஷூ உள்ளிட்ட மூடப்பட்ட காலணிகளுக்கு அனுமதி கிடையாது.

* லேசான அரைக்கை மற்றும் முழுக்கை ஆடைகளுக்கு அனுமதி கிடையாது.

* மதம் சார்ந்த அல்லது சமூகப் பழக்கவழக்கம் சார்ந்த குறிப்பிட்ட ஆடைகளை அணிந்திருக்கும் தேர்வர்கள், கட்டாயம் சோதனை செய்யப்படுவர். இதற்காக அவர்கள் சீக்கிரமாகவே தேர்வு அறைக்கு வரவேண்டியது அவசியமாகும்.

* தேர்வின்போது குளறுபடிகளைத் தவிர்க்க, தேர்வு மையத்திலேயே மாணவர்களுக்குப் புதிதாக முகக்கவசம் வழங்கப்படும். ஏற்கெனவே மாணவர்கள் அணிந்திருந்த மாஸ்கை கழற்றிவிட்டு, தேர்வு அறையில் அளிக்கப்படும் முகக்கவசத்தை அணிய வேண்டியது அவசியம்.

 * கனமான நகைகள், கைக்கடிகாரங்கள் மற்றும் வேறு எந்த அணியக்கூடிய பொருட்களும் அனுமதிக்கப்படாது.

 * மாணவர்கள் 50 மில்லி அளவில் சானிடைசர் கையில் வைத்துக்கொள்ளலாம்.  உட்பக்கம் தெளிவாக தெரியும் வகையிலான தண்ணீர் பாட்டில் வைத்துக்கொள்ளலாம்.

மாணவர்கள் தேர்வு அறைக்கு உள்ளே அனுமதிக்கப்படுவதற்கு முன்பு என்ன நெறிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும்?

  • அனுமதிச் சீட்டில் குறிப்பிடப்பட்டுள்ள நேரத்தில் மாணவர்கள் வர வேண்டும்.
  • அனைத்து மாணவர்களின் வெப்பநிலை சரிபார்க்கப்படும்
  • அறிகுறியற்ற மணவர்கள் மட்டுமே நுழைய அனுமதிக்கப்படுவார்கள்
  • மாணவர்கள் பாதுகாப்பான தூரத்தில் இருந்து ஆவணங்களை ஊழியர்களிடம் காட்ட வேண்டும்.

ஒரு தேர்வு அறையில்  எத்தனை மாணவர்கள் அமர்வார்கள்?

தேர்வு அரங்குகளுக்குள் சரியான சமூக தூரத்தை உறுதி செய்வதற்காக, ஒரு அறைக்கு மாணவர்களின் எண்ணிக்கை 24-ல் இருந்து 12 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

ஒரு மாணவருக்கு அதிக வெப்பநிலை பதிவானால் என்ன ஆகும்?

மாணவர் ஒரு தனிமைப்படுத்தப்பட்ட அறைக்கு அழைத்து செல்லப்படுவார். அவரின் வெப்பநிலை 15-20 நிமிடங்களுக்குப் பிறகு மீண்டும் சோதிக்கப்படும். அதுவும் சாதாரணமாக இல்லாவிட்டால், அவர்கள் தனிமையில் தேர்வு எடுக்க அனுமதிக்கப்படுவார்கள்.