மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மானம் நிராகரிக்கப்பட்டது ஏன்?

Read Time:4 Minute, 2 Second

மாநிலங்களவை துணை சபாநாயகர் ஹரிவன்ஷ் நாராயண் மீது எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை செப்டம்பர் 21 திங்களன்று மாநிலங்களவை சபாநாயகர் (தலைவர்) எம்.வெங்கையா நாயுடு நிராகரித்தார்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளில் ஹரிவன்ஷ் நாராயண் சிங் மீண்டும் அவையின் துணை சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டார். செப்டம்பர் 20-ம் தேதி அவையில் வேளாண் மசோதாக்கள் தொடர்பான வாக்களிப்பு நடந்தது. அப்போது, எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தங்கள் கோரிக்கையை ஏற்கவில்லை என்று கடும் அமளியில் ஈடுபட்டனர். துணை சபாநாயகர் சரியான நடைமுறையை பின்பற்றவில்லை என்றும் குற்றம் சாட்டினர். பின்னர், பல கட்சிகள் ஒன்றாக இணைந்து ஹரிவன்ஷ் நாராயண் சிங் மீது ஒரு நம்பிக்கையில்லா தீர்மானத்தை அவையில் முன்வைத்தன. இந்நிலையில் அவையில் கடும் அமளியில் ஈடுபட்ட எட்டு எதிர்க்கட்சி எம்.பி.க்களையும் வெங்கையா நாயுடு இடைநீக்கம் செய்தார்.

நம்பிக்கையில்லா தீர்மானம் என்றால் என்ன…?

நீங்கள் ஒரு நபரையும், அவரது பணியையும் நம்பவில்லை என்றால் அவரை அலுவலகத்திலிருந்து நீக்குவதற்கான திட்டத்தை முன்மொழிந்தீர்கள் என்றால் அது நம்பிக்கையில்லா தீர்மானம் என்று அழைக்கப்படுகிறது. மாநிலங்களவை தலைவர் இல்லாத நிலையில், சபைக்கு தலைமை தாங்கும் துணை சபாநாயகரை நீக்குவதற்கும் நம்பிக்கையில்லா தீர்மானம் அவையில் எடுக்கப்படுகிறது.

மாநிலங்களவையின் துணை சபாநாயகரின் பணி மற்றும் திறமை குறித்து அவநம்பிக்கையான நிலைமை இருந்தால், அவரை இந்த தீர்மானம் மூலம் பிற எம்.பி.க்களால் பணி நீக்கம் செய்ய முடியும். துணை சபாநாயகர் பதவியில் இருந்து நீக்கப்படுவதற்கான இந்த முன்மொழிவை சபையில் பெரும்பான்மை எம்.பி.க்கள் ஆதரவுடன் நிறைவேற்றப்பட வேண்டியது அவசியம்.

நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கான செயல்முறை என்ன…?

துணைத் சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர, 14 நாட்களுக்கு முன்னர் மாநிலங்களவையிடம் தெரிவிக்க வேண்டியது கட்டாயமாகும். இதில், கவனிக்கத்தக்க மற்றொரு விஷயம் என்னவென்றால் துணை சபாநாயகரை நீக்குவதற்கான முன்மொழிவு பரிசீலனையில் இருக்கும் வரையில் அவர் சபையின் நடவடிக்கைகளில் பங்கேற்க முடியாது.

நம்பிக்கையில்லா தீர்மானம் ஏன் நிராகரிக்கப்பட்டது…?

ஹரிவன்ஷ் நாராயண் சிங் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தை மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு நிராகரித்து உள்ளார். இதற்கு அவர் தெரிவித்துள்ள காரணம், தீர்மானம் சரியான வடிவத்தில் இல்லை. 14 நாட்களுக்கு முன்னதாக சபைக்கு தெரியப்படுத்த வேண்டும் என்ற விதியும் பின்பற்றப்படவில்லை. பிரிவு 90-ன் கீழ் இந்த திட்டம் ஏற்றுக்கொள்ள முடியாதது என்பதாகும். இந்திய அரசியலமைப்பின் பிரிவு 90 துணை சபாநாயகரை நீக்கி விடுப்பில் அனுப்பும் நடைமுறையை உள்ளடக்கியது. இந்த செயல்முறையை மேற்கோள் காட்டி, வெங்கய்ய நாயுடு இந்த தீர்மானத்தை ஏற்கவில்லை.