அயோத்தியில் 16-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பாபர் மசூதி, 1992-ம் ஆண்டு இடிக்கப்பட்டது.
இதுதொடர்பான வழக்கு விசாரணையானது 28 ஆண்டுகளுக்கு பின்னர் முடிவுக்கு வந்துள்ளது.
அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் யாருக்கு சொந்தமானது என்பதில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்து கிட்டத்தட்ட ஓராண்டை நெருங்கும் நேரத்தில் இந்த தீர்ப்பு வந்துள்ளது.
இந்த பாபர் மசூதியின் ஆரம்ப கால வரலாறும், இடிப்பு வழக்கும் கடந்து வந்த பாதையை பார்க்கலாம்.
1528: முகலாய பேரரசர் பாபரின் தளபதியான மிர் பாகியால் பாபர் மசூதி கட்டப்பட்டது.
1885- மகந்த் ரகுபர்தாஸ் என்பவர் பைசாபாத் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடுத்தார்.
அந்த வழக்கில் அவர் சர்ச்சைக்குரிய கட்டமைப்புக்கு வெளியே ஒரு விதானத்தை (மேற்கூரை போன்ற அமைப்பு) கட்டுவதற்கு அனுமதி கோரியிருந்தார். இந்த வழக்கு தள்ளுபடியானது.
1949 – சர்ச்சைக்குரிய கட்டமைப்புக்கு வெளியே மத்திய குவிமாடத்தில் ராம்லல்லா (குழந்தை ராமர்) சிலைகள் வைக்கப்பட்டன.
1950 – இந்து மகாசபாவின் உறுப்பினர் கோபால் சிங் விஷாரத், பைசாபாத் நீதிமன்றத்தில் சிவில் வழக்கு ஒன்றை தொடுத்தார். அதில் தடங்கல் இல்லாமல் ராம் லல்லா சிலை வழிபாட்டுக்கு அனுமதி கோரியிருந்தார். இதே போன்று பரமஹன்சா ராமச்சந்திரதாஸ் ஒரு வழக்கு தொடுத்து, தொடர்ந்து சிலைகளை வழிபட அனுமதி கேட்டார்.
1959 – நிர்மோஹி அகாரா ஒரு வழக்கு போட்டார். அதில் குறிப்பிட்ட இடத்தை உரிமை கோரினார்.
1961 – சன்னி மத்திய வக்பு வாரியம் சம்பந்தப்பட்ட இடத்தின் மீது உரிமை கோரி வழக்கு தொடுத்தது.
1986 – இந்து பக்தர்களுக்காக அந்த இடத்தை திறப்பதற்கு உள்ளூர் நீதிமன்றம் உத்தரவு போட்டது.
1989 – சர்ச்சைக்குரிய கட்டமைப்பில் அப்போதைய நிலை தொடர அலகாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
பாபர் மசூதி இடிப்பு
1992 டிசம்பர் 6- ஆயிரக்கணக்கான கரசேவகர்களால் பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இதையொட்டி 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.
அடையாளம் தெரியாத கர சேவகர்களுக்கு எதிராக ஒரு வழக்கும், பா.ஜ.க. தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்டோர், மசூதி இடிப்புக்கு முன் வகுப்புவாத பேச்சு பேசியதாக ஒரு வழக்கும் பதிவு செய்யப்பட்டது.
1993 அக்டோபர்- அத்வானி மற்றும் தலைவர்கள் மீது சி.பி.ஐ. கூட்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
2001 மே – அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி, பால் தாக்கரே மற்றும் பிறர் மீது சி.பி.ஐ. தனி நீதிமன்றம் வழக்கை கைவிட்டது.
2004 நவம்பர் – பா.ஜ.க. தலைவர்கள் மீதான வழக்கை தொழில்நுட்ப காரணங்களை காட்டி தனி நீதிமன்றம் கைவிட்டதை எதிர்த்து சி.பி.ஐ. தரப்பில், அலகாபாத் உயர்நீதிமன்ற லக்னோ கிளையில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
2010 மே – சி.பி.ஐ. மேல் முறையீட்டு வழக்கை, எந்த அடிப்படையும் இல்லை என கூறி அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னோ கிளை தள்ளுபடி செய்தது.
2010 செப்டம்பர் – சர்ச்சைக்குரிய இடத்தின் உரிமை பற்றிய தீர்ப்பை அலகாபாத் உயர்நீதிமன்றம் வழங்கியது. சன்னிவக்பு வாரியம், நிர்மோஹி அகாரா, ராம்லல்லா ஆகியோர் சர்ச்சைக்குரிய இடத்தை சமமாக பிரித்துக்கொள்ள வேண்டும் என தீர்ப்பு வழங்கப்பட்டது.
2011 பிப்ரவரி – பாபர் மசூதி இடிப்பு வழக்கில், உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தை சி.பி.ஐ. நாடியது.
2011 மே – தீர்ப்பை எதிர்த்து சம்பந்தப்பட்ட தரப்பினர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்தது.
2017 மார்ச் – பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அத்வானி உள்ளிட்ட தலைவர்களுக்கு எதிரான சதி குற்றச்சாட்டை மீண்டும் விசாரிக்க பரிசீலிக்கப்படும் என உச்சநீதிமன்றம் கூறியது. அயோத்தி பிரச்சினையை தீர்க்க புதிய முயற்சிகளையும் நீதிமன்றம் பரிந்துரை செய்தது.
2017 ஏப்ரல்- அத்வானி உள்ளிட்டோர் மீதான பாபர் மசூதி இடிப்பு வழக்கை மீண்டும் குறிப்பிட்ட கால கட்டத்திற்குள் விசாரிக்குமாறு லக்னோ சி.பி.ஐ. தனி நீதிமன்றத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
2019 நவம்பர் – அயோத்தியில் சர்ச்சைக்குரியதாக கருதப்பட்ட 2.77 ஏக்கர் நிலத்தை ராம் லல்லாவுக்கு உச்சநீதிமன்றம் வழங்கி தீர்ப்பு அளித்தது. முஸ்லிம்களுக்கு மசூதி கட்டிக்கொள்வதற்கு 5 ஏக்கர் மாற்று இடம் வழங்குமாறும் மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.
இடிப்பு வழக்கில் தீர்ப்பு
2020 ஆகஸ்டு – அயோத்தியில் ராமர்கோவில் கட்டுவதற்கு பிரதமர் மோடி பூமிபூஜை நடத்தினார். பாபர் மசூதி வழக்கில் லக்னோ சி.பி.ஐ. தனி நீதிமன்றம் விசாரணையை முடிக்க மேலும் ஒரு மாதம் அவகாசத்தை உச்சநீதிமன்றம் அளித்தது.
செப்டம்பர் 30- பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அத்வானி உள்ளிட்ட குற்றம்சுமத்தப்பட்ட அனைவரும் நிரபராதிகள் என கருதி, விடுதலை செய்து லக்னோ சி.பி.ஐ. தனி நீதிமன்றம் நீதிபதி எஸ்.கே. யாதவ் தீர்ப்பு வழங்கினார்.