இந்தியாவில் சராசரியாக நாளொன்றுக்கு 87 பாலியல் வன்கொடுமைகள்…

Read Time:3 Minute, 52 Second
Page Visited: 158
இந்தியாவில் சராசரியாக நாளொன்றுக்கு 87 பாலியல் வன்கொடுமைகள்…

உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த 20 வயது தலித் பெண் கடந்த செப்டம்பர் 14-ம் தேதி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, எலும்புகள் உடைக்கப்பட்டு, நாக்கும் அறுக்கப்பட்டு, கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார்.

உயிருக்குப் போராடிய அந்த பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, கால்கள் செயலிழந்த நிலையில் உயிருக்குப் போராடி செவ்வாய்கிழமை அன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த கொடிய சம்பவம் இந்தியா முழுவதும் கடும் கொந்தளிப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான அதிர்ச்சிகரமான தகவலை தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (என்.சி.ஆர்.பி) வெளியிட்டுள்ளது.

அதில், 2019 ஆம் ஆண்டில் இந்தியாவில் பெண்களுக்கு எதிராக 4,05,861 குற்றங்கள் பதிவாகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2019-ம் ஆண்டில் இந்தியாவில் ஒவ்வொரு நாளும் சராசரியாக 87 பாலியல் வன்கொடுமைகள் வழக்குகள் பதிவாகியுள்ளன. 2018 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடும்போது, பெண்களுக்கு எதிரான குற்றங்களின் விகிதம் 2019 ஆம் ஆண்டில் 7.3% உயர்ந்துள்ளது என்பதை என்சிஆர்பி தரவு காட்டுகிறது.

இதுபோன்ற 59,853 சம்பவங்களுடன் பெண்களுக்கு எதிராக அதிக எண்ணிக்கையிலான குற்றங்களை கொண்ட மாநிலங்களின் பட்டியலில் உத்தரபிரதேசம் முதலிடம் பிடித்துள்ளது.

மறுபுறம், அசாமில் பெண்களுக்கு எதிரான குற்றங்களின் எண்ணிக்கை அதிகரித்து இருக்கிறது.

“இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் பெரும்பாலான வழக்குகள் ‘கணவர் அல்லது அவரது உறவினர்களால் கொடுமை’ (30.9%) செய்யப்படுதல் உள்ளது. பின்னர் பெண்கள் மீதான தாக்குதல் (21.8%) வழக்குகள் உள்ளது. இதனையடுத்து பெண்களைக் கடத்தல் (17.9%) மற்றும் கற்பழிப்பு (7.9%) வழக்குகள் எண்ணிக்கை உள்ளது ”என என்.சி.ஆர்.பி அறிக்கை கூறியுள்ளது.

பாலியல் பாலாத்கார வழக்குகள் அதிகமாக பதிவான மாநிலமாக ராஜஸ்தான் உள்ளது. அங்கு, 5,997 வழக்குகள் பதிவாகியுள்ளன. இதற்கு அடுத்தப்படியாக உ.பி.யில் 3,065 வழக்குகள் பதிவாகியுள்ளன. 2,485 வழக்குகளுடன் அதிக எண்ணிக்கையிலான பாலியல் பலாத்காரங்கள் நடந்த மூன்றாவது மாநிலமாக மத்தியப் பிரதேசம் பட்டியலிடப்பட்டுள்ளது.

மேலும், என்.சி.ஆர்.பி தரவுகள் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் குறிப்பிடத்தக்க உயர்வை காட்டியுள்ளன. இதனை, 2018 உடன் ஒப்பிடும்போது 2019 இல் 4.5% அதிகரித்துள்ளது. 2019 ஆம் ஆண்டில் குழந்தைகளுக்கு எதிரான மொத்தம் 1.48 லட்சம் குற்றங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

0 0
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %