இந்தியாவில் பருவமழை தொடர்ச்சியாக 2-வது ஆண்டாக சராசரியை விட அதிகமாக பெய்துள்ளது…

Read Time:2 Minute, 30 Second

2020-ம் ஆண்டில் இந்தியாவின் பருவமழை தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டாக சராசரியை விட அதிகமாக பெய்துள்ளது என வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

இது, சுமார் 60 வருடங்களுக்கு பின்னர் மீண்டும் நடந்த நிகழ்வாகும்.

“அரிதாக, தொடர்ச்சியாக இரண்டு ஆண்டுகளாக சராசரி மழையைவிட அதிகமாக மழையை பெற்று வருகிறோம். இதற்கு முன்னதாக 1958 மற்றும் 1959 ஆம் ஆண்டுகளில் முதல் முறையாக தொடர்ச்சியாக சராசரியைவிட அதிகமான மழை பெய்திருக்கிறது ”என்று இந்திய வானிலை ஆய்வுத் துறையின் (ஐஎம்டி) மூத்த அதிகாரி கூறியிருக்கிறார்.

இந்தியாவின் 9 2.9 டிரில்லியன் பொருளாதாரத்தில் விவசாயம் 15% பங்கு கொண்டுள்ளது. ஆனால், மொத்த இந்திய மக்கள்தொகையில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் விவசாய பணிகளை சார்ந்தே உள்ளனர். தென்மேற்கு பருவமழை இந்தியாவின் ஆண்டு மழையின் 70 சதவீதத்தை வழங்குகிறது மற்றும் அரிசி, கோதுமை, கரும்பு மற்றும் எண்ணெய் வித்து போன்ற பயிர்களின் விளைச்சலை தீர்மானிக்கிறது.

இவ்வாண்டு சராசரிக்கு மேல் 9% மழைப்பொழிவு என்பது நீர்த்தேக்கங்களை நிரம்ப செய்திருக்கிறது. 1.3 பில்லியன் மக்கள் தொகை கொண்ட நாட்டில் நீர் பற்றாக்குறையை ஈடுகட்ட நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தியிருக்கிறது. மழைப்பொழிவு பருத்தி, பருப்பு வகைகள், சோயாபீன்ஸ் போன்ற அறுவடைக்கு தயாரான சில கோடைகால விதை பயிர்களை சேதப்படுத்தி உள்ளது. ஆனால், விவசாயிகள் குளிர்காலத்தில் சுண்டல், நெல் மற்றும் கோதுமை போன்றவற்றை பயிரிட உதவியிருக்கிறது.

குளிர்காலத்தில் விதைக்கப்பட்ட பயிர்கள் விவசாயிகளின் வருவாயை மேம்படுத்துவதோடு, கொரோனா வைரஸ் தொற்றுநோயால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள கிராமப்புற பொருளாதாரத்தை புதுப்பிக்க உதவ வேண்டும் என்று நம்பப்படுகிறது.