மீனாட்சி அம்மன் கோவிலை கட்டியது யார்…? கல்வெட்டுகள் சொல்வது என்ன…?

Read Time:5 Minute, 7 Second

தமிழகத்தில் உள்ள சைவ திருத்தலங்களில் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மிகவும் பழமையானது. இந்த கோவிலில் இருக்கும் சுந்தரேசுவரர் சுவாமி, சுயம்பு லிங்கமாக தோன்றியவர்.

மீனாட்சி அம்மன் கோவிலில் பல்வேறு இடங்களில் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. அதனை ஆய்வு செய்வதன் மூலம் கோவிலை பற்றிய முழுமையான வரலாற்றை தெரிந்து கொள்ள முடியும் என்று கோவில் நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி, தமிழக தொல்லியல்துறை முன்னாள் உதவி இயக்குனர் சாந்தலிங்கம் மூலம் அதனை ஆய்வு செய்து, அதன் முடிவுகளை புத்தகமாக நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதில், கோவில் பற்றிய பல்வேறு முக்கிய தகவல்கள் இடம்பெற்று உள்ளன.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இருந்த 400-க்கும் மேற்பட்ட கல்வெட்டுகளை தற்போது ஆய்வாளர்கள் படித்து கோவில் குறித்த பல வரலாற்று தகவல்களை தெரிவித்துள்ளனர்.

இவற்றில் 79 கல்வெட்டுகள் முழுமையானதாகவும், 23 கல்வெட்டுகளில் பெயர்கள் போன்றவையும் சுமார் 300 கல்வெட்டுகள் துண்டு துண்டானதாகவும் கிடைத்து உள்ளன. படிக்கத்தக்க வகையில் இருந்த 79 கல்வெட்டுகளில் 78 கல்வெட்டுகள் தமிழில் இருந்துள்ளது. ஒரேஒரு கல்வெட்டு கிரந்த எழுத்துகளை பயன்படுத்தி சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டுள்ளது. கோயிலில் இருந்த கம்பத்தடி மண்டபம் கட்டப்பட்டது தொடர்பான கல்வெட்டு தமிழிலும் தெலுங்கிலும் எழுதப்பட்டிருந்தது என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இப்போது இருக்கும் மீனாட்சி அம்மன் கோவிலை பொறுத்தவரையில், நாயக்கர் காலத்தில் எட்டப்பட்டது. ஆனால், பல நூறு ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நகரின் மையப்பகுதியில் கோவில் இருந்து வந்துள்ளது.


கி.பி. 1190 – 1216-ல் மதுரையை ஆண்ட பாண்டிய மன்னனான ஜடாவர்மன் குலசேகர பாண்டியனின் காலத்தில்தான் கற்கோவில் கட்டப்பட்டுள்ளது. அவருக்கு பின்வந்த இரண்டாம் மாறவர்மன் சுந்தரபாண்டியனால் கோவில் புதுப்பிக்கப்பட்டது கல்வெட்டுகளில் இருந்து தெரியவருகிறது” என்று சாந்தலிங்கம் தெரிவித்துள்ளார்.

7-ம் நூற்றாண்டில் மீனாட்சியம்மன் கோவில் செங்கல், மணல், சுண்ணாம்பு போன்ற உறுதியற்ற பொருட்களால் கட்டப்பட்டு இருந்ததாகவும், அது, இயற்கை சீற்றங்களால் சேதம் அடைந்துள்ளது என்றும் தெரியவந்துள்ளது. பின்னர் பல்வேறு பாண்டிய மன்னர்களாலும், விஜயநகர நாயக்க மன்னர்களாலும் கோவில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

இதில், சோழர்கள் பாண்டிய நாட்டை சுமார் 200 ஆண்டுகாலம் ஆட்சி செய்தபோதும் இக்கோவிலின் பால் எவ்வித அக்கறையும் காட்டாதது வியப்பாக உள்ளது.


1898-ம் ஆண்டுக்கு பின்னரே மீனாட்சி சுந்தரேஸ்வர் கோவில் என பெயர் பெற்றுள்ளது என்வும் சாந்தலிங்கம் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது கோவிலின் பிரதான தெய்வங்கள் மீனாட்சி – சுந்தரேஸ்வரர் என்று அழைக்கப்படுகினர். ஆனால், கோவிலில் கிடைத்த 13-ம் நூற்றாண்டு கல்வெட்டு ஒன்றின்படி, ஆரம்ப காலத்தில் கோவிலில் இருக்கும் தெய்வத்தின் பெயர் ‘திரு ஆலவாய் உடைய நாயனார்’, அம்மனின் பெயர் ‘திருக்காமக்கோட்டம் உடைய ஆளுடைய நாச்சியார்’ என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.
<hr>

கி.பி. 1752-ம் ஆண்டைச் சேர்ந்த ஒரு பாவை விளக்கில்தான் மீனாட்சி என்ற பெயர் முதன்முதலில் இடம்பெறுவதாகவும் சாந்தலிங்கம் சொல்கிறார்.

1898-ல்தான் மீனாட்சி – சுந்தரேஸ்வரர் என்ற பொறிப்பு ஒரு திருவாச்சி விளக்கில் இடம்பெற்றுள்ளது. “இந்த காலத்திற்கு முன்பாகவே குமரகுருபரர் பாடிய பிள்ளைத் தமிழ் மீனாட்சி அம்மன் பிள்ளைத் தமிழ் என்றுதான் அழைக்கப்படுகிறது.

ஆகவே, மீனாட்சி என்ற பெயர் விஜயநகர மன்னர்களின் காலத்தில் வந்திருக்கலாம். ஆனால், கல்வெட்டில் முதன்முதலாக கி.பி. 1752ல்தான் அந்தப் பெயர் காணக்கிடைக்கிறது” என்றும் சாந்தலிங்கம் கூறியிருக்கிறார்.