வரவு-செலவு கணக்குகளை வீடு, வீடாக சென்று வழங்கிய ஊராட்சி தலைவர்…

Read Time:3 Minute, 44 Second

நாகப்பட்டிணம் மாவட்டம் வேதாரண்யம் தாலுகா கருப்பம்புலம் ஊராட்சி தலைவர் சுப்புராமன்.

எம்.சி.ஏ. பட்டதாரியான இவர், இன்று செய்தித்தாள்களில் தன்னுடைய நேர்மையான பணிகளால் செய்தியாக வந்துக்கொண்டிருக்கிறார். கருப்பம்புலம் ஊராட்சியில் பொதுவாக தனிநபர் ஒருவர் கைக்காட்டுபவரே ஊராட்டி தலைவராகும் சூழ்நிலை இருந்தது. இதனை மாற்றும் விதமாக சுப்புராமன், 2020 தேர்தலில் போட்டியிட்டார். சுமார், 33 ஆண்டுகளுக்கு பின்னர் அங்கு ஊராட்சி தலைவருக்கான தேர்வு நடந்தது. போட்டியில் சுப்புராமன் வெற்றிப்பெற்று ஊராட்சி தலைவரானார்.

பொதுமக்கள் அவர் மீது வைத்த நம்பிக்கையானது வீண் போகவில்லை. அவர் ஊராட்சி தலைவர் ஆனதும் நலப்பணிகளை சிறப்பாக மேற்கொண்டு வருகிறார். இப்போது மற்றொரு பாராட்டத்தக்க நடவடிக்கையாக வரவு-செலவு கணக்குகளை வீடு, வீடாக சென்று மக்களுக்கும் தெரியபடுத்தி வருகிறார். தான் பதவியேற்றதில் இருந்து இன்று வரையில் 9 மாத வரவு- செலவு கணக்குகளை நோட்டீசாக அச்சடித்து ஊராட்சியில் உள்ள 1,640 வீடுகளுக்கும் வீடு, வீடாக சென்று வழங்கி வருகியிருக்கிறார்.

அதில் வரி வசூல் எவ்வளவு? மொத்த வரவு, இதுவரை செய்யப்பட்ட செலவு உள்பட அனைத்து விவரங்களும் இடம் பெற்று உள்ளது.

மேலும் ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் பணிபுரிபவர்கள், வணிக வளாகங்கள், அங்காடிக்கு வரும் பொதுமக்கள் ஆகியோருக்கும் இந்த நோட்டீசை வழங்கி வருகிறார். தான் பதவியேற்ற பிறகு ஊராட்சிக்கு சொந்தமான கட்டிடங்கள் பராமரிப்பு, குடிநீர் வினியோகம், மின்சார வினியோகம் ஆகியவை குறித்தும் அதில் அவர் கூறியிருக்கிறார். ஊராட்சியின் பொது இடத்தில் பொதுமக்கள் பார்வைக்காகவும் வைத்து உள்ளார்.

இதுகுறித்து ஊராட்சி தலைவர் சுப்புராமன் கூறுகையில், ஊராட்சியில் நடக்கும் வரவு-செலவு கணக்குகளை ஊர் மக்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்கிறார்.

அப்போதுதான் ஊராட்சி நிலவரம் மக்களுக்கு தெரிய வரும். ஆண்டுக்கு ஒருமுறை அதிகாரிகள் கணக்கை தணிக்கை செய்தாலும் தற்போது மக்கள் தணிக்கைக்கு வரவு-செலவு கணக்குகளை நோட்டீசாக அச்சடித்து வினியோகம் செய்து இருக்கிறேன் எனவும் குறிப்பிடுகிறார். இந்த ஊராட்சியின் வரவு-செலவு அறிக்கை சமூக வலைத்தளங்களிலும் பரவலாக வலம் வருகிறது. ஊராட்சி வரவு-செலவு கணக்குகளை மக்களுக்கு வெளியிட்ட கருப்பம்புலம் ஊராட்சி மன்ற தலைவர் சுப்புராமன் மற்றும் உறுப்பினர்களுக்கு அந்த ஊராட்சி மக்கள் வாழ்த்து, பாராட்டை தெரிவித்து வருகின்றனர்.

“கிராம சபை கூட்டத்தின் போது, விபரங்களை வழங்க எண்ணியிருந்தோம். ஆனால், கூட்டம் நடைபெறாததால் பொதுமக்களுக்கு வீடு, வீடாக கொண்டு சென்று நோட்டீசாக வழங்கியிருக்கிறோம்,” என்றும் கூறியிருக்கிறார் சுப்புராமன்.