‘சமூகச் சீரழிவுகளைப் பரப்பாதீர்கள்… அது, கொரோனாவை விட மோசமான பரவல்…’

Read Time:9 Minute, 1 Second

மிகவும் ஆபாசமான வசனங்கள், காட்சிகளுடன் ‘இரண்டாம் குத்து’ படத்தில் டீசர் வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பியிருக்கிறது. வெறுமனே ஒற்றைவரியில் சொல்லிவிடமால் ’ஆபாசமே அஸ்திவாரம்’ என்ற சூத்திரத்துடன் களமிறங்கியுள்ளார் இயக்குநர் சந்தோஷ் பி ஜெயக்குமார்.

இவர்தான் ஹரஹர மகாதேவகி, இருட்டு அறையில் முரட்டு குத்து போன்ற படங்களை இயக்கியிருக்கிறார். ஆபசமான படங்களையே எடுத்தவர் தற்போது, விமர்சனங்களுக்கு உள்ளாகியிருக்கிறார். திரையுலகில் முன்னணி இயக்குநர்களிடம் கண்டனங்களை வாங்கிக் மோதல் போக்கில் செல்கிறது.

ஹரஹர மகாதேவகி படம் வந்தபோது குறிப்பிட்ட மதத்தை அவமதிப்பதாக, ஆபாசங்களை நகைச்சுவையாக தருகிறார் என்று உச்சிக்கொட்டிய ஊடகங்களும் உள்ளது. “படம் ஆரம்பிக்கும்போதே, வயதுவந்தோருக்கான நகைச்சுவைப் படம் என்று அறிவித்துவிட்டதாலும் அதற்கேற்றபடி தணிக்கைச் சான்றிதழைப் பெற்றிருப்பதாலும் வசனங்களில் புகுந்து விளையாடியிருக்கிறார்கள்.” என பாராட்டியிருக்கிறது ஊடகம் ஒன்று. இப்படி ஆபாசங்களை காட்சியகப்படுத்துதல், வருவாய் ஈட்டுதல் வெறும் நகைச்சுவையாகிறது என்பது மிகவும் வேதனைக்குரியது என பலர் கருத்துக்களை தெரிவித்தாலும், இதனையும் கொண்டாடும் உள்ளங்களும் உள்ளது.

கே.எஸ். தங்கசாமி

தற்போது, ‘ராட்டினம்’, ‘எட்டுத்திக்கும் மதயானை’ படங்களின் இயக்குநர் கே.எஸ்.தங்கசாமி, இப்படத்திற்கு தனது கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்திருக்கிறார்.

இது தொடர்பாக தன் ஃபேஸ்புக் பதிவில் இயக்குநர் கே.எஸ்.தங்கசாமி கூறியதாவது:

”என் மொபைலில், ஒரு பத்திரிகையில் அவ்வப்போது அனுப்பப்படும் அறிவிப்பு ஒன்று வந்தது. வழக்கமான ஒன்றாக அதை நான் கடக்கவில்லை. ஏனென்றால் நான் மிகவும் நேசிக்கும் மரியாதைக்குரிய இயக்குநர் பாரதிராஜாவின் பெயரில் வந்திருந்தது. உடனே அந்தச் செய்தியைப் படித்தேன். உண்மையில் நான் இந்த அறிக்கையை சற்றும் எதிர்பார்க்கவில்லை, அதுவும் இயக்குநர் இமயத்திடமிருந்து!

நான் நினைத்ததை, என்னைப் போன்று தமிழகத்தில் எத்தனையோ பேர் நினைத்ததை, இம்மி பிசகாமல் அந்த அறிக்கை பிரதிபலித்து இருந்தது. அடுத்த சில மணிகளில் அந்த அறிக்கைக்கு எதிர்வினை ஆற்றி இருக்கும் ஒருவரின் இரு வரி வார்த்தைகளைப் படிக்க நேர்ந்தது. மிகவும் கொந்தளிப்பான மனநிலையை அடைந்தேன். சொல்லப்போனால் அந்த எண்ணமே என்னைச் சுற்றி சுற்றி வந்தது. அதன் விளைவே இந்தப் பதிவு.

சரி, அந்த அறிக்கையின் சாராம்சம் என்ன? “இரண்டாம் குத்து” என்று ஒரு படம், அதன் போஸ்டர்கள், டீஸர்கள் சமீபத்தில் வெளியிடப்பட்டன. அதைப் பற்றிப் பொதுவெளியில் பேசக் கூட அருவருப்பு அடையும் அளவுக்கு வக்கிரமாக இருந்தன. இப்படியும் இருப்பார்களா மனிதர்கள் என்ற அளவுக்கு எனக்கு நினைக்கத் தோன்றியது. இந்தப் படத்திற்கு திரையுலகம் சரியான எதிர்ப்பைப் பதிவு செய்யவில்லையோ என்ற கேள்வி எனக்குள் இருந்தது.

ஒருவேளை அவ்வாறு செய்வதே இந்தப் படத்திற்கு விளம்பரம் போல் ஆகிவிடலாம் என்பதால் அனைவரும் பேசாமல் இருந்து இருக்கலாம். பூனைக்கு யார் மணி கட்டுவது என்ற நிலையில் இயக்குநர் இமயமே தெரிவித்த கண்டனம் மிகச் சரியானதே. அதில் தெளிவாக இதுபோன்ற படங்களால் ஏற்படும் சமூகக் கூச்சத்தை, சீரழிவைப் பொதுவெளியில் பெண்கள் இழிவு செய்யப்படும் அபாயத்தைச் சுட்டிக்காட்டி இருந்தார்.

ஏற்கெனவே திரையுலகத்தை பற்றிய பல தவறான பிம்பங்கள் சமூகத்தில் இருக்கின்றன. அது போதாது என்று இந்தக் கரோனா நேரத்திலும் இது போன்ற படங்கள் ஏழரையைக் கூட்டுகின்றன. ஈவ்டீசிங் பிரச்சினைகளைச் சிறிது காலமாகத்தான் தமிழகம் சந்திக்காமல் இருந்து வருகிறது. இதுபோன்ற கீழ்த்தரமான படம் இளைஞர்களின் மனதில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்று யோசிக்க வேண்டாமா?

இயக்குநர் பாரதிராஜா, சந்தோஷ் பி ஜெயக்குமார்.

“விசாரணை”, “அறம்” போன்ற அற்புதமான படைப்புகள் வெற்றி பெறும் காலத்தில் இதுபோன்ற படங்கள் எதை நோக்கிக் கொண்டு செல்கின்றன என்று யோசித்துப் பாருங்கள். பாரதிராஜாவின் கோபத்தில் இருக்கும் நியாயம் புரியும்.

பாரதிராஜாவின் கண்டனத்துக்குப் பதில் தெரிவித்து இருந்தார் ‘இரண்டாம் குத்து’ கலைப் படைப்பின் இயக்குநர்! பாரதிராஜாவின் “டிக் டிக் டிக்” படத்தைக் குறிப்பிட்டு, கண் இப்போது கூசுகிறதோ? என்று எழுதி இருந்தார். இதுபோன்ற அரைவேக்காட்டுத்தனமான பதில்களைப் படித்தால் எரிச்சல்தான் வருகிறது. ‘டிக் டிக் டிக்’ படத்தில் என்ன ஆபாசத்தைப் பார்த்தார் என்று புரியவில்லை. ‘டிக் டிக் டிக்’ பட வில்லன் பெண்களின் உடல்களில் வைரங்களைக் கடத்துவார், கமல் எப்படி அதைக் கண்டறிகிறார் என்பது கதை.

ஒரே ஒரு பாட்டில் கதாநாயகிகள் நீச்சல் உடையில் தோன்றுவதைத் தவிர வேறு எந்த இடத்திலும் கவர்ச்சியான காட்சிகள் இருக்காது. சொல்லப்போனால் கதைக்குத் தேவைப்பட்டும்கூட அந்தப் படத்தில் எந்தக் காட்சியும் அப்படி வைக்கப்படவில்லை. படத்தின் பல இடங்களில் அதுபோன்ற காட்சிகளின் அவசியம் இருந்தும் பாரதிராஜா தவிர்த்து இருக்கிறார்.

மூன்று பெண்களின் நாகரிக வாழ்க்கையை எடுத்துக் காட்டுவது போன்ற ஒரு சீன்தான் அந்த நீச்சல் உடைக் காட்சி. அந்தக் காலகட்டத்தில் அதுபோன்ற வாழ்க்கை, பணக்காரப் பெண்களுக்கே சாத்தியக் குறைவானதுதான். எனவே இந்த மூன்று கதாநாயகிகளின் வாழ்க்கையைத் தனித்துக் காட்டுவதற்காக வைக்கப்பட்ட காட்சியாகத்தான் அந்த நீச்சல் உடை சீனை நான் பார்க்கிறேன். இதில் என்ன ஆபாசத்தைப் பார்த்தார் அந்த இயக்குநர் என்று புரியவில்லை.

சொல்ல வேண்டுமே என்று குறை சொல்லக்கூடாது. அதுவும் யாரைப் பார்த்து என்று நினைக்கையில் எனக்கு நிலைகொள்ளவில்லை. “வேதம் புதிது” போன்ற படத்தை எடுத்த பாரதிராஜாவோ, அதில் நடித்த சாருஹாசனோ வெறும் பணத்திற்காகவா அந்தப் படத்தில் உழைத்தார்கள்? பதில் சொல்ல இயலுமா “இருட்டு அறையில் முரட்டுக் குத்து” இயக்குநரே!

சாதிய, மத சமூகத்தைத் தாண்டியது மனித நேயம் என்பதைத் தன் படங்களில் உணர்த்தியவர் பாரதிராஜா. இயக்குநர் இமயம் என்ற பெயர் ஒன்றும் சும்மா வரவில்லை, அதன் பின்னால் இந்த சமூகத்தின் மேல் பாரதிராஜா வைத்திருக்கும் கோபம், அக்கறை, பரிவு அனைத்தும் இருக்கின்றன என்பதை மனதில் வையுங்கள்,

அனைத்துக் குழந்தைகளின் கைகளிலும் மொபைல் இருக்கிறது. இதுபோன்ற சமூகச் சீரழிவுகளைப் பரப்பாதீர்கள். அது கொரோனாவை விட மோசமான பரவல். வயது வந்த பிள்ளைகளை வைத்திருக்கும் பெற்றோர்களின் நெஞ்சில் நெருப்பை கொட்டாதீர்கள். இன்று ‘பரியேறும் பெருமாள்’ போன்ற அற்புதமான படம் வெளிவந்து ரசிகனின் மனதில் ஒட்டுமொத்தமாக மாற்றத்தை ஏற்படுத்த கூடிய, அதே நேரத்தில் வெற்றியும் பெறும் காலத்தில் இருக்கிறோம். அதை கீழே இழுக்காதீர்கள், “இரண்டாம் குத்தின்” இயக்குநரே!” என பதிவிட்டுள்ளார்.