மும்பையில் பிரபல ரிபப்ளிக் டிவி, ஃபக்த் மராத்தி, பாக்ஸ் சினிமா (Republic TV, Fakht Marathi, Box Cinema) ஆகிய சேனல்களில் டி.ஆர்.பி. ரேட்டிங் மோசடி நடந்து இருப்பதாக மும்பை போலீஸ் தெரிவித்துள்ளது.
இந்திய செய்தித் தொலைக்காட்சி துறையில் டி.ஆர்.பி. மோசடி தொடர்பான குற்றச்சாட்டுக்கள் தொடர்ந்து இருந்து வருகிறது.
தற்போது வெளியாகியிருக்கும் மோசடியில் ஈடுபட்டவர்கள் பொதுமக்களுக்கு பணம் கொடுத்து சில இடங்களில் டி.வி.யை அவர்கள் பார்த்தாலும், பார்க்காவிட்டாலும் ஆன் செய்து குறிப்பிட்ட சேனல்களை வைக்க சொல்லி இருக்கின்றனர் என் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில், ஒருபடி மேல் சென்றுள்ள ரிபப்ளிக் ஆங்கில தொலைக்காட்சி, ஆங்கில மொழி தெரியாத மக்கள் வசிக்கும் பகுதியிலும் பிரபலமாக இருந்துள்ளது. அதாவது, அங்கிருக்கும் மக்களை அணுகியிருக்கும் செய்தி தொலைக்காட்சியின் முகவர்கள், எப்போதுமே டிவியில் எங்களுடைய சேனலை ஆன் செய்து வைத்தால் ரூ. 400 முதல் ரூ. 700 வரையில் மாதம் தருகிறோம் என கூறி அப்படியே செய்துள்ளனர் என்பது அம்பலமாகியுள்ளது. டிஆர்பி என்றால் என்ன…? அதில் முதல் வரிசையில் முன்வர சேனல்கள் போட்டிக்கொள்வது ஏன்…? என்பதை தெரிந்துக்கொள்வோம்.
டிஆர்பி என்றால் என்ன…?
டிஆர்பி என்பது தொலைக்காட்சி மதிப்பீட்டு புள்ளிகளை (Television Rating Points) குறிக்கிறது. எந்த சேனலில், எந்த நேரத்தில், எந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியை மக்கள் அதிகம் பார்க்கிறார்கள் என்பதை அளவீடுவதாகும். எனவே, டிஆர்பி என்பது ஒரு சேனலில் பிரபலமாக உள்ள நிகழ்ச்சியை அளவிட உதவும் ஒரு கருவியாகும். மேலும், எந்த சேனல் அதிகபட்ச நேரத்திற்கு அதிக மக்களால் பார்க்கப்பட்டுள்ளது என்பதையும் வரிசைப்படுத்துகிறது.
டி.ஆர்.பி. முக்கியம் ஏன்…?
இதில் ஒரு எளிமையான சமன்பாடு என்னவென்றால்: TRP = அதிகமாக பார்வையாளார்கள் = அதிக வருவாய் என்பதாகும். அதிகமான பார்வையாளர்களை கொண்டிருக்கும் ஒரு நிகழ்ச்சியில் விளம்பரங்கள் மூலம் கிடைக்கும் வருவாய் அதிகரிக்கும். அதுபோக, எவ்வளவு மக்களால் ஒரு சேனல் பார்க்கப்படுகிறது என்பதும் அதனுடைய வருவாயை அதிகரிக்க செய்யும் காரணியமாகும். எனவேதான் இவ்வரிசையில் அதிகமான புள்ளிகளை பெற்று முதலிடம் பிடிக்க வேண்டும் என்ற போட்டியில் ஒவ்வொரு தனியார் சேனல்களும் ஓடிக்கொண்டிருக்கின்றன.
இந்தியாவில் டி.வி. சேனல்களில் ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகளை பார்க்கும் பார்வையாளர்களின் எண்ணிக்கையை வைத்து டி.ஆர்.பி. ரேட்டிங்கை ஒளிபரப்பு பார்வையாளர்கள் ஆராய்ச்சி கவுன்சில் (பி.ஏ.ஆர்.சி.) கணக்கிட்டு வருகிறது. மும்பையில் சேனல்களில் டி.ஆர்.பி.யை கணக்கிட 2 ஆயிரம் பாரோ மீட்டர்கள் வைக்கப்பட்டு உள்ளன. இதை கண்காணிக்கும் பணிக்காக ஹன்சா என்ற நிறுவனம் பி.ஏ.ஆர்.சி.யால் நியமிக்கப்பட்டு உள்ளது. தற்போது மோசடி நிகழ்ந்தது தொடர்பாக ஹன்சா நிறுவனம் புகார் அளித்து உள்ளது. இதுதொடர்பாக மும்பை போலீஸ் விசாரித்தபோது அடுக்கடுக்கான மோசடி தகவல்கள் வெளியகியிருக்கிறது.
இந்த மோசடி தொடர்பாக பி.ஏ.ஆர்.சி. ஊழியர்களிடமும் விசாரணை நடத்தப்படும் என மும்பை போலீஸ் தெரிவித்து இருக்கிறது. கைது நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.