அமெரிக்க தேர்தல்: கருகலைப்பை எதிர்க்கும் டிரம்ப்…

Read Time:4 Minute, 36 Second

அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல் 2020 நவம்பர் 3-ம் தேதி நடைபெற உள்ளது.

வெள்ளை மாளிகையில் குடியேறுவதற்கான போட்டி விறுவிறுப்பாக செல்கிறது. 2020 அமெரிக்க பொதுத் தேர்தலின் முடிவு, உலகம் முழுக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் அதிமுக்கியமாக கவனிக்கப்பட்டு வருகிறது. தேர்தலில் தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப் குடியரசு கட்சி சார்பில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி வேட்பாளராக ஜோபிடன் களம் இறங்கியிருக்கிறார். இருவரும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். பல்வேறு பிரச்சினைகளை கொண்டு அங்கு இருவருக்கும் இடையே விவாதம் நடைபெற்று வருகிறது.

அமெரிக்காவில் கருகலைப்பு சட்டமும் இந்த தேர்தலில் முக்கிய காரணியாக அமைந்திருக்கிறது. டொனால்டு டிரம்பின் குடியரசு கட்சி கருகலைப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறது.

அமெரிக்காவில் 1973-ம் ஆண்டுக்கு முன்னர் பெண்கள் தங்களின் கருவை கலைப்பது சட்டவிரோத செயலாக பார்க்கப்பட்டது. இதை எதிர்த்து பெண் உரிமை ஆர்வலர்கள் பல ஆண்டுகளாக போராட்டம் நடத்தினர். இதனால் கடந்த 1973-ம் ஆண்டு அந்நாட்டு உச்சநீதிமன்றம் கருக்கலைப்பை சட்டப்பூர்வமாக்கி வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை வழங்கியது.

அதன்படி அமெரிக்காவின் அனைத்து மாகாணங்களிலும் கருக்கலைப்பு செய்வதற்கு சட்டப்பூர்வ அனுமதி இருக்கிறது. ஆனால், கடந்த 2016-ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட டிரம்ப், கருக்கலைப்பு செய்யும் பெண்களுக்கு தண்டனை வழங்க வேண்டும் என பிரசாரம் செய்தார். இதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பின. எனினும் டிரம்ப் தேர்தலில் வெற்றி பெற்று அதிபர் ஆனார்.

அதனை தொடர்ந்து குடியரசு கட்சியினர் கவர்னர்களாக இருக்கும் மாகாணங்களில் கருக்கலைப்புக்கு கடுமையான கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டன. அமெரிக்காவில் 16-க்கும் அதிகமான மாகாணங்களில் கருக்கலைப்புக்கு எதிராக கடும் கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன. கர்ப்ப காலத்தில் தாய்க்கு ஆபத்து நேரிட்டாலோ அல்லது பாலியல் பலாத்காரத்தின் மூலம் கர்ப்பமடைந்தாலோ, தவறான உறவின் மூலம் கருத்தரித்தாலோ மட்டுமே கருக்கலைப்பு செய்ய முடியும்.

மேற்கூறிய காரணங்கள் தவிர வேறு எதற்காக கருக் கலைப்பு செய்தாலும் அது தண்டனைக்குரிய குற்றமாகும். கருக்கலைப்பு செய்யும் டாக்டருக்கு 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும். அதே சமயம் கருக்கலைப்பில் ஈடுபடும் பெண் குற்றவாளியாக கருதப்படமாட்டார் என சமீபத்தில் அலபாமா மாகாணத்தில் சட்டம் கொண்டுவரப்பட்டது. கருக்கலைப்புக்கு எதிராக மசோதா நிறைவேற்றப்பட்டு இருப்பது பெண் உரிமை ஆர்வலர்கள் மற்றும் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. தற்போதைய தேர்தலில் இவ்விவகாரமும் முக்கிய பிரச்சினையாக உள்ளது.

மியாமியில் சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற டவுன்ஹால் நிகழ்ச்சியில் கருகலைப்பு விவகாரம் தொடர்பாக டொனால்டு டிரம்ப் நேரடியாக பதிலளிப்பதை தவிர்த்துவிட்டார். “நான் நியமித்துள்ள உச்சநீதிமன்ற நீதிபதி ஒரு நல்ல முடிவை எடுப்பார் என்று நம்புகிறேன்” எனக் கூறிய டொனால்டு டிரம்ப் இவ்விவகாரம் தொடர்பாக நான் நீதிபதியிடம் பேசவில்லை என்றார். அமெரிக்காவில் மத்திய, மாகாண அரசுகளின் சட்ட பிரச்சினைகள் தொடர்பாக உச்சநீதிமன்ற தீர்ப்பே இறுதியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.