இந்தியா – அமெரிக்கா கடற்படைகளின் இருதரப்பு கூட்டு பயிற்சியாக மலபார் பயிற்சி கடந்த 1992-ம் ஆண்டு தொடங்கியது. கடந்த 2015-ம் ஆண்டு இதில் ஜப்பான் தன்னை இணைத்து கொண்டது. ஆண்டு தோறும் நடத்தப்படும் இந்த கூட்டு பயிற்சி கடந்த 2018 – ம் ஆண்டில் பிலிப்பைன்ஸ் கடல் பகுதியில் நடந்தது. 2019-ம் ஆண்டு ஜப்பானில் நடந்தது.
இந்தாண்டு இறுதியில் மலபார் கூட்டு பயிற்சி வங்க கடல் மற்றும் அரபிக் கடல் பகுதயில் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடற்சார் பாதுகாப்பில், மற்ற நாடுகளின் ஒத்துழைப்பு அதிகரிக்கவும், ஆஸ்திரேலியாவுடனான ராணுவ ஒத்துழைப்பை அதிகரிக்கவும் இந்தியா விரும்பியதால் இந்தாண்டு மலபார் கூட்டு பயிற்சியில் ஆஸ்திரேலிய கடற்படையும் இணைகிறது.
கொரோனா தொற்று காரணமாக, இந்தாண்டு கூட்டு பயிற்சியை கடலில் தொடர்பில்லா முறையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த கூட்டு பயற்சி, பங்கு பெறும் நாடுகள் இடையேயான ஒருங்கிணைப்பை வலுப்படுத்தும். இந்தாண்டு மலபார் பயிற்சியில் கலந்து கொள்ளும் நாடுகள், கடற்சார் பாதுகாப்பையும் அதிகரிக்கும். இந்தோ-பசிபிக் பகுதியில் சர்வதேச விதிமுறைகள்படி, திறந்தவெளி போக்குவரத்துக்கும் கூட்டாக ஆதரவு தெரிவிக்கும்.
குறிப்பிடத்தக்க வகையில் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் மற்றும் இந்தியா ஆகிய நான்கு நாடுகளும் குவாட் குழுவில் இடம்பெறுகின்றன, இது சீனாவின் ஆதிகத்திற்கு செக் வைப்பதாக அமைகிறது. இந்நிலையில் இந்நகர்வுகளை கவனித்து வருவதாக சீனா தெரிவித்துள்ளது.