இந்தியாவின் கொரோனா தடுப்பூசி 3-ம் கட்ட சோதனைக்கு அனுமதி…

Read Time:2 Minute, 12 Second

கொரோனா வைரஸ் தொற்றை தடுத்து நிறுத்துவதற்காக ஐதராபாத்தை சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுடன் இணைந்து கோவேக்சின் என்ற தடுப்பூசியை உருவாக்கி உள்ளது.

இதை மனிதர்களுக்கு செலுத்தி பார்க்கும் 2-ம் கட்ட சோதனை நடைபெற்று வந்தது. இந்நிலையில் 3-ம் கட்ட பரிசோதனைக்கு இந்திய மருத்துகள் கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதியை வழங்கியுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. விலங்குகளிடம் பரிசோதனை செய்தபோது கிடைத்த தரவுகள், மனிதர்களிடம் ஒன்றாவது மற்றும் இரண்டாவது கட்ட பரிசோதனையில் கிடைத்த தர்வுகளை பகுப்பாய்வு செய்து 3-ம் கட்ட ஆய்வுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டு உள்ளது.

3-ம் கட்ட பரிசோதனைக்கு 25,000 க்கும் மேற்பட்டோர் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், அவர்களுக்கு 28 நாட்கள் இடைவெளியில் பரிசோதனை தடுப்பூசி வழங்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. கோவாக்சின் சோதனைகளின் ஆரம்ப முடிவுகள் நம்பிக்கைக்குரிய முடிவுகளை கொண்டிருப்பதாக தெரிகிறது.

சீனாவில் தோன்றி உலக நாடுகளையெல்லாம் கதிகலங்க வைத்துவரும் கொரோனா வைரசுக்கு எதிராக உலகின் முன்னணி நாடுகள் பலவும் தடுப்பூசிகளை உருவாக்கி, அவற்றை மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதிக்கும் சோதனைகளை முழுவீச்சில் நடத்தி வருகின்றன. பிற நாட்டு தடுப்பூசி சோதனையில் மனிதர்களுக்கு பக்கவிளைவுகள் ஏற்படுவதாக செய்தி வெளியாகும் நிலையில், இந்தியாவில் குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக தடுப்பூசி சோதனை வெற்றிகரமாக முன்நகர்ந்து செல்வது மகிழ்ச்சிக்குரியது.