இந்தியாவின் பாதுகாப்பில் முக்கிய மைல் கல்…! ‘நாக்’ ஏவுகணை சோதனை வெற்றி

Read Time:1 Minute, 54 Second

இந்தியாவின் பாதுகாப்பில் முக்கிய மைல் கல்லாக ‘நாக்’ ஏவுகணை இறுதிக்கட்ட சோதனை வெற்றி பெற்றிருக்கிறது.

‘நாக்’ பீரங்கி எதிர்ப்பு ஏவுகணைகளை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டி.ஆர்.டி.ஓ.) உருவாக்கி பரிசோதித்து வந்தது. இந்த ஏவுகணை பகலிலும், இரவிலும் எதிரிகளின் பீரங்கிகளையும், கவச வாகனங்களையும் தாக்கி அழிக்கும் வல்லமை கொண்டது. இந்த ஏவுகணையின் இறுதிக்கட்ட சோதனை, ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பொக்ரான் பாலைவனத்தில் 22-ம் தேதி காலை 6.45 மணிக்கு நடைபெற்றது.

ஏவுகணை நிர்ணயிக்கப்பட்டிருந்த இலக்கை துல்லியமாக தாக்கி அழித்தது. இதனால் சோதனை வெற்றிகரமாக முடிந்துள்ளது. நாக் ஏவுகணையின் கடைசி சோதனையும் வெற்றிகரமாக முடிந்து விட்டதால் இனி அது உற்பத்தி கட்டத்திற்கு செல்லும். இந்திய ராணுவத்தில் முறைப்படி சேர்க்கப்படும். எல்லையில் பதற்றமான சூழல் நிலவுகிற தருணத்தில், முக்கிய இடங்களில் நிறுத்துவதற்கு ஏற்ற ஏவுகணை ‘நாக்’ ஏவுகணை ஆகும். எனவே, இது இந்தியாவின் பாதுகாப்பில் முக்கிய மைல் கல்லாக பார்க்கப்படுகிறது.

இந்த ‘நாக்’ ஏவுகணைகளை ஐதராபாத்தில் உள்ள பொதுத்துறை நிறுவனமான பாரத் டைனமிக்ஸ் நிறுவனம் உற்பத்தி செய்யும் எனக் கூறப்படுகிறது. இதே போன்று இந்த ஏவுகணையை செலுத்தும் சாதனத்தை மேடக்கில் உள்ள ஆயுத தொழிற்சாலை தயாரிக்கும்.