‘பை-பைபிளஸ்டிக் பேக்ஸ்’ பிளாஸ்டிக் பை ஒழிப்பு சகோதரிகள்…

Read Time:3 Minute, 38 Second

உலகிலேயே அதிக பிளாஸ்டிக் கழிவுகளை கொண்ட இரண்டாவது நகரம் இந்தோனேஷியாவின் பாலி நகரமாகும். கடல் தான் உள்வாங்கிய பிளாஸ்டிக் குப்பைகளை கரையோரம் கொண்டு வந்து துப்பிவிட்டுச்செல்லும் பகுதியென்றே சொல்லலாம். 1700-க்கும் அதிகமான தீவுகளை கொண்ட நகரம் பாலி நகரை சேர்ந்த சகோதரிகளான மெலட்டி விஜ்சென் மற்றும் இசபெல் விஜ்சென் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றுவதில் அயராமல் பணியாற்றி வருகின்றனர்.

12 மற்றும் 10 வயதிலேயே சுற்றுசூழல் பாதுகாப்பு மீது உந்துதல் கொண்ட சிறுமிகளின் சக்திக்கு ஏற்ப செய்யக்கூடிய காரியம், பிளாஸ்டிக் குப்பைகளை ஒழிப்பதே ஆகும்.

எதையும் தனியாக செய்வது பலனளிக்காது என்பதால் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகளுக்கு விடைகொடுப்போம் என்ற முழக்கத்துடன் ‘பை-பைபிளஸ்டிக் பேக்ஸ்’ என்ற அமைப்பை தொடங்கி பிரசாரம் மேற்கொண்டனர். பல பள்ளிகளுக்கு சென்று மாணவர்களிடம் உரையாடி பிளாஸ்டிக் தீமைகளை எடுத்துரைத்தனர். இதன்விளைவாக ஆயிரக்கணக்கான பள்ளி மாணவர்களின் ஆதரவை பெற்றனர். முதல் கட்டமாக பிளாஸ்டிக் பைகளை தவிர்க்க அரசு உத்திரவிட வேண்டும் என்ற கோரிக்கையை வைத்து கையெழுத்து இயக்கம் நடத்தினார்கள்.

10 லட்சம் கையெழுத்துக்கள் பெற்று அதை பாலியின் ஆளுநரிடம் சமர்ப்பித்தார்கள். ஆனாலும் பயனளிக்கவில்லை. இந்நிலையில் இந்தியாவிற்கு பள்ளி மூலம் சுற்றுப் பயணம் வந்தார்கள்.
இந்திய மண் காட்டிய வழி அவர்கள் மகாத்மா காந்தியின் இல்லத்திற்கு சென்றார்கள். அவர்களை காந்தியின் வாழ்க்கைமுறையும், போராட்ட குணமும் அவர்களைமிகவும் ஈர்த்தன. அதன் விளைவாக ஊர்திரும்பியதும் உடனடியாக பிளாஸ்டிக்பைகளுக்குத் தடை செய்யக்கோரி, அவர்கள் பள்ளியிலேயே உண்ணாவிரதம் மேற்கொண்டார்கள்.

இதனையடுத்து சிறுமிகளை நேரில் அழைத்து பேசிய ஆளுநர், அவர்களுடைய கோரிக்கையை ஏற்று பாலி நகரில் பிளாஸ்டிக் தடைக்கு உத்தவிட்டார். தொடர்ந்து சகோதரிகள் தங்களுடைய போராட்டத்தை பல்வேறு திசைகளுக்கு கொண்டு செல்கிறார்கள். களத்திலும் பிளாஸ்டிக் கழிவுகளை அப்புறப்படுத்தும் பணியிலும் ஸ்திரம் காட்டுகின்றனர். உலகில் பல்வேறு விருதுகளை பெற்று வரும் தங்களை இந்தப் பாதையில் முழுமையாக போராட ஈர்த்தவர் மகாத்மா காந்தி என் கின்றனர் அந்த சகோதரிகள்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த நடவடிக்கைகள் பெரும்பாலும் மிக மெதுவாகவே உள்ளது எனக் கூறும் சகோதரிகள் இளைஞர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்துகின்றனர். கடற்கரைகள் மற்றும் கோயில்களுக்கு புகழ் பெற்ற வெப்பமண்டல தீவில் வளர்ந்த அவர்கள் எல்லா இடங்களிலும் உள்ள பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றுவதில் ஆர்வம் காட்டுகின்றனர்.